குடும்ப பிணைப்பை வளர்க்க ‘ஐஎம்யூத்’ நடத்திய விழா

2 mins read
e49f5905-b724-4b46-ba8e-92fa8de0f51a
வீட்டிலிருந்து இயங்கும் வியாபாரத்தின் சாவடிகளில் வாடிக்கையாளர்கள் சுவைத்து பார்க்க பலகாரங்கள் இருந்தன - படம்: ஐஎம்யூத்
multi-img1 of 2

‘ஐஎம்யூத்’ (IMYouth) என்ற இந்திய முஸ்லீம் பேரவையின் இளையர் பிரிவு ஜூலை 15ஆம் தேதி ‘சித்ரா’ என்ற ஒரு விழாவை அப்துல் கஃபூர் மஸ்ஜீதில் நடத்தியது. விழாவில் இஸ்லாமிய போட்டிகளும் குடும்ப சவால்களும் நடைபெற்றன.

பெரும்பாலானோர் தொழில்நுட்பத்தின் வழி தொடர்பில் இருக்கும் இன்றைய சமூகத்தில், குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் இவ்விழாவை ஏற்பாடு செய்தோம் என்றார் விழா ஏற்பாட்டு குழு தலைவர் முஹம்மது நவ்ஃபல் சாலிஹ்.

அதில் ஓர் அம்சமாக பெற்றோர்-பிள்ளை ஜோடியாக சேர்ந்து கலந்து கொள்ளும் இஸ்லாம் சார்ந்த கேள்வி-பதில் போட்டி ஒன்று நடைபெற்றது.

ஆதான் அறிவிப்பு, பயான் சொல்வது, குர்ஆன் வாசிப்பு என பிள்ளைகளுக்கு பல இஸ்லாமிய போட்டிகளும் நடந்தன. அவர்கள் தங்கள் சமயத்தைப் பற்றி கற்றுக்கொள்ள இப்போட்டிகள் ஊக்கமளித்தன என்றார் விழாவை காண வந்த சஃபியா நபிலா.

ஆடைகள், பலகாரங்கள், வாசனை திரவியம், மருதாணி சேவைகள் என பலவிதமான பொருட்கள் விற்கும் வீட்டிலிருந்து இயங்கும் வியாபாரங்கள் ஒரே இடத்தில் ஒன்று திரண்டது விழாவின் இன்னொரு சிறப்பம்சம். மஸ்ஜீதில் சாவடிகள் அமைத்து, அவர்கள் விற்கும் பொருள்களை விளம்பரம் செய்ய இவ்விழா வாய்ப்பளித்தது.

வாடிக்கையாளர்களை ஈர்க்க விழா பயனளித்தது என்றார் ‘டிரையல்ஸ் டிசைன்ஸ்’ உரிமையாளர் பரகத் நிஷா. மேலும், மற்ற வியாபார உரிமையாளர்களுடன் பழகி, நட்பு வட்டத்தை விரிவாக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது என்றார். வியாபாரத்தை வளர்க்க இம்மாதிரியான வாய்ப்புகள் இன்னும் தேவை என்று கூறினார்.

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் சாவடி அமைத்த வியாபாரங்களுக்கும் ஆதரவு அளிக்க பல வயதினரும் விழாவிற்கு வருகை தந்தனர்.

சித்ரா விழாவை ஏற்பாடு செய்தது சவாலாக இருந்தாலும், அதை வெற்றிகரமாக வழிநடத்தியது ஏற்பாட்டு குழுக்கு திருப்தியான அனுபவமாக இருந்தது என்று நவ்ஃபல் கூறினார்.

azmina@sph.com.sg

குறிப்புச் சொற்கள்