மூப்படையும் சிங்கப்பூர் சமுதாயம் குறித்த எண்ணங்களையும் அவர்களுக்குத் தேவையான ஆற்றல்களையும் கொண்டு செல்ல நிறுவனங்கள், சமூக அமைப்புகளின் ஆதரவை மேம்படுத்த சிங்கப்பூர் தரநிலை 693 ஜெராகோஜி வழிகாட்டுதல் (எஸ்எஸ் 693) என்ற திட்டம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
மூப்படையும் நம் சமுதாயத்தை சிங்கப்பூரின் வளர்ச்சியில் சேர்த்துக் கொண்டு மேம்படுத்த ‘கவுன்சில் ஃபொர் தர்ட் ஏஜ்’ (சி3ஏ) என்ற அமைப்பு இந்த திட்டத்தை அமைத்துள்ளது.
இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர், மூப்படைதல் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் திரு ஓங் யீ காங் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்தார்.
“உடல் நலம் மட்டுமின்றி முதியோர்களின் அறிவாற்றலும் துடிப்புடன் செயல்பட அவர்களுக்கு வாழ்நாள் கற்றல் வாய்ப்புகள் தேவை. புதிய திறமைகளை வளர்க்கவும் புதிய அனுபவங்களைப் பெறவும் இந்த திட்டம் வழிவகுக்கும் என்று நம்புகிறோம்,” என்று அமைச்சர் தன் உரையில் குறிப்பிட்டார்.
இதில், குவாங் வை ஷியு மருத்துவமனை, லவ்விங் ஹார்ட் பல சேவை மையம், RSVP சிங்கப்பூர், ஃபெய் யூ சமூக சேவை அமைப்பு, கரையோரப் பூந்தோட்டங்கள் நிறுவனம், ஒருங்கிணைந்த பராமரிப்பு ஏஜென்சி, மான்ட்ஃபோர்ட் கேர் நிறுவனம் ஆகியவற்றுடன் சேர்ந்து அமைக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்தத் திறப்பு விழாவின்போது அறிவித்தது சி3ஏ அமைப்பு.
கிட்டத்தட்ட 8,500 முதியோருக்கு அவர்களின் ஆற்றல்களை வளர்க்கும் வாய்ப்புகளை இந்த அமைப்புகள் அளிக்கும். சிங்கப்பூரில் உள்ள முதியோர்களுக்கு இடையே தொண்டூழியம், கற்றல் வளர்ச்சி போன்ற வாய்ப்புகளை இத்திட்டம் அமைத்துக் கொடுக்கிறது.
இந்த அமைப்பின் திட்டங்களால் பல நன்மைகளை பெற்ற பிரிம்லா சக்சேனா, எஸ்எஸ் 693 திட்டம் இவரைப் போல பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் உதவும் என்று பகிர்ந்துகொண்டார்.
“இந்த வயதில் என் ஆசைகளைப் பற்றி மட்டும் கவலைப்படாமல் மற்றவர்களுக்கு உதவ நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்னைப் போன்ற முதியோருக்கு சுறுசுறுப்பாக செயல்பட இந்தத் திட்டம் எங்களுக்கு உதவுகிறது,” என்றார் 74 வயதான இவர்.
தொடர்புடைய செய்திகள்
ஒப்பனைக் கலைப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற இவர், கடந்த ஆறு ஆண்டுகளாக தொண்டூழியம் செய்து வருகிறார். தற்போது ஓவியராக இருக்கும் இவர் சி3எ அமைப்பின் தேசிய சில்வர் கல்விநிலையத்தில் திறன் மேம்பாட்டு வகுப்புகளை நடத்திவருகிறார்.
இதற்குமுன் பல நிகழ்ச்சிகளில் தொண்டூழியராக சேவையாற்றி வரும் இவர் முதிய தொண்டூழியர்களுடன் சேர்ந்து இவ்வாண்டு தேசிய தின சமூக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
வேலை இடங்களில் முதியோரைச் சேர்த்துக்கொள்ள நிறுவனங்கள், சமூக அமைப்புகள், அதன் பங்காளிகளும் என்ன செய்யலாம் என்பதை இந்தத் திட்டம் விளக்குகிறது. அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் முதியோர்களை கையாளும் உத்திகளும் இத்திட்டம் சொல்லிக்கொடுக்கும். முதியோர்கள் அதிகமாக பணிபுரியும் துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் தவிர்த்து மற்ற துறைகளும் இந்த திட்டத்தில் பங்குபெறுவதாக சொன்னார் சி3ஏ அமைப்பின் நிர்வாக அதிகாரி, திருமதி சோ சுவி பிங்.
அறிமுக விழாவில் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பல நிபுணர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

