சிங்கப்பூர் குடிமக்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற நிகழ்ச்சி குடும்பங்களை ஒன்றிணைக்கும் ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியாக அமைந்தது.
ஜூலை 1ஆம் தேதியன்று சிங்கப்பூர் கல்சா சங்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக புக்கிட் பாத்தோக் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளி பிள்ளை கலந்துகொண்டார்.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி கொவிட்-19 நோய்ப் பரவலினால் மூன்று ஆண்டுகளாக நடைபெறவில்லை.
கிட்டத்தட்ட 20வது முறையாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அதே உற்சாகத்துடன் திரும்பியது. கிட்டத்தட்ட 200 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பழைய, புதிய தமிழ் பாடல்களிலிருந்து இந்தி பாடல்கள் வரை அனைத்தும் இந்த நிகழ்ச்சியின் கவரும் அங்கங்களாக விளங்கின.
ஓம்கார் நடனக்குழுவின் நடனங்களுடன் ஆடல், பாடல் என அமர்க்களப்பட்டது நிகழ்ச்சி.
அதுமட்டுமல்லாமல், உள்ளூர் தமிழ் எழுத்தாளரும் கவிஞருமான திரு கெ சுப்ரமணியம் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற தலைப்பிலான தனது கவிதையை வாசித்தார்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் குடும்பங்கள் ஒன்றிணைந்து நேரம் செலவழிக்கும் ஒரு வாய்ப்பை இந்த நிகழ்ச்சி வழங்கியது.
தொடர்புடைய செய்திகள்
“எனது நண்பர்களுடனும் அண்ணனுடனும் இங்கு வந்துள்ளேன். இசை, ஆடல் என பல்வேறு அங்கங்களுடன் எங்களால் உற்சாகமாக நேரத்தைக் கழிக்க முடிந்தது. மீண்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆவலாக உள்ளோம்,” என்று நிகழ்ச்சியில் பங்குபெற்ற திரு மல்லிகா, 64, கூறினார்.
“நமது சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு பங்காற்றி வரும் சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கத்தை நான் பாராட்ட விரும்புகிறேன். மூன்று தலைமுறைகள் கொண்ட குடும்பங்களைக்கூட என்னால் இங்கு காண முடிகிறது. ஒவ்வொரு நாட்டின் அடித்தளமாக விளங்கும் குடும்பத்தைப் பிணைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மேலும் நடத்தப்பட வேண்டும்,” என்று திரு முரளி பிள்ளை கூறினார்.
“குடும்ப ஒற்றுமை, பிணைப்பு சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கத்தின் ஐந்து கூறுகளில் ஒன்றாக அமைகின்றது. குடும்பத்தைக் கொண்டாடும் இந்நிகழ்ச்சியை நடத்திய ஏற்பாட்டுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன்,” என்று சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கத்தின் தலைவர் திரு எம்.பி. செல்வம் கூறினார்.
dhurga@sph.com.sg

