சமூக சேவையைப் பறைசாற்றிய ஸ்ரீ சிவன் கோயில் தேசிய தின நிகழ்ச்சி

சமூக சேவையைப் பறைசாற்றிய ஸ்ரீ சிவன் கோயில் தேசிய தின நிகழ்ச்சி

3 mins read
eaf5374e-7f17-42f9-9a73-a1f62e1d9de5
சிவன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு தேசிய தின நிகழ்ச்சியில் மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் (நடுவில்) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுடன் கலந்துறவாடினார். - படம்: யோகிதா அன்புச்செழியன்
multi-img1 of 4
Google News Preferred Icon

சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ சிவன் கோயிலில் சமூக நல்லிணக்கத்தையும் சேவை மனப்பான்மையையும் முன்னிறுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்றது.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவை செயற்குழுவும் கோயில் மேலான்மைக் குழுவும் இணைந்து அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

பல்லின மக்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் அமைந்த அந்த நிகழ்ச்சியில், பல்வேறு சமூக அமைப்புகளின்வழி கிட்டத்தட்ட 20 வசதி குறைந்த குடும்பங்கள் பங்கேற்றன.

கோயில்களை வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாது, சமூகச் செயல்பாடுகளுக்கான மையங்களாகவும் பயன்படுத்தலாம் என்பதை எடுத்துக்காட்டும் நோக்கில் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவை செயற்குழுவின் தலைவர் மதுபாலா பாலகிருஷ்ணா கூறினார்.

“பல இன மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் தருணங்களில் வேற்றுமைகள் மங்கிப் போகின்றன. ஒற்றுமை உணர்வு வலுப்பெறுகிறது. உண்மையான சிங்கப்பூரர்களாக இருப்பதன் அர்த்தத்தை இது நினைவூட்டுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் கலந்துகொண்டு தேசிய தினத்தைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேக்கை வெட்டி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசிய தினத்தை முன்னிட்டு சிறப்பு கேக்கை வெட்டினார்.
நிகழ்ச்சியில் மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசிய தினத்தை முன்னிட்டு சிறப்பு கேக்கை வெட்டினார். - படம்: யோகிதா அன்புச்செழியன்

“சிங்கப்பூரின் பல்லின தன்மையே நமது சமூகத்தின் மிகப்பெரிய பலம். வேறுபட்ட சமய நம்பிக்கைகளைப் புரிந்துகொண்டு, வேற்றுமையில் ஒற்றுமையை உணர்வது மிக மதிப்புமிக்கது. அதுவே நம்மை ஒன்றுபட்ட சமூகமாக இணைக்கிறது,” என்று அவர் கூறினார்.

நாட்டின் பயணத்தை நினைவுகூரவும் எதிர்கால தலைமுறைகளுக்கான வலுவான அடித்தளத்தை அமைக்கவும் இத்தகைய நிகழ்ச்சிகள் முக்கியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நிகழ்ச்சியின் இறுதியில் அவர் பங்கேற்பாளர்களுடன் இணைந்து கோவிலில் மதிய உணவருந்தினார்.

சிவன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு தேசிய தின நிகழ்ச்சியில் மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சிவன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு தேசிய தின நிகழ்ச்சியில் மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். - படம்: யோகிதா அன்புச்செழியன்

குடும்பங்களுக்காகப் பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சிங்கப்பூரின் அடையாளங்களை மையமாகக் கொண்ட ‘பிங்கோ’ விளையாட்டு, வாழ்த்து அட்டைகள் எழுதும் நடவடிக்கை, தேசிய கீதம் பாடி உறுதிமொழி எடுக்கும் அங்கம் ஆகியவை பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தின.

கோவிலைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 தொண்டூழியர்கள், இந்து அறக்கட்டளை வாரியத்தின் நான்கு சகோதரக் கோவில்களின் மேலாண்மைக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் அடங்கிய சேவா குழுவினர், வாரியப் பணியாளர்கள் கொண்டாட்டங்களுக்காக இணைந்து செயல்பட்டனர்.

சிறார்களை மகிழ்வூட்ட ‘கச்சாங் புத்தே’ விற்பனையாளர் போல மாறுவேடத்தில் வந்த தொண்டூழியர் ஒருவர் பாரம்பரிய சிற்றுண்டிகளை வழங்கினார்.
சிறார்களை மகிழ்வூட்ட ‘கச்சாங் புத்தே’ விற்பனையாளர் போல மாறுவேடத்தில் வந்த தொண்டூழியர் ஒருவர் பாரம்பரிய சிற்றுண்டிகளை வழங்கினார். - படம்: யோகிதா அன்புச்செழியன்

பொதுவாக முதியோரை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இம்முறை, எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்குச் சிறப்பான தேசிய தின அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருந்தது,” என்று ஸ்ரீ சிவன் கோயில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பத்மா ஆ. பா. கூறினார்.

அந்த அனுபவத்தை மேலும் மெருகூட்டும் வகையில், கோயில் தொண்டூழியர்கள் பல்லின மக்களின் கலாசார உணவுகளை ஒன்றிணைத்து சைவ மதிய உணவைத் தயாரித்தனர்.

“மனத்தில் எப்போதும் நிலைத்திருப்பது உணவுதான். தேசிய தினக் கொண்டாட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில், பல்வேறு இனங்களின் உணவுகளை ஒன்றிணைத்துள்ளோம்.

தமிழர்களான நாங்கள் பாரம்பரிய சேலை அணிந்து வந்து, மலாய்க்காரர்கள், சீனர்கள் என்று மற்ற இனத்தவரின் பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து வழங்கியுள்ளோம். பங்கேற்பாளர்களுக்கு இது மறக்க முடியாத அனுபவமாக அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்று குமாரி பத்மா கூறினார்.

சைவ நாசி லெமாக், சைவ ‘சிக்கன் 65’, பழங்களால் தயாரிக்கப்பட்ட ரோஜாக், ‘ரெட் ரூபி’ இனிப்பு ஆகியவை மதிய உணவுகளாகப் பரிமாறப்பட்டன. இது, பல்வேறு கலாசாரங்களை உணவின்வழி அறிந்துகொள்ளும் வாய்ப்பைச் சிறார்களுக்கு வழங்கியது.

சிங்கப்பூரின் 61ஆம் பிறந்தநாளை முன்னிட்டு நாட்டின் விழுமியங்களை எடுத்துரைக்கும் சிறப்பு அலங்காரங்களும் கலைப்படைப்புகளும் கோவிலில் இடம்பெற்றிருந்தன.
சிங்கப்பூரின் 61ஆம் பிறந்தநாளை முன்னிட்டு நாட்டின் விழுமியங்களை எடுத்துரைக்கும் சிறப்பு அலங்காரங்களும் கலைப்படைப்புகளும் கோவிலில் இடம்பெற்றிருந்தன. - படம்: யோகிதா அன்புச்செழியன்

பங்கேற்பாளர்களுக்காக அன்பளிப்புப் பைகளும் தயார் செய்யப்பட்டிருந்தன. சிறார்களின் கல்விக்குப் பயன்படும் எழுதுபொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், புத்தகங்கள் ஆகியவற்றுடன் அரிசி, பாலாடைக்கட்டி உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருள்களும் அவற்றில் இருந்தன.

நிகழ்ச்சியின் மற்றொரு பகுதியாக, இந்து இளையர் கட்டமைப்பைச் சேர்ந்த இளையோர் தொண்டூழியப் பணிகளில் ஈடுபட்டனர். இம்முறை, கிட்டத்தட்ட 47 இளையோர் இந்தத் தொண்டூழியக் களத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இணைந்தனர்.

சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு 61 அன்பளிப்புப் பைகள் தயாரிக்கப்பட்டு, கோயிலுக்கு அருகிலுள்ள ‘தோங் டெக்’ முதியோர் இல்லத்திற்கு வழங்கப்பட்டன. முதியோரின் அன்றாடத் தேவைகளைக் கருத்தில்கொண்டு அவற்றில் துண்டுகள், பற்பசை, ஈரத் துடைப்பான், பிஸ்கட், மருத்துவ எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் அவற்றில் வைக்கப்பட்டிருந்தன.

கிட்டத்தட்ட 47 இளையோர் இந்து இளையர் கட்டமைப்பைப் பற்றி அறிந்துகொள்ளவும் தொண்டூழியம் செய்வதற்கும் தொண்டூழியப் பணிகளில் ஈடுபட்டனர்.
கிட்டத்தட்ட 47 இளையோர் இந்து இளையர் கட்டமைப்பைப் பற்றி அறிந்துகொள்ளவும் தொண்டூழியம் செய்வதற்கும் தொண்டூழியப் பணிகளில் ஈடுபட்டனர். - படம்: இந்து அறக்கட்டளை வாரியம்

“சமயம், மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் சமமானவர்கள் என்பதை உணர்த்த தேசிய தினம் சிறந்த வாய்ப்பாகும்.

“சிங்கப்பூரின் வளர்ச்சியில் முதியோரின் பங்கு அளப்பரியது. இன்று நாம் அடைந்துள்ள முன்னேற்றம் அவர்களின் தியாகத்தின் பலன். எனவே, அவர்களைச் சந்தித்து நன்றியையும் மரியாதையையும் தெரிவிப்பது இளையத் தலைமுறையினரின் கடமை,” என்று இந்து இளையர் கட்டமைப்பின் துணைத் தலைவர் சுவாமிநாதன் ராஜா, 29, கூறினார்.

குறிப்புச் சொற்கள்