தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளி கொண்டாட்ட உணர்வைப் பகிரும் உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

2 mins read
34e6d785-c7f6-4918-98c8-4325762ef81e
உணவுப் பொட்டலங்களை அடுக்கும் தொண்டூழியர்கள். - படம்: இந்து அறக்கட்டளை வாரியம் 

எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்து அறக்கட்டளை வாரியம் சிங்கப்பூரிலுள்ள 28 வட்டாரங்களைச் சார்ந்த 2,200 குடியிருப்பாளர்களுக்கு சைவ உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளது.

அக்டோபர் மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற இந்த உணவுப் பொட்டல விநியோகத்தில் ஒரு வேளை உணவுடன் தீபாவளி இனிப்பு காரத் தின்பண்டங்களும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பொட்டலத்திலும் சைவ பிரியாணி, குழம்பு, காய்கறிகள், பொரியல், முறுக்கு, மைசூர் பாகு ஆகியவை இருந்தன. 

இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவைக் குழு ஒவ்வொரு மாதமும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு இதுபோன்ற சைவ உணவுப் பொட்டல விநியோகத்தை முன்னெடுத்துச் செய்துவருகிறது. 

அக்குழுவின் தொண்டூழியர்கள் உணவுப் பொட்டலங்களுடன் தீபாவளித் தின்பண்டங்களையும் பொட்டலமாகக் கட்டி விநியோகத்திற்கு தயார்ப்படுத்தினர். இந்து அறக்கட்டளை வாரியத் தொண்டூழியர்களுடன் நற்பணிப் பேரவையின் தொண்டூழியர்களும் இணைந்து உணவுப் பொட்டலங்களைக் குடியிருப்பாளர்களுக்கு விநியோகம் செய்தனர். 

“பண்டிகைக் காலத்தை அனைவரும் எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி, ஒன்றுபட்ட சமூகமாக மகிழ்வுடன் கொண்டாட வேண்டும். அதற்கான ஒரு சிறிய முயற்சியே இது. உணவுப் பொட்டலங்களைப் பெறும் குடியிருப்பாளர்களின் முகத்தில் தோன்றும் புன்னகையே எங்களுக்கு அதிக ஊக்கம் அளிக்கிறது,” என்று சமூக சேவைக் குழு­வின் தலை­வர் சுசிலா கணே­சன்.கூறி­னார்.

தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் பகுதியில் வசிக்கும் பயனாளிகளில் ஒருவரான திருவாட்டி பெருமாளம்மாள் கூறுகையில், “தீபாவளிப் பலகாரங்களையும் உணவையும் என்னுடைய வீட்டுக்கே வந்து தொண்டூழியர்கள் கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. தங்களுடைய ஓய்வு நேரங்களையும் எங்களுக்காகச் செலவிடும் இக்குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று கூறினார். 

மேலும், இந்து அறக்கட்டளை வாரியம் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வெளிநாட்டு ஊழியர்களுக்காக தீபாவளித் தின்பண்டப் பொட்டலங்களையும் வழங்கியுள்ளது. மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ பிரிவின்மூலம் வழங்கப்படும் இந்தத் தின்பண்டப் பொட்டல விநியோகம் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளித் திருநாளன்றும் இடம்பெறும். இரு நாள்களையும் சேர்த்து மொத்தம் 6,000 தீபாவளித் தின்பண்டப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. 

செய்தி: இந்து அறக்கட்டளை வாரியம்  

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்