சிங்கப்பூரின் 58வது தேசிய தினக் கொண்டாட்டங்கள் ‘ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம்’ என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ளன.
இந்த அணிவகுப்பு விழாவில் ஆறு முழுமைத் தற்காப்புத் தூண்களைக் குறிப்பிடும் வகையில் சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, இளையர் சீருடைப் படை, ஐந்து மரியாதைக் காவல் அணிகள் உள்ளிட்ட 34 அணிவகுப்புக் குழுக்களைச் சேர்ந்த 1,700க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கொண்ட அணிவகுப்பு இடம்பெற உள்ளது.
அணிவகுப்புத் தளபதி ரகுமாறன்
இந்த அணிவகுப்பின் தளபதியாக முதல்முறையாக நியமிக்கப்பட்டிருக்கிறார் திரு த. ரகுமாறன். 17 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரியும் இவர், விநியோக அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
“பாடாங் அணிவகுப்பின் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது என் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று,” என்றார் திரு ரகுமாறன்.
இந்த தேசிய தின அணிவகுப்பு, இனம், மொழி, சமயத்தைத் தாண்டி அனைத்துச் சிங்கப்பூரர்களையும் ஒன்றிணைப்பதால் மக்கள் இந்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்று இவர் கூறினார்.
பல்வேறு வயதுடைய பங்கேற்பாளர்கள் அணிவகுப்பில் கலந்துகொள்ள உள்ளதால் அனைவரின் உடல் வலிமைக்கும் வயதிற்கும் ஏற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்வது சற்று கடினமாக இருப்பதாகத் திரு ரகுமாறன் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று மாதங்களாக, வாரத்தில் இரண்டு நாள்கள் பயிற்சி நடைபெறும் நிலையில், அனைவரும் முழு ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பங்கேற்பதால் சவால்களைத் தாண்டி பயிற்சி மேற்கொள்வது எளிதாக இருப்பதாகச் சொல்கிறார்.
கடும் வெப்பத்தினிடையிலும் இந்த பயிற்சிகளை வெற்றிகரமாக மேற்கொள்ள இடைவேளைகள் கொண்ட குறுகிய பயிற்சித் திட்டத்தை அளவீடு செய்திருப்பதாகக் கூறிய திரு ரகுமாறன், “எங்கள் பயிற்சிமுறைமீது உறுதியான நம்பிக்கை இருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு அணிவகுப்பை, தேசத்தின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடிய அதே பாடாங் அரங்கிற்கு எடுத்துச் செல்வது ஒரு சிறப்பான உணர்வாக இருக்கிறது,” என்று சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்க் குடியரசு விமானப்படையின் (RSAF) 55வது ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வகையில் கூடுதல் சிறப்புடைய வான் சாகசங்கள், மின்னிலக்க, உளவுச் சேவைப் படையின் அணிவகுப்பையும் மக்கள் முதல்முறையாகப் பார்த்து ரசிக்கலாம் என்றார் திரு ரகுமாறன்.
ஒரே நேரத்தில் பல பொறுப்புகளைச் சமாளிப்பது கடினமாக இருப்பதால் பல நடவடிக்கைகளை முன்னதாகவே திட்டமிட்டு செயல்படுத்துவதாகக் கூறிய இவர், தமக்கு ஆதரவாக இருக்கும் தம் மனைவி வேணி, பெற்றோர், உடன் பணியாற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
சிங்கப்பூர் இளையர்கள் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தில் ஒற்றுமையாக இருந்து சவால்களைச் சந்திப்பதோடு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் திரு ரகுமாறன் கேட்டுக்கொண்டார்.
ரெஜிமென்ட் சார்ஜன்ட் மேஜர் பாண்டிக்குமரன்
அணிவகுப்பு ரெஜிமென்ட் சார்ஜன்ட் மேஜராக இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார் திரு பாண்டிக்குமரன். சிறுவயதில் இருந்தே அணிவகுப்பு, ராணுவப் பயிற்சிகளில் ஆர்வம் கொண்டு சீருடைப் பணியாளராக வேண்டும் என்று விரும்பிய இவர், தொடக்கப்பள்ளியில் பயின்றபோது சிறுவர் படையில் இணைந்தார்.
பின்னர் 1998ல் சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படையில் சேர்ந்த இவருக்கு பாடாங்கில் அணிவகுத்துச் செல்வது லட்சியமாக இருந்தது.
தமது வாழ்நாள் கனவு நனவாக இருக்கும் உற்சாகத்தோடு பேசிய இவர், இந்த அணிவகுப்பு மூலம் சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து நாட்டின் வரலாற்றையும் சாதனைகளையும் கொண்டாடுவதோடு எதிர்காலத்திற்குத் தயாராக அனைவரையும் ஊக்குவிக்கும் ஒரு தளமாக இந்த அணிவகுப்பு அமையும் என்று நம்புகிறார்.
அணிவகுப்பில் பயிற்றுவிப்பாளராக இருந்த தமது கடந்த கால அனுபவம், இந்த தேசிய தின அணிவகுப்புப் பயிற்சியைப் புரிந்து செயலாற்ற உதவியதாக திரு பாண்டிக்குமரன் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுகளில் பணியாற்றிய ரெஜிமென்ட் சார்ஜன்ட் மேஜர்களுடன் தொடர்புகொண்டு அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் அணிவகுப்பில் பங்கேற்கும் வெவ்வேறு குழுக்களுக்கான பயிற்சித்தரங்களை எவ்வாறு அடைவது என்பதையும் புரிந்துகொண்டதாக இவர் சொன்னார்.
அணிவகுப்பில் பங்கேற்கும் அனைவரும் தேசிய தின அணிவகுப்புப் பயிற்சி முழுவதும் ஒன்றிணைந்து முன்னோக்கி நகர்வதைக் காண மனநிறைவாக உள்ளது என்றும் திரு பாண்டிக்குமரன் கூறினார்.
சிங்கப்பூர் ஆகாயப்படை விமானிகளின் திறமையையும் நாட்டைப் பாதுகாப்பதில் உள்ள அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் ‘ஏரோபாட்டிக்’ சூழ்ச்சிகளின் பிரம்மாண்டமான வரிசை நிகழ்வையும் இவர் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.
இந்த வாய்ப்பின் மூலம் தம் தாயார், மனைவி, மகள் ஆகியோரைப் பெருமைப்படுத்த கடின உழைப்பைக் கொடுத்து வருவதாகக் கூறும் திரு பாண்டிக்குமரன், சிங்கப்பூர் இளையர்கள் அனைவரும் நாட்டுப்பற்றோடு இருப்பது நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.