சொற்களம் 2026: வாகை சூடிய கிரசெண்ட் பெண்கள் பள்ளி

சொற்களம் 2026: வாகை சூடிய கிரசெண்ட் பெண்கள் பள்ளி

3 mins read
b2d64dc6-89ea-40a5-b52e-32dd4dadb4ab
வாகை சூடிய கிரசெண்ட் பெண்கள் பள்ளி மாணவியர் குழு. - படம்: சாதனா சுரே‌ஷ்

‘இணையம் இல்லாவிட்டால் இதயம் நொறுங்குவோர் இளையர்கள்’. ‘தகவல் அறிவதே இளையர்களின் அரண்’.

இதுபோன்று மாணவர்கள் முன்வைத்த பல சுவாரசியமான கருத்துகளுடன் ‘சொற்களம் 2026’ இறுதிப்போட்டி களைகட்டியது.

‘இன்றைய இளையர்கள் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள்’ எனும் தலைப்பில் ஒட்டியும் வெட்டியும் பேசி இரு பள்ளிகள் மோத, கிரசெண்ட் பெண்கள் பள்ளி வாகை சூடியது. அவர்களுக்கு 2,000 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டுகள், வெற்றிக் கிண்ணங்கள், கேடயம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

இரண்டாமிடம் வென்ற உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு வெற்றிக் கிண்ணங்களுடன் 1,500 வெள்ளி பற்றுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.

கிரசெண்ட் பெண்கள் பள்ளி மாணவி சம்யுக்தா பாலசுப்பிரமணியம் சிறந்த பேச்சாளராகத் தெரிவுசெய்யப்பட்டு, 150 வெள்ளி பற்றுச் சீட்டைப் பெற்றார்.

தமிழ்மொழி விழாவையொட்டி, இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களும் மக்கள் கழக நற்பணிப் பேரவையும் இணைந்து நடத்தும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான சொற்களம் 2026 விவாதப் போட்டியின் இறுதிச் சுற்று ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெற்றது.

மீடியாகார்ப் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் புகழ்பெற்ற கலைஞரும் வழக்கறிஞருமான திரு வடிவழகன் சண்முகசுந்தரம், மருத்துவர் பிரெமிக்கா, தமிழ் முரசின் மூத்த நிர்வாக உதவி ஆசிரியர் சபா.முத்து நடராஜன் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.

ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சொற்களம் நிகழ்ச்சியின் பதினைந்தாம் ஆண்டில், 30 பள்ளிகளிலிருந்து மாணவர் குழு பங்கேற்று, இரு பள்ளிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

இறுதிச் சுற்றில் இரண்டு அங்கங்கள் இடம்பெற்றன. முதல் அங்கத்தில் மாணவர்கள் முன்னரே கொடுக்கப்பட்ட தலைப்பில் ஒட்டியும் வெட்டியும் பேசினர்.

இரண்டாவது அங்கத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு தயார்செய்துகொள்ள ஐந்து நிமிடம் தரப்பட்டது.

இவ்வாண்டு, ‘இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை’, ‘அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்’, ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’, ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ ஆகிய பழமொழிகள் தலைப்புகளாகக் கொடுக்கப்பட்டு அவற்றை ஒட்டியும் வெட்டியும் மாணவர்கள் பேசினர்.

விவாதப் போட்டியில் பலர் முன்னிலையில், முழுவதும் தமிழில் பேச வேண்டும் எனும்போது தயக்கம் ஏற்படுகிறது என்றும் அது இயல்புதான் என்றும் சொன்னார் நற்பணிப் பேரவைத் தலைவர் ரவீந்திரன் கணேசன். முதல் சுற்றில் பேசியவுடன் தயக்கத்தைத் தகர்த்தெறிந்து சரளமாகப் பேசியதைக் காணமுடிந்ததாகவும் அவர் சொன்னார்.

“தமிழை வாழும் மொழியாக வைப்பதுதான் இந்நிகழ்ச்சியின் முக்கியக் குறிக்கோள். குறிப்பாக இளையர்களிடையே தாய்மொழிப் புழக்கத்தை அதிகரிப்பதும் முக்கிய நோக்கம்,” என்றார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மீனாட்சி மதியழகன்.

“இளையர்கள் தமிழில் பேச்சுத் திறனை வெளிப்படுத்த, சொற்களம் ஒரு சிறந்த தளமாக உள்ளது. அவர்கள் தன்னம்பிக்கையுடன் பேசும்போது, மொழியின் மீதான ஈடுபாடு அதிகரிக்கிறது. சொற்களம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் வளர்ச்சிக்கு மீடியாகார்ப் தொடர்ந்து பங்களித்து வருகிறது,” என்றார் மீடியாகார்ப் நிகழ்ச்சி நிர்வாகி வனி‌‌‌ஷா சிவாதாஸ்.

“சொற்களம் 2024ல் பங்கேற்றேன். ஆனால் இறுதிச்சுற்றுக்கு வர இயலவில்லை. அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். இம்முறை இறுதிச்சுற்றில் சிறந்த பேச்சாளராக வந்ததில் மகிழ்ச்சி,” என்றார் சம்யுக்தா பாலசுப்பிரமணியம்.

“இரண்டாவது நிலை வந்தாலும் மகிழ்ச்சிதான். தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு இறுதி நிலையை எட்டினோம். உதவி செய்த ஆசிரியர்களுக்கு நன்றி,” என்றார் இரண்டாமிடம் வென்ற உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியின் மாற்றுப் பேச்சாளராக வந்திருந்த மாணவி ஹர்னிகா.

இறுதி அங்கமாகப் பார்வையாளர்களாகப் பங்கேற்ற மாணவர்களுக்கு ‘சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்கக் கடுமையான சட்டங்களே வழிவகுக்கும்’ எனும் தலைப்பு கொடுக்கப்பட்டு, ஐந்து நிமிடத் தயாரிப்பையடுத்துப் பேச வாய்ப்பளிக்கப்பட்டது.

அரையிறுதிப் போட்டிவரை வந்த மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்