அங்கீகாரத்தையே எதிர்பார்க்காமல் தொண்டுபுரிந்துவரும் தன்னலமற்றவர்களைக் கெளரவித்தது சிங்கப்பூர் ‘சைலண்ட் ஹீரோஸ்’ பத்தாவது ஆண்டு பரிசு விழா.
பொதுமக்கள் கழகம் சிங்கப்பூர் (சிஏஎஸ்) ஏற்பாட்டில் வியாழன் செப்டம்பர் 28 இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைசிறந்த தொண்டூழியம் புரிந்தோருக்கு துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் விருதுகள் வழங்கினார்.
இவ்வாண்டு சாதனையளவில் 111 நியமனங்கள் பெறப்பட்டன. 26 பேர் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்று, ஐந்து வெற்றியாளர்கள் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டனர்.
‘அன்பான வெளிநாட்டவர்’ பிரிவில் விருது பெற்றவர் திரு ஷஃபிக்குல் இஸ்லாம், 40.

பங்ளாதேலிருந்துவரும் இவர், ‘கொவிட்’ காலத்தில், மனிதவள, சுகாதார அமைச்சுகள் இணையத்தில் வழங்கிய தகவல்களை மொழிபெயர்த்து, வெளிநாட்டு ஊழியர்களுக்கு சமூக ஊடகங்கள்வழி பரப்பினார். அவர்களது மனநலத்திற்கு கேளிக்கையான காணொளிகளையும் பதிவேற்றினார்.
மாதந்தோறும் ஞாயிறுகளில் வெளிநாட்டு ஊழியர்களின் வசிப்பிடங்களுக்குச் சென்று அவர்களது சொந்த மொழியிலேயே மருத்துவ ஆலோசனை வழங்கும் ‘வாண்டரிங் டேர்விஷஸ்’ அறப்பணியிலும் மேலாளர் பொறுப்பு ஏற்றுவருகிறார் இவர்.
மேல்விவரங்களுக்கு: (https://www.thewanderingdervishes.com/)

‘உறுதியளிக்கும் முன்னோடி’ பிரிவில் திரு ரேமண்ட் ஏந்தனி ஃபர்னேன்டோ, 73, தேர்வுசெய்யப்பட்டார். மனநலப் பிரச்சினையால் தற்கொலை செய்யவிருந்த ஒருவரது உயிரைக் காப்பாற்றி, தன் வாழ்க்கைக் கதையை நூலாக வெளியிடும் அளவிற்கு மறுமலர்ச்சியளித்ததற்கு விருது பெற்றார்.
‘தலைசிறந்த பெரியவர்’ பிரிவில் 12 ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவியுடன் அரியவகை நோய்கள் கழகத்தைத் (ஆர்டிஎஸ்) தோற்றுவித்த திரு கெனத் மா, 53, அங்கீகரிக்கப்பட்டார். இக்கழகம், 180 நோயாளிகளையும் அரியவகை நோய் கொண்டவரோடு வாழும் 700க்கும் மேற்பட்டோரையும் ஆதரிக்கிறது.
‘முன்மாதிரி இளையர்’ பிரிவில் வென்ற திரு டோ யூ சின், 35, காது கேளாதவர்களுக்கு 13 ஆண்டுகளாக சேவையாற்றியுள்ளார். சிங்கப்பூர் காது கேளாதவர் சங்கத்தின் ‘இக்னைட்டர்ஸ்’ தொண்டூழியப் பிரிவை 2006ல் தொடங்கி, 100க்கும் மேற்பட்ட தொண்டாளர்களுக்குப் பயிற்சியளித்துள்ளார்.
‘மனிதநேய நெஞ்சம்’ பிரிவில் வென்ற திருவாட்டி மேரி லோ, 41, பெருமூளை வாதத்துடன் பிறந்தவர். தனக்கென வாழ்வமைக்க, ஒரு சிறு தள்ளுவண்டி வியாபாரத்தை 2008ல் தொடங்கினார்.
மூத்தோர், வசதி குறைந்தோர், சிறப்புத் தேவைகள் உடையோர் செய்த பொருள்களை மறுவிற்பனை செய்து, அவர்களுக்கு ஆதரிக்கிறார். தன் சம்பாத்தியத்தில் பெருமூளை வாத கூட்டணிக்கும் நன்கொடையளித்துவருகிறார்.

இவ்வாண்டு முதன்முறையாக 9 பள்ளிகளிலிருந்து 19 மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

