பாரம்பரியக் கலைகளை மேடையேற்றிய ‘அக்னி’

மாணவர்கள் படைப்பில் தமிழ்ப் பாரம்பரியக் கலைகள்

பாரம்பரியக் கலைகளை மேடையேற்றிய ‘அக்னி’

2 mins read
39d6e6e9-7d67-4b65-9c5b-d6d0c7774755
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரியின் நடனமணிகள். - படம்: த.கவி

பறையிசையுடன் இணைந்த துடும்பின் அதிரடி முழக்கத்தால் அரங்கையே ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி மாணவர்கள் அதிரச்செய்தனர்.

அவர்கள் பார்வையாளர்களின் ரத்தத்தில் இரண்டறக் கலந்திருந்த தமிழுணர்வைத் தட்டியெழுப்பினர்.

பாரம்பரிய இசைப் படைப்புக்கு மேலும் சிறப்பூட்டும் வகையில், மாணவர்கள் வண்ண நிறத் துண்டுகளைப் பிடித்துகொண்டு, நளினம் மிகுந்த ஒயிலாட்டப் படைப்பு ஒன்றையும் மேடையேற்றினர்.

ஏப்ரல் 11ஆம் தேதி, ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரியின் ஏற்பாட்டில் ‘அக்னி’ என்ற கலைநிகழ்ச்சி மாணவர்களால் கோலாகலமாகப் படைக்கப்பட்டது.

‘தமிழே உறவே’ என்ற கருப்பொருளையொட்டி, தமிழார்வத்தைப் பல வகைகளில் மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

அத்தொடக்கக்கல்லூரியின் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகமும் தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்ட மாணவர்களும் இணைந்து வழங்கிய அந்நிகழ்ச்சி, தமிழ்மொழியின் மீதான ஈடுபாட்டையும் இளைய தலைமுறையினரின் படைப்பாற்றலையும் பறைசாற்றும் வகையில் அமைந்தது.

அந்நிகழ்ச்சிக்கான விளம்பரக்குழுத் தலைவரான 18 வயது மதுமித்தா ஸ்ரீ ரமணன், விளம்பரக் குழுவில் அவருடைய முதல் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“காணொளி தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதில் நான் சிரமப்பட்டேன். இருப்பினும், இந்த அனுபவங்கள் வழி நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

“வில்லுப்பாட்டு என்பது நகைச்சுவை கலந்த ஒரு கலைப்படைப்பு. இது என் முதல் வில்லுப்பாட்டுப் படைப்பு என்பதால் எனக்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. இருப்பினும், அது ஒரு சிறப்பான புது அனுபவமாக அமைந்தது,” என்றார் 18 வயதான ஷர்னி டியோ சேவியர்.

விழாவின் ஒரு பகுதியாகப் பல்வேறு கல்லூரிகளுக்கு இடையிலான குறும்படப் போட்டி நடைபெற்றது. ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற கருப்பொருளில் அமைந்த அப்போட்டியில் மாணவர்கள் தங்களின் படைப்புகளைச் சமர்ப்பித்தனர்.

அந்தப் போட்டியில் தெமாசெக் தொடக்கக்கல்லூரி வாகைசூடியது.

“அந்நிகழ்ச்சி வழி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதோடு, எதிர்காலத்தில் கூடுதல் வாய்ப்புகள் அவர்களைத் தேடி வர இது ஒரு நல்ல தளமாக இருக்கும் என நம்புகிறோம்,” என்றார் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரியின் தமிழாசிரியரான கலைவாணி இளங்கோ.

“அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்குமுன், என் மகள் ஆங்கிலத்திலேயே உரையாடுவாள். ஆனால், தற்போது அவள் தமிழை விரும்பிப் பேசுவதோடு ஆர்வத்தோடு தமிழ்ப் பாரம்பரியக் கலைகளிலும் ஈடுபடுகிறாள்,” என 18 வயது மாணவி இஷா சரோ முத்தையாவின் தாயார், கோமதி முத்தையா கூறினார்.

குறிப்புச் சொற்கள்