நான்கு தலைமுறை உறவுகளுடன் 100வது பிறந்தநாளை அண்மையில் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தார் சிங்கப்பூரில் வாழும் மிகச் சில மூத்த குடிமக்களில் ஒருவரான திரு நடேச பிள்ளை கணபதி.
இந்தியாவிலுள்ள கோட்டூரில் 1923ஆம் ஆண்டு பிறந்த அவர், 1952ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்தார். மனைவி காவேரிக்கு இப்போது வயது 92. திரு கணபதியின் மூன்று மகள்களும் ஒரு மகனும் ஒன்றிணைந்து தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் திட்டமிட்டனர்.
சிறப்பான இந்நாளைப் பேரன், பேத்தி, கொள்ளுப்பேத்தி என அனைத்து உறவுகளையும் அழைத்துக் கொண்டாட முடிவு செய்தனர்.
ஹோம்டீம் என்எஸ் பாலஸ்டியர் மன்றத்தின் நிகழ்வறையில் ஜூலை 1ஆம் தேதியன்று திரு கணபதியின் பிறந்தநாள் மகன்கள், மகள்கள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், நண்பர்கள் என மொத்தம் 150 பேர் சூழ திரு கணபதியின் 100வது பிறந்தநாள் விழா நடந்தேறியது.
கேக் வெட்டித் தமது 100 வயது நிறைவைக் கொண்டாடினார் திரு கணபதி.
திரு கணபதி தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளியில் பாதுகாவலராக பணிபுரிந்தார். பள்ளிப் பாதுகாவலர் என்பதால் அக்காலத்தில் பள்ளியிலேயே அவருக்குக் கொடுக்கப்பட்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்தார்.
தோட்ட வேலை, வாகனம் கழுவுதல் எனப் பள்ளியிலேயே பல்வேறு பகுதிநேர வேலைகளையும் திரு கணபதி செய்துவந்தார். 84 வயதுவரை அப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றார் .
செராயா தொடக்கப்பள்ளி உணவகத்தில் கடை நடத்தி வந்த இவரின் மனைவி திருமதி காவேரி தனுஷ்கோடி, 55 வயதில் ஓய்வு பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
1954ஆம் ஆண்டில் திருமணம் செய்து திரு கணபதியுடன் சிங்கப்பூருக்கு வந்தார் திருமதி காவேரி.
தங்களின் பெற்றோரின் பணிகளில் பிள்ளைகளும் அவ்வப்போது உதவி வந்தனர்.
“அப்பா, அம்மாவின் அயராத உழைப்பு எங்களுக்கு இந்த அளவுக்கு முன்னேற்றத்தைத் தந்துள்ளது. எங்களையும் உழைப்பாளிகளாக எங்கள் பிள்ளைகளுக்கான சிறந்த முன்னுதாரணமாக இருக்க வழிநடத்தியுள்ளனர் எங்கள் பெற்றோர்,” என்றார் 65 வயது மகன் மோகன். “அப்பா என்றுமே எங்களுக்கு ஒரு பலமாக இருந்திருக்கிறார். நேர்மையோடு அயராது உழைத்த எங்களின் வழிகாட்டியாக விளங்குகிறார் அப்பா,” என்று குறிப்பிட்டார் 60 வயது மகள் மைதிலி.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பதற்கு இவர் தனது உணவுமுறையைக் கவனத்தில் கொள்வதுண்டு. இனிப்பையும் அசைவ உணவுவகைகளையும் இவர் அதிகமாக உட்கொள்வதில்லை. சுறுசுறுப்பாக இருக்கிறார். அன்றாடம் செய்தித்தாள், புத்தகங்களை விரும்பி வாசிக்கிறார் திரு கணபதி.
“நிறைவான, மகிழ்ச்சியான நூற்றாண்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். பிள்ளைகள், பேரன் பேத்திகள் எனக் குடும்பத்தினர் எல்லாரும் சிறந்ததொரு நிலையில் இருப்பதே எனக்கு மனநிறைவு,” என்று திரு கணபதி கூறினார்.

