தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலமன் பாப்பையா தலைமையில் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் அறிமுகம்

2 mins read
dc3b0fb1-1391-428c-8598-f35b03f59ab9
‘தலைமுறை தாண்டியும் தமிழ்’ என்னும் தலைப்பு தொட்டுப் பேசியவர்கள், தமிழ் மொழியை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் கடமை அனைவருக்கும் உள்ளதென்றனர். - படம்: வடிவேல் பத்மநாபன்

தெற்காசியாவின் முதல் வானொலி நிலையமான இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் திரு பி ஹெச் அப்துல் ஹமீது எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் அறிமுக விழா சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்றது.

தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு. ஹரிகிருஷ்ணன் வரவேற்புரை வழங்க, பட்டிமன்ற நடுவரும் தமிழ் அறிஞருமான திரு சாலமன் பாப்பையாவும் திரு அப்துல் ஹமீதும் வெளியிட, சிறப்பு விருந்தினரான எம்இஎஸ் குழும இயக்குநர் திரு. முகமது ஜலீல் பெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய திரு அப்துல் ஹமீது, “இயன்ற அளவு நாம் அனைவரும் பிறமொழிக் கலப்பில்லாத தமிழில் பேசிப் பழகுவது அவசியம். பெயர்ச் சொற்களுக்கு தமிழாக்கம் கண்டுபிடிப்பதைவிட, நாம் கண்டறியும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, தமிழில் பெயரிட்டு எல்லா நாட்டினரும் அதனை உச்சரிக்கச் செய்வதுதான் தமிழுக்குப் பெருமை,” என்று குறிப்பிட்டார்.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மதிப்புமிக்க கருத்துகள் ஒருபுறம் சிறப்பாக இருக்க, எழுதப்பட்டிருக்கும் விதம் அனைவரையும் ஈர்க்கும்படி அமைந்திருப்பதாக பாராட்டிப் பேசினார்.

‘தலைமுறை தாண்டியும் தமிழ்’ எனும் தலைப்பில் திரு சாலமன் பாப்பையா தலைமையில் கருத்துக் களம் நடைபெற்றது. முனைவர் மன்னை க இராஜகோபாலன், தமிழ் மொழியின் பழமையையும் பெருமையையும் பகிர, முனைவர் இரத்தின வெங்கடேசன், அடுத்த தலைமுறையினருக்குத் தமிழ் மொழியைச் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளதென்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும் ‘எக்ஸோஸிஸ் டெக்னாலஜி’ நிறுவனருமான திரு. வடிவேல் பத்மநாபன் கூறுகையில், “நம் முன்னோர்கள் வரலாற்றில் பல பதிவுகளை எழுதாமல் விட்டது நமக்குப் பேரிழப்பு,” என்றார்.

“அடுத்த தலைமுறையினர் அறிந்திராத வானொலியின் வரலாற்றை திரு அப்துல் ஹமீது ஆவணப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது. ஏழு நாடுகளுடன் நூல் அறிமுக விழாவை முடிக்கவிருந்த ஹமீது அவர்களிடம், சிங்கப்பூரிலும் வெளியிடச் சொல்லி விடுக்கப்பட்ட வேண்டுகோளை அவர் ஏற்றார். இது நமக்குப் பெருமை,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்