தளர்ந்த கட்டுப்பாடுகள்; தலைநிமிர்ந்த நம்பிக்கை

கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் படிப்படியாக இயல்புநிலைக்கு வாழ்க்கை திரும்பும் வண்ணம் அரசாங்கம் சில திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி நேற்று முதல் 16 வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் நேரடி இசை வாசிப்பது அனுமதிக்கப்படுகிறது.

சைனாடவுனில் அமைந்துள்ள ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோவில், சிராங்கூன் சாலையிலுள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் ஆகிய இரண்டு இந்துக் கோவில்கள் இதற்கான அனுமதி பெற்றுள்ளன. இரண்டு இந்துக் கோவில்கள் உட்பட ஏழு கிறிஸ்துவ தேவாலயங்கள், மூன்று சீக்கிய கோவில்கள், இரண்டு பெளத்த கோவில்கள், இரண்டு டாவோயிஸ்ட் கோவில்களும் இந்த நேரடி இசைத் திட்டத்தில் அடங்கும்.

நேற்று முதல் வீரமாகாளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளிலும் அக்டோபர் 8ஆம் தேதி முதல் லயன் சித்தி விநாயகர் கோவிலில் வியாழக்கிழமை, சனிக்கிழமைகளிலும் நேரடி இசைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹோமம், யாகம் நடைபெறுவதில் கூடுதல் வசதி

“இந்து கோவில்களைப் பொறுத்தவரைக் கூட்டு இசைக் குழு வாசிப்புகள், பஜனைகள் மீண்டும் தொடங்கவில்லை. ஆனால் இந்த புது திட்டம் மூலம் ஹோமம், யாகம் ஆகிய வழிபாடுகள் மேலும் சுமுகமாக நடைபெறும். முகக்கவசம் அணியாமல் யாகங்களை வசதியாக நடத்தலாம்,” என்றார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு த. ராஜசேகர்.

நேரடி இசைப் படைப்புகளுக்கு புதிய கட்டுப்பாட்டுகள்

நேரடி இசைப் படைப்புகளின்போது சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். ஒரு மேடையில் மொத்தம் 10 பாடகர்கள் அல்லது இசைக் கலைஞர்கள் வரை இருக்கலாம். அதில் அதிகபட்சம் ஐந்து பேர் மட்டுமே முகக்கவசம் அணியாமல் இருக்கலாம். உள்ளரங்க படைப்புகளில் ஒரே நேரத்தில் இரண்டு பாடகர்கள் மட்டுமே முகக்கவசம் அணியாமல் பாடலாம். இந்த விதிமுறைகளை ஒரு யாகத்திற்குப் பொருத்தும்போது, ஐந்து அர்ச்சகர்கள் வரை முகக்கவசம் இல்லாமல் இருக்கலாம். தினசரி கோவில் வழிபாடுகளில் ஓதுவார் முகக்கவசம் அணியாமல் பாடலாம்.

பாடகர்களுக்கும் மக்கள் கூட்டத்திற்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். மற்றபடி வழிபாட்டுத் தலங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் 2 மீட்டர், முகக்கவசம் அணிந்தவர்கள் 1 மீட்டர் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும்.

கூட்டு வழிபாடுகள், திருமண நிகழ்வுகளில் 100 பேர்

இதற்கிடையே நேற்று முதல் எல்லா கூட்டு வழிபாட்டுச் சேவைகளுக்கும் திருமண நிகழ்வுகளுக்கும் 100 பேர் வரையிலும் அனுமதி கிடைத்துள்ளது. இடவசதி, பாதுகாப்பு இடைவெளி போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு கோவில்களில் மக்களை அனுமதிக்கும் எண்ணிக்கை வேறுபடும் என்று குறிப்பிட்டார் திரு ராஜசேகர்.

“பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கே முக்கியத்துவம் வழங்கப்படும். இடவசதி உள்ள பெரிய கோவில்களில் 100 பக்தர்கள் வரை அனுமதித்தாலும் சிறிய கோவில்களில் எண்ணிக்கை சற்று குறையலாம்,” என்றார்.

அனுமதித்தாலும் கட்டுப்பாடுகள்

திருமண நிகழ்வுகளில் 100 பேர் இருந்தாலும் அவர்கள் 50 பேர் கொண்ட பிரிவுகளாகக் கலந்துகொள்வது, குறிப்பிட்ட நேர அவகாசத்திற்குள் வந்து செல்வது, திருமண மண்டபத்திலோ வேறு இடத்திலோ இடவசதியைக் கருதி மக்கள் எண்ணிக்கை கணிக்கப்படுவது, கூட்டம் வந்து சென்ற பின்னர் அரை மணி நேர இடைவெளியில் சுத்தம் செய்த பின்னரே மற்றொரு குழுவை வர அனுமதிப்பது போன்ற விதிமுறைகளை திரு ராஜசேகர் வலியுறுத்தினார்.

‘வரவேற்பு இருக்கும்’

அடுத்த வாரம் 8ஆம் தேதி முதல் அனுமதி பெற்ற நாட்களில் ஓதுவார் தேவாரம் பாடுவது, சன்னிதியில் அர்ச்சகர்கள் முகக்கவசம் அணியாமல் மந்திரம் ஓதுவது ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்படும் என்றார் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோவிலை நிர்வகிக்கும் செட்டியார் கோவில் குழுமத்தின் தலைவரான திரு வீரப்பா விஸ்வநாதன்.

“பொதுவாக வழிபாட்டுத் தலங்களின் பாடகர்களுக்கு இந்த புதுத் திட்டம் பொருந்தும். யாகம், பூஜைகளில் முகக்கவசம் அணியாமல் இயல்பாக வழிபாடுகளை மேற்கொள்ள இது அனுமதிக்கிறது,” என்றார் திரு விஸ்வநாதன்.

இசை, மந்திரம் ஓதுவது இந்து சமயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அம்சங்கள் என்றும் படிப்படியாக வரும் இந்த மாற்றங்கள் பக்தர்களுக்குக் கூடுதல் மனநிறைவை வழங்குகிறது என்றும் சொன்னார் வீரமாகாளியம்மன் கோவில் செயலாளரான திரு ஆர்.ராஜகாந்த்.

“பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க இதுவரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத தனிப்பட்ட வழிபாடுகளுக்கு மட்டுமே ஓதுவார் பாட முடிந்தது. இப்போது பொதுமக்கள் கோவிலில் வழிபாடு செய்யும் வேளையிலேயே நேரடியாக ஓதுவார் பாடுவதைக் கேட்கலாம். தினசரி பூஜைகள், யாகம் ஆகியவற்றிலும் மந்திரங்கள் ஓதுவது அனுமதிக்கப்படும்,” என்றார் திரு ராஜகாந்த்.

100 பேர் வரை கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கினாலும் படிப்படியாக பக்தர் எண்ணிக்கை கோவிலின் இடத்திற்குத் தகுந்தவாறு உயர்த்தப்படும் என்றும் இந்த புதிய திட்டத்தால் கோவிலுக்குள் நுழைய பக்தர்கள் காத்திருக்கவேண்டிய நேரம் வெகுவாக குறையும் என்றும் நம்பிக்கையளித்தார் திரு ராஜகாந்த்.

‘வழிபாட்டுக்கு நேரடி இசை மேலும் சிறப்பு சேர்க்கும்’

கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக வீரமாகாளியம்மன் கோவில் ஓதுவாராக இருக்கும் 57 வயது திரு சந்திரமூர்த்தி தேசியர், தினமும் காலையிலும் மாலையிலும் கோவிலில் பாடி வருகிறார். இதற்கு முன் பொதுமக்கள் இல்லாமல் கோவில் மூடியிருந்த நேரத்தில் பாடினார். இனி ஒரு குறிப்பிட்ட இடத்தில் உட்கார்ந்து பக்தர்கள் வரும் நேரத்திலும் அவருக்கு பாட வாய்ப்பு கிடைக்கும்.

“முகக்கவசம் அணிந்து பாடினால் அது தெளிவாகக் கேட்காது. பாடல் என்பது எந்த கலாசாரத்திலும் முக்கியம். மக்கள் வந்து போக கோவிலில் பாடல்கள் பாடுவது, பக்தர்களின் வழிபாட்டை மேலும் சிறப்படையச் செய்கிறது,” என்றார் திரு சந்திரமூர்த்தி.

தீபாவளி, நவராத்திரி போன்ற விழாக்கள் வரவிருக்கும் நேரத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது ஒரு நல்ல அறிகுறி என்றும் பக்தர்கள் மனதிருப்தியுடன் வழிபாடுகளைச் செய்ய முடிகிறது என்றும் கூறினார் வீரமாகாளியம்மன் தலைமைப் பண்டாரமான திரு சுப்பையா சேதுராமன், 57.

பக்தர்களின் கருத்து

“கூடிய விரைவில் இயல்பு நிலைக்கு மாறவேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். எனக்கும் அப்படித்தான். படிப்படியாக தளர்த்தப்படும் இந்த விதிமுறைகள் வரவேற்கத்தக்கவை,” என்று கூறினார் 52 வயது முத்தையா மதியழகன்.

நேரடி இசைக்கு அனுமதி கொடுக்கப்படுவதால் அதிக வித்தியாசம் இல்லை என்று தெரிவித்தார் 64 வயது லதா முருகையா.

“அதிக எண்ணிக்கையில் கோவில்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்தால் மக்களுக்கு நன்மையளிக்கும். நேரடி இசைக்கு அனுமதி வழங்கப்படுவது மகிழ்ச்சிதான் என்றாலும் இந்து கோவில்களைப் பொறுத்தவரை பெரிய அளவில் நன்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை,” என்றார் அவர்.

தளர்வுகளை வரவேற்ற 38 வயது ந.இளமாறன், பண்டிகைக்காலம் நெருங்குவதால் அதற்குள் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறார்.

“இந்தச் சோதனைத் திட்டம் கூடிய விரைவில் எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் செயல்படுத்தப்படவேண்டும். மேலும் தற்போதுள்ள 100 பேருக்கான அனுமதி விரைவில் அதிகரிக்க வேண்டும். தீபாவளி வருகிறது. அதற்கு முன்னர் பல சமய நிகழ்வுகளும் உள்ளன. மக்கள் கோவில்களுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பிருந்தால் நல்லதுதானே,” என்ற ஏக்கத்தையும் தம் விருப்பத்தில் அவர் வெளிப்படுத்தினார்.

கூடுதல் செய்தி:

இர்‌‌‌ஷாத் முஹம்மது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!