சிங்கப்பூரின் ஈமச்சடங்குகள் குறித்து நண்பரிடம் யதார்த்தமாகப் பேசியது சமூகத்தைப் பாதிக்கும் ஒரு விவகாரம் என்பதை உணர்ந்த செய்தியாளர் அனுஷா செல்வமணி, அதை ஒரு கட்டுரையாக எழுதினார்.
சிங்கப்பூரில் ஈமச்சடங்குகளை நடத்துவதற்காகும் செலவுகளைப் பற்றியும் ஈமச்சடங்குகள் செய்வதால் நேரும் சவால்கள் பற்றியும் படம்பிடித்துக் காட்டியதற்காகச் ‘சிறந்த அசல் கட்டுரை’ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்து சமயத்தில் ஈமச்சடங்குகள் செய்வதற்குக் குறைந்தது 3,000 வெள்ளி முதல் 10,000 வெள்ளி வரை செலவாவதை அனுஷா கண்டறிந்தார்.
ஒருசிலரிடம் பேசியபோது, ஈமச்சடங்குகளைச் செய்வோர், துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினரைத் தங்கள் வியாபாரத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்திச் சில நிறுவனங்கள் தேவையற்ற செலவுகளைச் செய்யத் தூண்டுவதையும் அவர் தெரிந்துகொண்டார்.
ஈமச்சடங்குச் சேவைகளைப் பயன்படுத்திய மக்களிடமும் ஈமச்சடங்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்களிடமும் பேசி அவர் எழுதிய கட்டுரை, சமூகத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
ஒளிவு மறைவற்ற கதையை வெளியிடவேண்டும் என்ற நோக்கம் மட்டும் அவரிடம் இருந்தது. அதனால் பலரிடம் பேசி, அவர்களுடைய கண்ணோட்டங்களை அறிந்துகொண்டார் அனுஷா.
பல மாத உழைப்பின் காரணமாகச் சமூகத்தில் நிலவும் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு அதிகரித்ததை நினைத்து மனம் நெகிழ்ந்தார் அனுஷா.
“கட்டுரை வெளியான பிறகு சமூக ஊடகங்களில் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தனர்,” என்றார் அனுஷா.
தொடர்புடைய செய்திகள்
சிறந்த பல்லூடக விருது
“தனிப்பட்ட வாழ்க்கையைப் பிறரோடு பகிர முன்வந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். திருமணத்தின் முக்கியத்துவம், ஒரு வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல படிப்பினைகளை அவர்களுடைய கதையின் மூலம் வாசகர்கள் பெற்றனர்,” என்று கூறினார் ஜனார்த்தனன்.
சிறு வயதில் சீனரைக் திருமணம் செய்துகொள்ளப்போவதாக வேடிக்கையாகச் சொல்லியிருந்தார் துரைசாமி ராதாபாய்.
விளையாட்டாகவே கூறினாலும், அதுவே அவரது வாழ்க்கையில் நடந்தது. ஹோ சிங் ஹுவாங் எனும் சீன ஆடவரைக் காதலித்துக் கரம் பிடித்த அவரின் கதை, சிங்கப்பூரின் சமூக நல்லிணக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
அந்தத் தம்பதியரின் 51 ஆண்டுகாலக் காதல் கதையைச் சிறப்பாய்ச் சித்தரித்ததற்காகச் செய்தியாளர் கி. ஜனார்த்தனனுக்கும் காணொளித் தொகுப்பாளர் பே. கார்த்திகேயனுக்கும் ‘சிறந்த பல்லூடக’ விருதுகள் வழங்கப்பட்டன.
திரு ஹோ தமிழில் எழுதிய காதல் கடிதம் ராதாபாயின் மனத்தை வென்றது முதல், இன்று அவர்கள் பேரக்குழந்தைகளுடன் இரண்டு கலாசாரங்களின் பண்டிகைகளைக் கொண்டாடுவது வரை, வலுவான பிணைப்பைக் கண்முன் நிறுத்தியது இவர்களின் படைப்பு.
சிறந்த காணொளித் தொடர் விருது
பொருளாதாரம், அனைத்துலகப் பூசல்கள், குடியேறுதல் உள்ளிட்ட பல தலைப்புகளைக் கையாண்டது காணொளித் தொகுப்பு ‘முரசு களம்’.
அரசியல் குறித்த செய்திகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே வருவதைக் கவனித்தார் இளவரசி.
அந்நிலையை மாற்றி, சாமானியர்களுக்கும் அரசியல் தொடர்பான விவகாரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியே ‘முரசு களம்’.
அதைப் படைத்த செய்தியாளர் இளவரசி ஸ்டீபனுக்கும் காணொளித் தொகுப்பாளர் பே. கார்த்திகேயனுக்கும் ‘சிறந்த காணொளித் தொகுப்புத் தொடர்’ விருது வழங்கப்பட்டது.
“ஒவ்வொரு வாரமும், புதன்கிழமையன்று, முரசு களத்தின் காணொளி சமூக ஊடகத்தில் வெளியிடப்படும். எவ்விதத் தடையும் இன்றி, எந்தவொரு இடைவெளியும் எடுக்காமல், தொடர்ச்சியாக 26 வாரங்களுக்குக் காணொளி வெளிவந்தது,” என்றார் இளவரசி.
குறிப்பாக, ரஷ்யா-இந்தியா-அமெரிக்கா என்ற முத்தரப்பிற்கும் இடையே உள்ள உறவை அலசி ஆராய்ந்த காணொளி, சமூக ஊடகத்தளங்களில் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அக்காணொளியின் காரணமாக, தமிழ் முரசின் சமூக ஊடகத் தளங்களைப் பலர் பின்தொடர ஆரம்பித்தனர்.
26 காணொளிகளுக்கும் அமோக வரவேற்பு கிடைத்தது.
“பொதுவாகக் காணொளிக்கு ‘லைக்’ போட்டு ஆதரவு காட்டுவார்கள். ஆனால், பல காணொளிகளில் அவர்களுடைய கருத்துகளை ஏராளமானோர் பகிரத் தொடங்கினர். அரசியல் கருத்துகளை பகிர்ந்தாலும் மக்களுடைய உணர்வுகளைத் தூண்ட முடியும் என்று கற்றுக்கொடுத்த தளம், இந்த முரசு களம்,” என்று குறிப்பிட்டார் இளவரசி.
இரண்டு விருதுகளைத் தட்டிச் சென்ற கார்த்திகேயன் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்ததாகப் பகிர்ந்தார்.
செய்தியாளர்களோடு பயணம் செய்து, காணொளிகளை எடுத்தது நல்லதோர் அனுபவமாய் இருந்ததாகக் கூறினார் கார்த்திகேயன்.
காணொளிகள் மூலமாக மக்களிடையே தாக்கம் ஏற்பட்டுள்ளதையும் அவற்றிற்கு நல்ல ஆதரவு கிடைத்திருப்பதையும் சுட்டி அவர் மனம் நெகிழ்ந்தார்.
பிளவுபட்ட இன்றைய உலகச் சூழலில், இதழியல் இன்றியமையாதது எனும் கருத்தை முன்வைத்தார் எஸ்பிஎச் ஊடக நிறுவனத்தின் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வோங் வெய் கோங்.
இதழியல் இன்றியமையாத ஒன்று என்றும் நம் அடையாளத்தைச் செதுக்கும் இதழியலைக் கொண்டாடவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வகையில், செய்தித் துறையில் தங்கள் படைப்புகள் மூலம் தடம் பதித்தவர்களை அங்கீகரித்தது இவ்வாண்டின் எஸ்பிஎச் ஊடக விருது நிகழ்ச்சி.
செவ்வாய்க்கிழமை (மே 5) நடைபெற்ற எஸ்பிஎச் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் 2025ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் 18 விருதுகள் கொடுக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் விருது பெற்ற 18 பேரில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சைச் சேர்ந்த வாங் யாங்கிற்கும் கிறிஸ்டி சியூவிற்கும் ‘முதன்மை ஆசிரியர்’ விருது வழங்கப்பட்டது.
அரசியல், ஆட்சிமுறை பற்றிப் படைக்கும் அவர்கள் இருவரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் ‘இளம் செய்தியாளர்’ விருதையும் பெற்றனர்.

