பணிப்பெண்களைப் போற்றிய மே தினக் கொண்டாட்ட நிகழ்வு

பணிப்பெண்களைப் போற்றிய மே தினக் கொண்டாட்ட நிகழ்வு

2 mins read
ffd986dd-dac8-4069-ba46-46ef89453c57
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், வெளிநாட்டு பணிப்பெண்கள் நிலையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த சிறப்பு மே தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட பணிப்பெண்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

வெளிநாட்டுப் பணிப்பெண்களின் சேவையை பாராட்டும் வகையில் அண்மையில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி), வெளிநாட்டுப் பணிப்பெண்கள் நிலையத்துடன் இணைந்து பணிப்பெண்களுக்கான சிறப்பு மே தினக் கொண்டாட்ட நிகழ்வொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

முகத்தில் வண்ணமிடுதல், கேலிச்சித்திரம் உருவாக்குதல், பலூனில் உருவங்கள் செய்வது உள்ளிட்ட பல்வேறு சுவாரசியமான அங்கங்கள் இந்நிகழ்வில் இடம்பெற்றன. மேலும், இந்நிகழ்வில் அரங்கேறிய நடனம், இசை ஆகிய கலைப் படைப்புகளும் அதிர்ஷ்டக் குலுக்கலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. 

இம்மாதம் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜுரோங் கிழக்கு வட்டாரத்திலுள்ள தேவன் நாயர் வேலை நியமன, வேலைத்தகுதி கழகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிப்பெண்கள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். 

இவ்விழாவையொட்டி கடந்த மார்ச் மாதம் பணிப்பெண்களுக்கான நிகழ்த்துகலைப் போட்டி (Performing arts competition) ஒன்று டிக்டாக் தளத்தில் தொடங்கியது. 35க்கும் மேற்பட்டோர் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இடம்பெற்ற இப்போட்டியின் இறுதியங்கத்தில் வெற்றியாளர்களுக்குக் கிண்ணங்களும் பற்றுச்சீட்டுகளும் பரிசுகளாக வழங்கப்பட்டன. 

“குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழும் எங்களைப் போன்ற பணிப்பெண்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் அதிக உற்சாகத்தை அளிக்கின்றன. குறிப்பாக அன்றாடம் வீட்டுக்குள்ளேயே இருக்கும் எங்களுக்கு வெளியில் வந்து நண்பர்களைச் சந்திப்பது அதிக மனமகிழ்ச்சியை அளிக்கிறது,“ என்று கூறினார் வெளிநாட்டுப் பணிபெண்ணான திருவாட்டி ஷரன் ப்ரோஸ்பெரோ, 34. 

கடந்த ஆறு மாதங்களாக நிதியறிவு சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வரும் இவர், அதனால் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாவும் நிதி சார்ந்த மோசடிகளைப் பற்றி அறிந்துகொண்டது அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். பன்முகத்திறனாளரான இவர் இந்நிகழ்வில் ஒரு பாடல் பாடியும் பார்வையாளர்களை மகிழ்வித்தார். 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹூவாங், “நம் சமூகத்தின் ஆணிவேரான குடும்பத்தைப் பராமரிப்பதில் பணிப்பெண்களின் பங்கு இன்றியமையாதது. பணிப்பெண்களைப் பராமரிப்பதிலும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் மனிதவள அமைச்சு தொடர்ந்து அக்கறை செலுத்தும்,“ என்று கூறினார். 

இதுகுறித்து தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வெளிநாட்டு ஊழியர்கள் பிரிவின் தற்காலிக இயக்குநர் மைக்கல் லிம், பணிப்பெண்களுக்கான பன்முகத்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மின்னிலக்கக் கல்வி, மொழித்திறன் வகுப்புகள் போன்ற முயற்சிகள் நடைமுறையில் உள்ள நிலையில், குழந்தைகளையும் முதியோர்களையும் பராமரிக்கும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளையும் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்