வசதிகுறைந்த குடும்பங்களின் ஆண்டிறுதிச் செலவுகளைச் சமாளிக்க ஏதுவாக, சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) $4.3 மில்லியன் சிறப்பு நிதியுதவிகளை வழங்கியுள்ளது.
மாதந்தோறும் வழங்கப்படும் ‘ஸக்காத்’ வழங்கீடுகள் அல்லாமல், ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிட்டத்தட்ட $300 சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இது 6,000க்கும் மேற்பட்ட வசதி குறைந்த குடும்பங்களைச் சென்றடைந்துள்ளது.
இது, ஆண்டிறுதிக் கட்டணங்கள், கடன்கள், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் அடுத்த கல்வியாண்டுக்குத் தயாராவதற்கான செலவுகளைச் சமாளிக்க ஆதரவளிக்கும் என்று முயிஸ் கூறியது.
கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் இந்த நிதியுதவி, ‘ஸக்காத்’ வழங்கீடுகளைப் பெறும் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவளிக்கும் திட்டங்களிள் முக்கியமானது என்று திங்கட்கிழமை (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கையில் முயிஸ் தெரிவித்தது.
இக்குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கு ‘ரெக்காப்’ (Reqab) உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் $150 நிதியுதவியும் தொடர்ந்து வழங்கப்படும் என்று முயிஸ் தெரிவித்தது.
இது, பயனாளிக் குடும்பங்களில் உள்ள சிறார்களின் கல்வித் தேவைகளை ஆதரிப்பதற்காகத் தொடங்கப்பட்ட திட்டமாகும். அவர்கள் பள்ளிச் சீருடைகள், புத்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க இது வழங்கப்படுகிறது.
ஆண்டிறுதி ஸக்காத் தொகையிலிருந்து $1.3 மில்லியன் இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் 18 வயதுக்குட்பட்ட 8,600 பிள்ளைகள் பயனடைந்ததாக முயிஸ் கூறியது.
இப்புதிய வழங்கீடுகளுடன், பள்ளிக்குச் செல்லும் மூன்று பிள்ளைகளுடன் கூடிய ஐந்து பேர் கொண்ட குடும்பங்களுக்கு $1,350 வழங்கப்படும். இத்தொகை, டிசம்பர் இறுதிக்குள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முயிஸ் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
“ஸக்காத் திட்டத்துக்குப் பங்களிப்போரின் தாராள மனப்பான்மை, தேவையுள்ள குடும்பங்களுக்கு ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்கிறது,” என்றார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் உள்துறை மூத்த துணையமைச்சருமான இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம்.
இந்த ஆதரவு, நிதியுதவி என்பதைத் தாண்டி, கல்வியில் முதலீடு செய்வதன்மூலம் சமூக அடித்தளங்களை வலுவாக்கி, எதிர்காலத்திற்கான மீள்தன்மையை உருவாக்கவும் உதவுவதாகக் குறிப்பிட்டார்.
பயனாளிகள் இவற்றை முழுமையாகப் பயன்படுத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

