‘ஏஜிங் ஏசியா’ அமைப்பு ஏற்பாடு செய்த ஆசிய பசிபிக் முதியோர் பராமரிப்புப் புத்தாக்க விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ். தேவேந்திரனுக்கு ‘ட்ரெயில்பிளேசர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
அந்த விருது நிகழ்ச்சி மரினா பே சேண்ட்சில் ஏப்ரல் 15ஆம் தேதி, 17வது உலக மூப்படைதல் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டது.
திரு தேவேந்திரனின் தலைமைத்துவத்தையும் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம் மூத்தோருக்குத் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவையும் அரவணைப்பையும் அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டது.
அவ்விருது, மூப்படையும் சமுதாயத்தில் புதிய திட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம் பெரும் பங்காற்றிவரும் அமைப்புகளையும் தலைவர்களையும் அங்கீகரிக்கிறது.
திரு தேவேந்திரன், முதியோர் நலன் குறித்த தமது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொண்டார்.
“ஒவ்வொரு தனிநபரும் தங்களின் முதுமைக் காலத்தை வடிவமைப்பதற்கான ஆற்றலைக் கொண்டிருக்கவேண்டும்,” என்றார் திரு தேவேந்திரன்.
“அதற்கு, அரசாங்கம், சமூக சேவை அமைப்புகள், சமூக அமைப்புகள், தனியார் துறைப் பங்காளிகள் ஆகியவை இணைந்து செயல்படவேண்டும்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம் ‘ஏஜிங் ஏசியா’ அமைப்பில் ‘கார்ப்பரெட் கோல்ட்’ உறுப்பினராகவும் சேர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அந்த உறுப்பினர் தகுதி மூலம், ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம் வட்டார ஒருங்கிணைப்புக் கட்டமைப்புகள், புதிய பராமரிப்புத் தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல்கள், வட்டார அளவில் மூப்படைதல் தொடர்பான கொள்கைக் கலந்துரையாடல்கள் ஆகியவற்றுக்குப் பங்களிக்கலாம்.
ஆசிய பசிபிக் முதியோர் பராமரிப்புப் புத்தாக்க விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னதாக, ஈசூன் வட்டாரத்தில், ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் ஏப்ரல் 13ஆம் தேதி தலைமைத்துவ வட்டமேசை மாநாடு ஒன்று நடைபெற்றது.
அந்த வட்டமேசை மாநாட்டில், நிதியுதவி நிலைத்தன்மை, ஒருங்கிணைந்த பராமரிப்பு மாதிரிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. ‘ஏஜிங் ஏசியா’ அமைப்பின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான ஜெனிஸ் சியா மாநாட்டை வழிநடத்தினார்.

