மெதுவோட்டம் ஓடுவது என்றாலே வெறுப்படையும் டாக்டர் ஜெயப்ரியா சத்யன், அதற்கு மாறாக பெண்கள் பங்குகொள்ளும் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்.
வரும் அக்டோபர் 29ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் ‘கிரேட் ஈஸ்டர்ன் பெண்கள் ஓட்டம் 2023’ போட்டி, பெண்களுக்காக மட்டும் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ஒரு நிகழ்வு.
பெண்கள் தங்களின் உடல்நலத்தின்மீது அக்கறைகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்நிகழ்வில் டாக்டர் ஜெயப்ரியா, தமது ஒன்பது வயது மகளுடன் ‘அம்மாவும் நானும்’ எனும் பிரிவில் இரண்டு கிலோமீட்டர் தொலைவும், அதன்பிறகு தன் தோழியுடன் சேர்ந்து மற்றொரு பிரிவில் 10 கிலோமீட்டர் தொலைவும் ஓடவுள்ளார்.
வெறும் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வதால் தன்னால் துணிவோடு ஓட முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் 39 வயதான ஜெயப்ரியா, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பந்தயத்தில் தன் தோழியுடன் பங்குகொண்டார்.
அடிக்கடி மூவாட்டப் போட்டியில் (triathlon) கலந்துகொள்ளும் அத்தோழியைக் கண்டு உத்வேகம் அடைந்தார் டாக்டர் ஜெயப்ரியா. பாரம்பரிய இந்திய நடனமான பரதநாட்டியத்தை கற்றுத்தேர்ந்துள்ள இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். அதைவிட அதிகப் பொறுப்பு இருப்பது அவரது மருத்துவ பணி.
கேகே மகளிர்,சிறார் மருத்துவமனையில் சிறுவர்களுக்கான அவசர மருத்துவப் பிரிவில் இணை ஆலோசகராக வேலை செய்யும் ஜெயப்ரியா ஒரு கட்டத்தில் பிள்ளைகளின் வளர்ச்சியில் அதிக நேரமும் கவனமும் செலுத்தி வந்ததால் தனது உடலுறுதியில் கவனத்தை இழக்கத் தொடங்கினார்
பிள்ளைகள் ஓரளவு வளர்ந்த பிறகு மீண்டும் உடல்நலத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதில் தொடங்கிய இவர், தற்போது யோகா, பரதநாட்டியம், பிலாட்டீஸ் (pilates) போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
மருத்துவர் என்ற நிலைக்கு அப்பாற்பட்டு, பெண்களின் நல்வாழ்வுக்கு ஊக்குவிக்கும் விதமாக இப்பந்தயத்தில் பங்குகொள்கிறார் டாக்டர் ஜெயப்ரியா.
திருமணமான பிறகு தங்கள் உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்தாத பெண்கள், உடல்எடை அதிகமாகவும், அழகான உடற்கட்டு இல்லாமலும் மனக்குறையுடன் வாழும் பெண்கள் போன்றவர்களுக்கு ஓட்டப்பந்தயத்தின் மூலம் தன்னம்பிக்கை அளிக்க விரும்புகிறார் இவர்.
அதையும் தாண்டி, தன் பெற்றோரின் உடல்நிலையும் பந்தயத்தில் கலந்துகொள்ள டாக்டர் ஜெயப்ரியாவிற்கு உந்துதலாக அமைந்தன. பல ஆண்டுகாலமாக நீரிழிவு நோயால் அவதிப்படும் தந்தையும், எலும்புப்புரை, முதுமை மூட்டு அழற்சியால் வேதனைப்படும் தாயும் டாக்டர் ஜெயப்ரியா தனது உடல்நலத்தில் கவனம் செலுத்தத் தூண்டுதலாக இருக்கின்றனர்.
தந்தை துடிப்பான வாழ்க்கைமுறையை இப்பொழுது பின்பற்றுவதும், தாய் மூத்தோருக்கான உடற்பயிற்சி க்கூடத்துக்கு செல்வதும் டாக்டர் ஜெயப்ரியாவுக்கு மேலும் ஊக்கமளித்தன. பெரும்பாலும் இரவுப் பணி என்பதால், பிற்பகல் வேளையில் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதையும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதையும் இவர் முதன்மையாக வைத்துக்கொள்கிறார்.
கணவர் சிங்கப்பூர் ஆகாயப் படையில் பணிபுரியவே இருவரும் பரபரப்பான வாழ்க்கைமுறையை கடைபிடிப்பதால் உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் தனது மனநலத்தையும் பேண முடிவதாக டாக்டர் ஜெயப்ரியா கூறினார்.
இப்போதெல்லாம் இளவயதிலேயே நீரிழிவு, உடல் பருமன் பிரச்சினை வருவதற்கான ஆபத்து அதிகமாக கண்டறியப்படுவதாக இவர் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.
உழைப்பில்லாத வாழ்க்கைமுறையே அதற்கு முதன்மையான காரணம் என்று கூறும் டாக்டர் ஜெயப்ரியா, சிறுவர்கள் அதிக நேரம் மின்னிலக்கக் கருவிகளில் மூழ்கி இருப்பதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
மேலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது சிறந்தது என்று குறிப்பிடும் இவர், தானும் அதனைக் கடைப்பிடிக்கிறார்.
நேரம் கிடைக்கும்போது டாக்டர் ஜெயப்ரியாவும் அவருடைய குடும்பத்தினரும் ஜேக்கப் போலஸ் சிறுவர்கள் தோட்டத்தில் நேரம் செலவிடுகின்றனர்.
தொடக்கப்பள்ளி மூன்றாம் வகுப்பில் பயிலும் மகள் ஷக்தி சத்யன் மெதுவோட்டம் ஓடுவது, நீச்சல் அடிப்பது முதலிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு இன்பம் காண்கிறார்.
தாயாருடன் இணைந்து ஓட்டப்பந்தயத்தில் முதல்முறையாக பங்குகொள்ளும் ஷக்தி, “இந்த ஓட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு உற்சாகமாக இருக்கிறது. என் அம்மா இரண்டு முறை ஓடுவதால் அவருக்கு நான் ஆதரவு அளித்து அவருடன் ஒன்றாக ஓடுவேன்,” என்று சொன்னார்.
விருப்பம் இருந்தாலும், குடும்பப் பொறுப்புகளாலும் பணிச்சுமையாலும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க பெண்கள் தடுமாறுகின்றனர்.
இந்நிலையில், “குடும்ப ஆதரவு, பிறருடன் ஒப்பிட்டு தன்னைக் குறைவாக மதிப்பிடாமல் இருப்பது, சரியான உடற்பயிற்சி ஆடையை அணிவது, எதையும் முயன்று பார்த்த பிறகு முடிவெடுப்பது ஆகியவற்றில் கவனம் வைத்தால், எந்த பெண்ணாலும் அழகாகத் தோற்றமளிக்க முடியும்,” என்று உறுதியுடன் கூறினார் டாக்டர் ஜெயப்ரியா.
அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் தோற்றப் பொலிவைக் கூட்டுவதும், நெட்டோட்டத்தில் பங்குகொள்வதும் இவரது இலக்கு.
இந்தத் தாய்-மகள் போல, ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://web.42race.com/race-bundle/gewr2023 எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.