வீ. பழனிச்சாமி இணை ஆசிரியர்
சிங்கப்பூர் மக்கள் விடாது கடைப்பிடித்து வரும் சமய விழாக்களில் பிரசித்திபெற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது இந்தத் திருவிழா.
சமயச் சாயம் பூசிய ஒரு சடங்காக இதனை மக்கள் பார்ப்பதில்லை. புராணத் திருநீறு பூசினாலும் புதியோருக்கும் பண்புநெறிகளைப் போதிக்கும் ஒரு ஞானப் பெருவிழாவாக தீமிதித் திருவிழாவை மக்கள் கொண்டாடுகிறார்கள்.
சுடும் நெருப்பைச் சுடாத மலருடன் ஒப்பிட்டு, பூக்குழித் திருவிழா என்றும் இதனை அழைக்கிறார்கள். கொதிக்கும் அனல் தன்னைச் சூழ, ஸ்ரீ மாரியம்மனை மனத்தில் பதித்து, கால் பாதத்தை நெருப்பில் பதித்து நேர்த்திக்கடனை நேர்த்தியாக நிறைவேற்ற ஒரு பக்தர் பலவித ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடித்துத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.
துளசி மாலை அணிந்த நாள்முதல் அரை வயிற்றுச் சைவ உணவுடன் ஆன்மிக விரதமும் அருள்கலந்த சிந்தனையும் தன்னகத்தே அவர் கொண்டிருப்பது அவசியம்.
சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், தீபாவளித் திருவிழா நெருங்கும் வேளையில் தீயில் இறங்குவது மக்கள் தொன்றுதொட்டு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் கடமை.
பொதுவாக, தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு வாரத்திலிருந்து பத்து நாள்களுக்குள் தீமிதித் திருவிழா நடைபெறும். 150 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது தீமிதித் திருவிழா என்று வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ மாரியம்மன் மூல தெய்வமாக ஆலயத்தில் வீற்றிருந்தாலும், பரிவாரத் தெய்வமான ஸ்ரீ திரௌபதை அம்மனுக்கும் சேர்த்து பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்துகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், தீமிதித் திருவிழாவில் தீமிதித்தல்தான் பிரதான நேர்த்திக்கடனாகக் கருதப்பட்டாலும், அதனுடன் தொடர்புடைய இதர பிரார்த்தனைகளும் நிறைவேற்றப்படுகின்றன.
பால் குடம், மாவிளக்கு, பெண்களுக்குரிய கும்பிடுதண்டம், ஆண்களுக்குரிய அங்கப்பிரதட்சணம் போன்ற நேர்த்திக்கடன்களும் இவ்வாலயத்தில் தீமிதித்தல் நிகழ்வுக்கு முன் நிறைவேற்றப் படுகின்றன. ஆண்கள் அனைவரும் தீமிதித்து முடித்தவுடன், பெண் பக்தர்கள் தீக்குழியை வலம் வரும் நேர்த்திக் கடன் இடம்பெறும்.
தீமிதித் திருவிழா பொதுவாக ஆக்டோபர் மாதம் வந்தாலும், அதன் தொடர்புடைய பூர்வாங்கச் சடங்குகளும் பூஜைகளும் ஜூலை - ஆகஸ்ட் மாதத்திலேயே அதாவது சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும்.
ஸ்ரீ பெரியாச்சி பூஜை, ஸ்ரீ திரௌபதை அம்மனுக்குக் கொடியேற்றுதல், ஸ்ரீ திரௌபதை அம்மனுக்கு மாலையிடுதல், ஸ்ரீ திரௌபதை அம்மன் திருக்கல்யாணம், ஸ்ரீ திரௌபதை அம்மன் வஸ்திராபரணம், அர்ஜுனன் தபசு, ஸ்ரீ அரவாண் பூஜை, ஸ்ரீ அரவாண் களப்பலி, சக்ரவர்த்தி கோட்டை, படுகளம், ஸ்ரீ தர்மராஜா பட்டாபிஷேகம் என வரிசையாக மகாபாரதக் கதையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் தீமிதித் திருவிழாவின் சமயச் சடங்குகள் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இடம்பெறும்.
1840களுக்கு முன்பு சிங்கப்பூரில் தீமிதித் திருவிழா ஆல்பர்ட் ஸ்திரீட்டில் நடத்தப்பட்டது. இது தீமிதித் தெரு (Firewalking Street) என்று அழைக்கப்பட்டது.
1840களில் ஸ்ரீ திரௌபதையம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நிறுவப்பட்ட பிறகு இத்திருவிழா ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு மாற்றப்பட்டது.
ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது எந்த இடையூறும் இல்லாமல் தீமிதித் திருவிழா நடத்தப்பட்டது என்று வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தீமிதி திருவிழாவிற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, பாண்டவர்களின் வெற்றியில் முடிவடையும் 18 நாள் போரின் நினைவாக ஸ்ரீ மாரியம்மனின் வெள்ளி ரத ஊர்வலம் நடைபெறுகிறது. வெள்ளி ரதம், தெலுக் பிளாங்கா, புக்கிட் மேரா வட்டாரங்களைச் சுற்றி ஆலயம் வந்தடையும்.
2000ஆம் ஆண்டுக்கு முன் அதாவது சிங்கப்பூரில் அதிகமான வெளிநாட்டு ஊழியர்களின் பணியமர்த்தலுக்கு முன், தீமிதிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை பொதுவாக 1,500லிருந்து 2,000க்குள் இருந்தது. ஆனால், 2002ஆம் ஆண்டுக்குப் பின், அந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, 2019ல் சுமார் 4,000க்கு அதிகரித்தது.
எண்ணிக்கை கூடிய அதேவேளை இன்னொரு மாற்றமும் நிகழ்ந்தது. அந்தக் காலத்தில் தீமிதித் திருவிழா திங்கட்கிழமையில்தான் நடைபெற்றது. முதல்நாளான, ஞாயிற்றுக்கிழமை மாலை முதல், ஒரு நாள் வெள்ளி ரத ஊர்வலம், அர்ஜுனன் தபசு, பால்குடம், கும்பிடுதண்டம், அங்கப்பிரதட்சணம், சக்ரவரத்திக் கோட்டை, படுகளம் என அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும்.
பின்னர் காலை 8 மணியளவில், தீக்குழியில் தீ மூட்டப்படும். கரகம் ஏந்தும் தலைமைப் பண்டாரம், மகாபாரதக் கதையில் வரும் கதாபாத்திரங்களை ஏற்கும் தொண்டர்களுடனும் இதர தொண்டர்களுடனும் சிராங்கூன் சாலை, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து மாலை 4.30 மணி வாக்கில் புறப்பட்டு, மாலை 6 மணியளவில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் வந்தடைந்து, தீக்குழியில் இறங்கி, அதனைக் கடந்து வருவார். அவரைப் பின்தொடர்ந்து பக்தர்கள் தீமிதிப்பார்கள்.
மொத்த தீமிதித்தல் நிகழ்வே ஒன்றரை முதல் இரண்டு மணிநேரத்துக்குள் முடிந்துவிடும். பின்னர் பக்தர்களுக்கு இரவு உணவு பரிமாறப்படும்.
பொதுவாக, தீமிதிக்கும் பக்தர்களின் பாத ஊர்வலத்துக்காக, சிராங்கூன் ரோடு முதல் சவுத் பிரிட்ஜ் ரோடு வரை சாலை நெடுகிலும் ஒரு தடம் போக்குவரத்துக்கு மூடப்படுவதால் சில போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக 1999ஆம் ஆண்டு முதல் அந்தத் திருவிழா ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது.
தீமிதிக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்க, நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல் இரண்டு வாரங்களுக்குப் பிரிக்கப்பட்டது; வெள்ளிரத ஊர்வலம் இன்னும் அதிக இடங்களை உள்ளடக்கி, வெள்ளி, சனி என இரண்டு நாள்களாக நீட்டிக்கப்பட்டது. அந்த இரண்டு நாள்களிலும் வெள்ளி ரதம் தெலுக் பிளாங்கா, புக்கிட் மேரா வட்டாரத்துக்குச் சென்று திரும்பும்.
தீமிதித் திருவிழாவுக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை மாலை, மூன்றாவது முறையாக வெள்ளி ரதம் ஸ்ரீ திரௌபதையம்மனைச் சுமந்தவாறு ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு லிட்டில் இந்தியா வட்டாரத்துக்குச் சென்று பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு, ஆலயம் திரும்பும்.
தீமிதித் திருவிழா தொடர்பான சமய சடங்குகள் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பரவலாக நடத்தப்பட்டன.
முன்பு தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்த பக்தர்கள் ஆலயத்தில் பணம் செலுத்தி அதற்குரிய ரசீது பெற்றுக்கொண்டார்கள். காலப்போக்கில் அது இணையம் வழி பதிவு செய்யும் முறையாக மாற்றப்பட்டு இன்று வரை நீடிக்கிறது.
பக்தர்கள் இணையம் வழி பதிவு செய்த பிறகு அவர்களுக்கு கியூஆர் குறியீடு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாக அனுப்பி வைக்கப்படும். அதை அவர்கள் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள தொண்டர்களிடம் காட்டி, அர்ச்சர்களிடமிருந்து காப்புக் கட்டிக்கொள்கிறார்கள்.
தீமிதிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அவர்களுக்கான சேவை, பாதுகாப்பு போன்றவற்றிலும் அதிகக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தீமிதித்தல் நாளன்று, தீமிதிக்கும் பக்தர்களுக்குப் பகல் உணவு அளித்தல், அவர்கள் குளிப்பதற்கு வசதி செய்து கொடுத்தல் என அனைத்தையும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் நிர்வாகம் சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறது.
தீயில் இறங்கும் பக்தர்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தீக்குழியில் தீ மூட்டப்பட்டதிலிருந்து அது தயாராகி, பக்தர்கள் அனைவரும் தீமிதித்து முடியும் வரை ஏறத்தாழ 40 தொண்டர்கள் தீக்குழி பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
நெருப்புத் துண்டுகளில் தடுமாறி யாரும் விழுந்துவிடாதவாறு தாங்கிப் பிடித்தும், தாவிப்பிடித்தும் காப்பாற்றும் வீரத்தையும் ஈரத்தையும் நெஞ்சத்தில் ஏற்றிக்கொண்ட தொண்டர்கள் அவர்கள்.
பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் கரகக் குழுவில் ஏறத்தாழ 100 பேர் இடம்பெறுவர். அவர்களும் கரகம் மற்றும் பின்னால் வரும் பக்தர்களை வழிநடத்தி ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வருகிறார்கள்.
தலைமுறை தலைமுறையாகத் தொன்றுதொட்டு அனுசரிக்கப்படும் மாபெரும் சமய திருவிழாவாகத் தீமிதித்தல் திருவிழா பரிணாம வளர்ச்சி கண்டு வந்துள்ளது. அது சிறப்பாக நடைபெறுவதற்கு அன்று முதல் இன்று வரை சிங்கப்பூர் காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, நிலப் போக்குவரத்து ஆணையம் போன்ற பல அரசாங்க அமைப்புகளின் ஒத்துழைப்பும் உதவியும் விழா ஏற்பாட்டுக் குழுவுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.
தீமிதித் திருவிழா தொடர்பான அனைத்தும் தங்கு தடையின்றி நடந்திட வேண்டும் என்பதில் இரு கோயில்களின் நிர்வாகத்தினரும் சரி, இரு ஆலயங்களின் தொண்டர்களும் சரி, அயராது பாடுபட்டு வருகின்றனர்.
எல்லாம் சிறப்பாக நடந்தேற பக்தர்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகிறது. சாலை விதிமுறைகளைக் கடைப்பிடித்தல், ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளுதல், ஆலயங்களில் நியமிக்கப்பட்ட தொண்டர்கள் கூறும் ஆலோசனைகளைப் பின்பற்றுதல் போன்ற வழிகளில் அவர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கலாம்.
ஆண்டுகள் பல கடந்து வந்தாலும் தீமிதித் திருவிழாவின் மகத்துவம், மகாபாரதக் கதை மூலம் அது கற்பிக்கும் பண்பு நெறிமுறைகள், அரசாங்கம் வழங்கிவரும் பேராதரவு போன்ற அனைத்தும் இணைந்து, இன்னும் பல தசாப்தங்களைக் கடந்து இத்திருவிழா நீடித்து நிலைத்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நான் 1984ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ மாரியம்மன் கோயில் தொண்டனாக ஆண்டுதோறும் தீமிதித்து என் ஆன்மிகக் கடமையை நிறைவேற்றி வருகிறேன். தீமிதித்தல் பயணத்தில் இது என்னுடைய 42ஆவது ஆண்டு.
தீமிதித் திருவிழா தொடர்பான தகவல்கள் பக்தர்களுக்குப் பரவலாகச் சென்றடைய வேண்டும் எனும் உயரிய நோக்கத்தோடு, ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகக் குழுக்கள் சில சடங்குகளுக்கு நேரடி வர்ணனைகளை அறிமுகப்படுத்தின.
அந்த வகையில் நானும் என் பங்குக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் நிகழ்ச்சிகளை வர்ணனை செய்யும் சேவையைத் தொடர்ந்து ஆற்றி வருகிறேன்.
இந்த நேரடி வர்ணனைகளுக்கு மக்கள் பேராதரவு வழங்கினர். சமயச் சடங்குகளின் விளக்கம், அதனையொட்டி கூறப்படும் மகாபாரதம் தொடர்பான சிறு சிறு கதைகள், அவற்றில் பொதிந்திருக்கும் பண்பு நெறிகள், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் போன்றவற்றை மக்கள் விரும்புகிறார்கள்.
காலம் தன்னை மாற்றிக்கொண்டாலும் கண்கண்ட தெய்வத்தின்மீது பக்தர்கள் வைத்திருக்கும் பக்தியில் எந்தவொரு மாற்றமுமில்லை.
காலங்காலமாக சிங்கப்பூர் மக்கள் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தீமிதித் திருவிழா, காலத்துக்கும் நீடிக்கும். வந்துயர்ந்து நிற்கும் தலைமுறையும் வரப்போகும் தலைமுறையும் அந்தக் கடமையை விடாது வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் இதனை நிறைவு செய்கிறேன்.