பணப் பரிவர்த்தனை தொடங்கி, நாணய மாற்று, வெளிநாடுகளில் பயன்படுத்தக்கூடிய அந்நிய செலாவணி அட்டை (Forex Card) என அனைத்தையும் ஒரே செயலியில் அடக்கி உள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த ஃபின்டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு சுரேஷ் பார்த்தசாரதி.
நிதித் துறையில் இருந்துவரும் பெரும் சவால்களுக்கு ஃபின்டெக் நிறுவனங்கள் தீர்வு கண்டுள்ளன. ஏறத்தாழ அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளும் மின்னிலக்கமயமாகிவிட்டன.
அதன் நீட்சியாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பணத்தை அனுப்புவதில் தொடங்கி, பல நாடுகளுக்குச் சென்று செலவழிக்க ரொக்கம், மின்னிலக்கப் பரிவர்த்தனைக்கு ஏதுவான ‘வாலட்’, பற்று அட்டை உள்ளிட்ட ஒருங்கிணைந்த தளமாக உள்ளது இவர் உருவாக்கி இருக்கும் ‘ஐசேஞ்ச்’ (iChange) செயலி.
ஏறத்தாழ 24 வருடங்களாக நிதித் துறையில் பணிபுரிந்து வரும் சுரேஷ், கடந்த ஆண்டு இந்தச் செயலியை உருவாக்கத் திட்டமிட்டார். சிங்கப்பூரைச் சேர்ந்த நாணய மாற்று வணிகர்கள் ஆறு பேருடன் இணைந்து இந்தச் செயலி உருவாக்கத்தின் அடுத்த நிலைக்குச் சென்றார்.
சிங்கப்பூர் நாணய ஆணையம், நிதித் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக வழங்கும் நிதி உதவியோடு, அனுவா குரூப் நாணய மாற்று நிறுவனம், அரிசா நாணய மாற்று நிறுவனம், இகாபா நாணய மாற்று நிறுவனம், ஷென்டன் நாணய மாற்று நிறுவனம், ஷின்னிங் நாணய மாற்று நிறுவனம் உள்ளிட்டவை இந்தச் செயலியின் உருவாக்கத்தில் ஒத்துழைப்பு நல்கின.
“சிங்கப்பூரில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட நாணய மாற்று வணிக நிறுவனங்கள் இருக்கின்றன. சிங்கப்பூர் ஒரு தொழில்துறை மையமாக விளங்குகிறது. இங்கு வரும் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கையும் அதிகம். இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். சிங்கப்பூரில் இருந்து வெறும் நாற்பதே கிலோமீட்டர் தாண்டினால் நமக்கு வேறு நாணயம் தேவைப்படலாம்,” என்றார் சுரேஷ்.
இதனால் இங்கு நாணய மாற்று வணிகர்களின் தேவை இன்றியமையாதது. பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின் அனைத்தும் மின்னிலக்கமாகிவிட்ட நிலையில், இந்த நாணய மாற்றுக்கான ஒன்றிணைந்த செயலி உருவாக்கத்திற்கு இதுவே உந்துதலாக இருப்பதாகத் தெரிவித்தார் சுரேஷ்.
‘ஆக்டிவ்எஸ்ஜி’ உள்ளிட்ட பல செயலிகளை உருவாக்கிக் கண்காணித்து வரும் ஐஆப்ஸ் நிறுவனம், இந்தச் செயலியையும் உருவாக்கிப் பராமரித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட நாணய மாற்று வணிக நிறுவனங்கள் இருப்பதால் சிறந்த மாற்று விகிதம் தருகிறார்கள் என்பதை அறிந்து தேர்வு செய்யலாம் என்றார்.
அதோடு, ஒரே நேரத்தில் ‘வாலட்டில்’ பல்வேறு நாடுகளின் பணத்தை வைத்துக்கொள்ளலாம். குறுகியகால பரிவர்த்தனைகளுக்காக மெய்நிகர் பற்று அட்டை உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் சுரேஷ்.
சிங்கப்பூர்வாழ் மக்களுக்கே உரிய இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, ‘சிங்பாஸ்’ மூலம் கணக்குத் தொடங்கிப் பயன்படுத்தலாம். இது நாணய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்பதால் இந்த ‘வாலட்டில்’ இருக்கும் பணம் முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்கும் என்றார் சுரேஷ்.
மேலும், ஒரே கணக்கில் பல பற்று அட்டைகளை வாங்கிப் பயன்படுத்தலாம் என்பதால், வெளிநாட்டில் வாழும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக வெளிநாட்டு ஊழியர்கள் பயன்படுத்த ஏதுவாகவும் இது இருக்கும்.
கடந்த ஜுன் மாதம் வெளியிடப்பட்ட இந்தச் செயலியை, இதுவரை 2000 பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர் சேவையும் வழங்கப்படுகிறது என்கிறார் சுரேஷ்.
தொடர்ந்து வேறு பல நாடுகளுக்கும் மின்சாரக் கட்டணம், வீட்டு வரி, குடிநீர்க் கட்டணம், அலைபேசி, இணைய சேவைக் கட்டணங்கள் என அனைத்திற்கும் இதிலிருந்து கட்டும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.
சில நாடுகளுக்கு இந்தச் சேவைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன.
எந்த நாடானாலும் அனைத்துக்கும் பயன்படுத்தக்கூடிய ஓர் ஒருங்கிணைந்த தளமாகத் தங்கள் செயலியை உருவாக்குவதே தங்களது லட்சியம் என்றார் திரு சுரேஷ்.