வாழ்வில் 25 ஆண்டுகள் தொண்டுக்கு அர்ப்பணித்த 84 வயதாகும் திருவாட்டி சுசீலா ராஜனுக்கு அண்மையில் அங்கீகாரம் கிடைத்தது. விருது பெற்ற பத்து முன்னோடித் தலைமுறை தொண்டூழியர்களில் திருவாட்டி சுசீலாதான் ஒரே இந்தியர்.
‘ஆர்எஸ்வீபி சிங்கப்பூர்’ (RSVP Singapore) எனும் லாப நோக்கற்ற அமைப்பானது மூத்தோரைத் தொண்டூழியத்தில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு அண்மையில் தனது 25வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
ஆண்டு விழா கொண்டாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இதர மூத்த தொண்டூழியர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. விழாவில் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சரும், சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“இதுபோன்ற அமைப்புகளின் முயற்சிகளால் நம் நாட்டில் இருக்கும் மூத்தோர் முன்னேற்றம் காண முடியும். தொண்டூழியத்தில் ஈடுபடுவதாலும் பிற பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாலும் மூத்தோர் துடிப்பான வாழ்க்கைமுறையைக் கடைபிடிக்கலாம். தொடர்ந்து மூத்தோர் தொண்டில் ஈடுபட்டு வரவேண்டும்,” என்று அமைச்சர் தம் உரையில் வலியுறுத்தினார்.
1998ல் இந்த அமைப்பில் தொண்டூழியராக சேர்ந்த திருவாட்டி சுசீலாவுக்கு மறைந்த அவரது கணவர்தான் தொண்டு மனப்பான்மையை விதைத்தார். இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்து வளர்ந்த திருவாட்டி சுசீலா 1965ல் திருமணமாகி சிங்கப்பூர் வந்தார்.
நான்கு பிள்ளைகளை வளர்த்த பிறகு தனது நேரத்தை பயனுள்ளதாக்கிக்கொள்ள தொண்டு இவருக்கு கைகொடுத்தது. கணவர் ஏற்கனவே ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பில் தொண்டூழியராக இருந்து வந்தது திருவாட்டி சுசீலாவை வெகுவாக ஈர்த்தது.
கேரளாவில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்த திருவாட்டி சுசீலா, சிங்கப்பூருக்கு வந்த புதிதில் பகுதி நேர துணைப்பாட ஆசிரியராக இருந்தார்.
ஆர்எஸ்வீபி சிங்கப்பூர் அமைப்பில் சேர்ந்தபோது திருவாட்டி சுசீலா தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டித் திட்டத்தில் சேர்ந்து அவர்களுடன் கலை அமர்வுகள், கதை சொல்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவ்வப்போது ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்புக்குச் சென்று தொண்டு புரிந்த போதிலும், திருவாட்டி சுசீலாவுக்கு மாணவர்களுடன் நேரம் செலவிடுவது இன்பத்தை அளித்தது. ஏழு பேரப்பிள்ளைகளுக்குப் பாட்டியான இவருக்கு பிள்ளைகள் என்றால் மிகவும் பிடிக்கும். வழிகாட்டியாக இருந்தபோது பல மாணவர்களை சந்தித்த திருவாட்டி சுசீலா, நீண்ட காலம் கழித்து அவர்களை தற்செயலாக பார்க்கும்போது பூரித்து போகிறார்.
முற்காலத்தை ஒப்பிடுகையில் இக்காலத்து சிறுவர்கள் சுதந்திரமாக இருப்பதை சுட்டிய அவர், வாரத்தில் ஒரு நாள் தொண்டுக்கு ஒதுக்கியது போக அமைப்பு ஏற்பாடு செய்யும் பயிற்சி வகுப்புகளுக்கும் சென்றுள்ளார். அவருக்குப் பிடித்த பாட்டு, நடனம், பொது பேச்சு என திறன்களை வளர்த்துக்கொண்டார். கொள்ளை நோயின்போது சில காலம் தொண்டாற்றுவதில் விடுப்பு எடுத்த பிறகு அவர் மீண்டும் தொடங்கினார்.
வயதானாலும் வீட்டில் உட்கார்ந்த படியே தொலைக்காட்சி பார்ப்பது மூத்தோருக்கு பல நோய்களை உண்டாக்கும் என்ற திருவாட்டி சுசீலா தற்போது கடந்த இரண்டு மாதங்களாக தொண்டூழியத்தில் ஈடுபடாமல் இருந்தாலும் வெளியில் நடக்க செல்வது, உடற்பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்குகிறார்.
தொண்டாற்றுவது திருவாட்டி சுசீலாவுக்கு நட்பு வட்டத்தை விரிவாக்கவும், பிறருடன் நன்றாக உரையாடவும் கற்றுத் தந்துள்ளது. கணவருக்குப் பிறகு குடும்பத்துக்கு அரணாக இருக்கும் திருவாட்டி சுசீலா அவர்களுக்கும் இந்த உன்னத பண்பை விதைத்துள்ளார்.
விருது பெற்றதில் பெருமை கொள்ளும் திருவாட்டி சுசீலா, “தொடக்கத்தில் நான் தொண்டுழியத்தில் ஈடுபடும் போது என்னால் நிறைய இந்தியர்களைக் காண முடிந்தது. ஆனால் இப்போது தொண்டில் ஈடுபடும் நம் சமுதாயத்தினர் மிக குறைவு. நாம் முனைப்போடு வந்தால் தான் நம் பிள்ளைகளும் பின் தொடர்வார்கள்,” என்று ஊக்குவித்தார்.