தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருதளிப்பு விழா 2023

3 mins read
bde67422-7905-43a7-9aed-3e55e718be32
 நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி அரங்கில் நடைபெற்ற கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருதளிப்பு விழா. - படம்: லாவண்யா வீரராகவன்

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் (சிடிஏசி), யூரேசியன் அசோசியேஷன் (இஏ), யாயாசன் மெண்டாக்கி உள்ளிட்ட சுய உதவி குழுக்கள் இணைந்து நடத்தும் 20 வது கூட்டு துணைப்பாட கல்வி விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 26 அன்று நடைபெற்றது.

கலாசார, சமூக, இளையர் அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் நாடாளுமன்றச் செயலாளர் திரு. எரிக் சுவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இவ்விழா ஆங் மோ கியோவில் உள்ள, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெற்றது.

சுய உதவிக்குழுக்களால் கூட்டாக நடத்தப்படும் துணைப்பாட பயிற்சி திட்டத்தில் பங்குபெற்று, நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு 2004 ஆம் ஆண்டிலிருந்து இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டு, நான்கு இனங்களைச் சேர்ந்த தொடக்க, உயர்நிலை, ‘ஓ’ நிலை உள்ளிட்ட தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் 869 பேர் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து ஒரு மன்றத்திற்கு நான்கு பேர் என 16 பேர் சிறந்த செயல்திறன் விருது பெற்றனர் (best overall performer award).

இத்திட்டம் 11 கூட்டு துணைப்பாட பயிற்சி மையங்களோடு (Collaborative Tuition Programme Centres) 2002 ஆம் ஆண்டு தொடங்கி, 2023 ஆம் ஆண்டு 175 மையங்களோடு சிறப்பாக செயலாற்றி வருகிறது.

இத்திட்டம் அனைத்து இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எந்தவொரு சுய உதவிக் குழுக்கள் நடத்தும் கல்வி மையத்திலும் சேருவதற்கான வசதியை வழங்குகிறது.

மில்லேனியா கல்வி நிலையத்தில், பல்கலைக்கழகப் புகுமுகக் கல்வி (Pre University) ஒன்றாம் நிலையில் பயிலும் 17 வயதாகும் நிஜாம் முஹைதீன் ஹார்டியானா, ஓ நிலையில் 15 மதிப்பெண்கள் பெற்று விருது பெற்றுள்ளார்.

“உயர்நிலை கல்வியைத் தொடங்கியபோது மிகவும் குறைந்த மதிப்பெண்களே பெற்று வந்தேன். பின்னர் சிண்டா துணைப்படை வகுப்புகளில் சேர்த்தனர் என் பெற்றோர். அங்கு கிடைத்த ஊக்கத்தினால் என்னால் இறுதித் தேர்வுகளில் நன்கு செயலாற்ற முடிந்தது” என்கிறார்.

காவல் துறையில் இணைய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற விழையும் இவர், சிங்கப்பூரில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் இணைத்து கல்வி பயில ஆர்வமுள்ளதாகக் குறிப்பிடுகிறார். அதற்கான ஊக்கமும் தற்போது தனக்கு உள்ளதாக கருதுகிறார்.

மில்லேனியா கல்வி நிலையத்தில், பல்கலைக்கழகப் புகுமுகக் கல்வி (Pre University) ஒன்றாம் நிலையில் பயிலும் 17 வயதாகும் நிஜாம் முஹைதீன் ஹார்டியானா.
மில்லேனியா கல்வி நிலையத்தில், பல்கலைக்கழகப் புகுமுகக் கல்வி (Pre University) ஒன்றாம் நிலையில் பயிலும் 17 வயதாகும் நிஜாம் முஹைதீன் ஹார்டியானா. - படம்: சிண்டா

ஓ நிலையில் 17 புள்ளிகள் பெற்று விருது பெற்ற மற்றொரு மாணவி இ. ஹர்ஷினி,17 கூறுகையில், கடந்த ஆண்டு வேதியியல், கணக்கு பாடங்களுக்கான துணைப்பாட பயிற்சியில் இணைந்தேன். அங்குள்ள ஆசிரியர்கள், எனக்கு புரியும் வரை திரும்பத் திரும்ப பொறுமையுடன் சொல்லிக்கொடுத்து என்னை நல்ல மதிப்பெண் பெற வைத்தார்கள் என்றார்.

தற்பொழுது நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதியர் பணிக்கான கல்வியை மேற்கொண்டுள்ள இவர், எதிர்காலத்தில் குழந்தைகள் நல மருத்துவத் துறையில் தாதியாகப் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதியர் பணிக்கான கல்வியை மேற்கொண்டுள்ள இ. ஹர்ஷினி.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதியர் பணிக்கான கல்வியை மேற்கொண்டுள்ள இ. ஹர்ஷினி. - படம்: சிண்டா

தொடக்கநிலையில் 13 புள்ளிகளுடன் தேர்ச்சி பெற்று விருது பெற்ற காமன்வெல்த் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஜோசப் ராஜ் சஜிவ் சுமித், 12 கூறுகையில், நான் சில பாடங்களில் தோல்வி அடைந்திருக்கிறேன். கடந்த 6 மாதங்களாக சிண்டா துணைப்பாட வகுப்புகளில் கொடுக்கப்பட்ட பயிற்சித் தாள்கள் பாடங்களை நன்கு பயிற்சி செய்ய வாய்ப்பாக அமைந்தது” என்றார்.

காமன்வெல்த் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஜோசப் ராஜ் சஜிவ் சுமித்.
காமன்வெல்த் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஜோசப் ராஜ் சஜிவ் சுமித். - படம்: சிண்டா

மூவருமே சிண்டாவிற்கும், அங்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

இதுகுறித்து சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் கூறுகையில், “ஒரு சமுதாயம் வெற்றி பெற முக்கியத் தேவை கல்வி தான். குடும்பத்தில் ஒருவரேனும் கல்வி கற்பாராயின், அந்த தனிநபர் தொடங்கி, குடும்பம், சமூகம் என எல்லாமே மேம்படும். 32 ஆண்டுகளாக சிண்டா இதைத்தான் தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கி வருகிறது” என்றார்.

மேலும் அவர், இந்த விருதின் நோக்கம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் உத்வேகமும் அளிப்பது தான். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு இவ்வாண்டு விருது பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். மாணவர்களின் விடாமுயற்சியின் வெளிப்பாடு தான் இது எனவும் தெரிவித்தார்.

அவர்களின் உழைப்பை அங்கீகரிப்பது தான் நம் முக்கிய நோக்கம் என்று கூறிய அவர் விருது பெற்ற மாணவர்களுக்கு தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் பதிவு செய்தார்.

குறிப்புச் சொற்கள்