இளையர் சார்ந்த முக்கியக் கருத்துகளை முன்வைத்தது வளர்தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘கதைப்போமா? வாங்க பேசலாம் 2023’ நிகழ்ச்சி.
சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகத்தில் அக்டோபர் 7ஆம் தேதியன்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வாண்டு முதன்முறையாக நடக்கும் இநிகழ்ச்சியில் மூன்று பேச்சாளர்கள் ‘டெட்’ பேச்சுவடிவில் பகிர்ந்தனர். அதைத் தொடர்ந்து பார்வையாளர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
முதல் பேச்சாளர், தமிழாசிரியை கங்காதரன் காஞ்சனா, ‘சமூக ஊடகங்களின் பயன்பாடும் தாக்கங்களும்’ என்ற தலைப்பில் பேசினார். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை விளம்பரப்படுத்துபவர்கள், குற்றங்கண்டுபிடிப்பவர்கள், இணைய அச்சுறுத்தல்களில் ஈடுபடுவோர் என மூன்று பிரிவினர்களாக வகைப்படுத்திப் பேசினார்.
சமூக ஊடகங்களில் உள்ள ஒருசில பகிர்வுகள் பிறரிடத்தில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் போலித் திரையென அவர் சுட்டினார்.
எனவே, சமூக ஊடகங்களில் உண்மை எது, பொய் எது என பகுத்தறிந்து செயல்படுமாறு கோரிக்கை விடுத்தார் அந்தத் தமிழாசிரியை.
இரண்டாம் பேச்சாளர், ‘கொவிட்-19’ பெருந்தொற்றின் ஆரம்பகாலத்தில் தடுப்பூசித் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் பெரும்பங்காற்றிய திரு தினேஷ் வாசு தாஸ். இவர் சுகாதார அமைச்சின் குழு இயக்குநராகப் பணிபுரிகிறார்.
தன் செயற்குழுவிடமிருந்து கற்றுக்கொண்டதை மூன்று குட்டிக் கதைகளாகப் பகிர்ந்துகொண்டார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
‘கொவிட்-19’ நோயாளிகளுக்கும் பிறருக்கும் இடையிலான தொடர்புத் தடங்களைப் பற்றி விசாரித்து, நோய் பரவலைத் தடுத்த திருவாட்டி லலிதாவின் விடாமுயற்சியைப் பாராட்டிப் பேசினார்.
அடுத்ததாக, முதியோருக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்கும் திட்டத்தையும், பாலரிடையே தடுப்பூசி அச்சத்தைக் குறைக்கப் பாலர் பள்ளிகளையே தடுப்பூசி மையங்களாக்கும் முயற்சியையும் தொடங்கிய கர்னல் டான் லியோங் பூனின் தேசப்பற்றை விவரித்தார்.
“நீங்கள் நிறையச் செய்துள்ளீர்கள், சற்று ஓய்வு எடுக்கலாமே,” என்று ஒரு நாள் திரு தினேஷ் கேட்டதற்கு திரு டான், “இது உங்களுக்காகவோ எனக்காகவோ செய்யவில்லை. நாட்டிற்காகச் செய்கிறேன்,” என்றார்.
மூன்றாவதாக, தடுப்பூசி நிலையத்தைச் சாங்கி விமான நிலையத்தில் அமைக்க வழிவகுத்த திரு ஆல்வின் லீயின் படைப்பாற்றலையும் மெச்சினார்.
இறுதிப் பேச்சாளர் ‘சிஎன்ஏ’ செய்திப் படைப்பாளர் திருவாட்டி இலக்கியா செல்வராஜி.
‘மாறிவரும் இன்றைய சூழலில் சரியான வாழ்க்கை முடிவுகளை எப்படி எடுப்பது?’ என்ற தலைப்பில் பேசினார் அவர். நாம் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியாக இருக்கும் என சொல்லமுடியாது; ஆனால், அவற்றை நம்மால் சரியாக்கிக்கொள்ளமுடியும் எனத் தன் சொந்த வாழ்வை சான்றாகக் காட்டிப் பேசினார்.
பல்கலைக்கழகப் படிப்பைத் தேர்ந்தெடுக்கச் சிரமப்பட்ட இலக்கியா, தன் பெற்றோரின் ஆலோசனைப்படி பொருளியல் படிப்பை மேற்கொண்டார். எனினும், தன் பேச்சார்வத்தை உணர்ந்து, தன் முதலாண்டிலேயே ‘மீடியாகார்ப்’பில் சேர விண்ணப்பித்து, ஊடகத் துறைக்குள் அடியெடுத்து வைத்தார்.
தமிழ் வாழ்த்துப் போட்டியின் முடிவுகள் அறிவிப்பு
அண்மையில் வளர்தமிழ் இயக்கம் ஏப்ரல் 1 முதல் ஜூலை 20 வரை நடத்திய தமிழ் வாழ்த்து பாடல் வரி எழுதும் போட்டியின் மூன்று வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
அவர்கள் எழுதிய மூன்று பாடல்வரிகளிலும் உள்ள தலைசிறந்த வரிகள் இணைக்கப்பட்டு, திரு ஸ்டீஃபன் சகாரியாவின் இசையில் தமிழ் வாழ்த்து 2024ஆக வழங்கப்படும்.
ஒலி ஒளிப் பொறியாளராகப் பணிபுரியும் நீவன் பஞ்சுநாதன், 35, முதல் பரிசு வென்றார்.
“வயது ஒரு தடையன்று. அனுபவம் போதாது என்று எண்ணாமல் முழு ஆர்வத்துடன் முயன்றால் நம்மால் முடியும்,” என்றார் நீவன்.

