தம்முடைய மகன் தமக்குக் கிடைத்த வரம் என்றும் அவரே தமது பலம் என்றும் கருதுகிறார் மகனது ஆதரவுடன் பலவீனமடைந்த இதயத்தைப் பலப்படுத்தியுள்ள திரு கோபாலன் ராமசாமி, 66.
தம் மகனின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க எதுவும் செய்யலாம் என்று நினைக்கும் பாசத் தந்தையான திரு கோபாலன், துடிப்பான, துள்ளலான தந்தையாகத் தம்மைப் பார்த்த மகன், தாம் உடல்நலம் குன்றி சோர்வுடன் பார்த்தபோது கலங்கிப்போனதை நினைவுகூர்ந்தார்.
“என் தந்தைதான் எனக்கு ‘சூப்பர் ஹீரோ’. அவரை உடல்நலிவுற்ற நிலையில் பார்ப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்நிலையிலிருந்து மீண்டுவர என்னால் இயன்றவரை ஆதரவளிக்க வேண்டும் என முடிவெடுத்தேன்,” என்றார் அவருடைய மகன் திரு ராகவேந்திரன்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வழக்கம்போல காலை உணவருந்திய திரு கோபாலனுக்குத் திடீரெனக் கடுமையான சோர்வு ஏற்பட்டது; அளவுக்கதிகமாக வியர்த்துக்கொட்டியது. இருப்பினும், பணிக்குச் செல்ல முடிவெடுத்து பேருந்து நிறுத்தம்வரை சென்ற அவர், அறிகுறிகள் மோசமடைவதை உணர்ந்தார்.
கைப்பேசி மூலம் அவசர உதவிக்கு அழைத்த அவர், அதன்பின் தம் மகனையும் அழைத்து நிலைமையைக் கூறினார்.
“அவசர உதவி வந்து சேரும் முன்னரே அங்கு வந்து நின்ற என் மகன், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை, தொடர்ந்த மருத்துவமனை வாசம் என அனைத்துக்கும் துணையாக இருந்தார்,” என்றார் திரு கோபாலன். அவருக்கு இதயக் குழாய்களில் மூன்று அடைப்புகள் இருந்ததால் அவற்றைச் சரிசெய்ய மூன்று ‘ஸ்டென்டுகள்’ பொருத்தப்பட்டன.
அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய திரு கோபாலன், தம் மகனுக்கு அவர் விருப்பப்படியே திருமணம் செய்து வைத்தது, மீண்டும் பணிக்குத் திரும்பியது என வாழ்க்கை மீண்டும் புத்துயிர் பெற்றதாக நினைத்தார். கெடுவாய்ப்பாக அடுத்த ஆண்டே மீண்டும் அவருக்கு உடல்நலம் குன்றியது.
ஏறத்தாழ 45 ஆண்டுகள் தாதிமைப் பணியில் ஈடுபட்ட திரு கோபாலனுக்கு, ஒவ்வோர் அடியெடுத்து வைப்பதும் சிரமமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஒன்றரை மாதம் மருத்துவமனை வாசம்.
கடந்த முறையே கலங்கிய மகன், இம்முறை முழுவதுமாக நொறுங்கியதை உணர்ந்ததாக திரு கோபாலன் சொன்னார்.
“என் மனைவி கருவுற்றிருந்த காலத்தில் என் மகனுக்காக நிறைய பாடுவேன். என் மகனை முதன்முதலில் பார்க்கச் சென்றபோது உறங்கிக்கொண்டிருந்தார். அவரை நான் ‘அப்பா’ என்றழைத்தேன். என் குரலைக் கண்டுகொண்டதுபோல, உடனடியாகக் கண்விழித்து அழுதார். இம்முறை அறுவை சிகிச்சை காரணமாகக் கழுத்தில் குழாய் பொருத்தப்பட்டு பேசாமல் இருந்த நான், மீண்டும் குணமடைந்து பேசியபோது குரலுடைந்து அழுதுவிட்டார். நான் முதல் நாள் கண்ட அதே அன்பு மாறாமலிருப்பதை உணர்ந்தேன்,” என்றார் திரு கோபாலன்.
“என் தந்தைக்குத் தீய பழக்கங்கள் ஏதுமில்லை. அவரை அவ்வாறு பார்ப்பதற்கு நான் தயாராகவே இல்லை,” என்ற திரு ராகவேந்திரன், அவரை மீட்டு, துடிப்புடன் செயல்படவைக்க வேண்டும் என முடிவெடுத்தார்.
குடும்பத்தினரின் ஆதரவுடன் செயின்ட் லூக்ஸ் மையத்தில் இணைந்து உடற்பயிற்சி, உடலியக்கச் சிகிச்சை, ‘ஸும்பா’ ஆகிய பயிற்சிகளில் ஈடுபட்ட திரு கோபாலன், தற்போது முழுவதுமாக இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளார்.
நீண்ட காலம் எடுத்துக்கொண்டாலும் அவர் முன்பைவிடத் துடிப்புடன் உள்ளார் என்றும் அதனையே தான் விரும்பினேன் என்றும் திரு ராகவேந்திரன் கூறினார்.
“கோமா நிலைக்குச் சென்று மீண்ட பயணத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது, ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தால் எவ்வித சிரமத்தையும் கடந்து வரலாம் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது,” என்றார் திரு கோபாலன்.
“என் மகன் எனக்கு வரம். எனது ‘கடவுள்’ என்றே சொல்லலாம். அவர் உடனிருந்தால் எதிலிருந்தும் மீண்டுவரலாம்,” என்றும் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இந்த அன்புத் தந்தை.

