குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த 38 மாணவர்களுக்கு மறைந்த தொழிற்சங்கவாதிகள் ஜி. முத்துகுமாரசாமி, ஆர்.கே.எஸ். நாச்சியப்பன், நித்தியானந்தன் ஆறுமுகம் ஆகியோரின் நினைவாக அவர்கள் பெயர்களில் தெமாசெக் அறநிறுவனம் உபகாரச் சம்பளங்களை வழங்கியது.
“இந்தத் தொழிற்சங்கவாதிகள் மூவருமே கல்வியையும் வாழ்நாள் கற்றலையும் வலுவாக ஆதரித்தவர்கள். குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களின் நலனுக்காகவும் அவர்களின் பணியிட மேம்பாட்டிற்காகவும் உழைத்தவர்கள். இந்த உபகாரச் சம்பளங்களின் மூலம் அவர்களின் சேவை நினைவுகூரப்படும்,“ என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் கூறினார்.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய வளாகத்தில் புதன்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் உபகாரச் சம்பளம் வழங்கினார்.
இந்த உபகாரச் சம்பளங்களை பெறும் மாணவர்கள் அவர்களைப் போலவே சமூகத்திற்கு தங்களால் ஆன பங்களிப்பைத் தர முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இவ்வாண்டு தொடங்கி 2027ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மொத்தம் ஏறத்தாழ 200 மாணவர்கள் இந்த உபகாரச் சம்பளம் மூலம் பலனடைய உள்ளனர். மொத்தம் 4 மில்லியன் டாலர் மதிப்பிலான உபகாரச் சம்பளம் வழங்கப்படவுள்ளன.
தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் $3,000 பெறுவர். அதேபோல் பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் முறையே $4,000 மற்றும் $5,000 பெறுவர்.
இந்த உபகாரச் சம்பளங்களைப் பெற்ற மாணவர்கள் உயர்கல்வி முடிந்ததும் தெமாசெக் அறநிறுவனத்தில் சேர்ந்து பணிபுரியத் தேவையில்லை.
மேலும், அந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா $2,000 பெறுமானமுள்ள குடும்ப அங்கீகார விருதும் வழங்கப்பட்டன. இந்தத் தொகை மாணவர்கள் கல்வி பயிலும் காலகட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் கட்டங்கட்டமாக வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
மறைந்த தொழிற்சங்கவாதிகள் பெயர்களில் உபகாரச் சம்பளங்கள் வழங்கப்பட்டது குறித்து அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திரு நித்தியானந்தனின் இளைய மகள் பிரவித்தா நித்தியானந்தன், 37 கூறுகையில், “எங்கள் குடும்பத்திற்கே மிகவும் பெருமையான தருணம். சமூகமே தன் குடும்பம் என்ற பரந்த நோக்கில் வாழ்ந்துசென்ற அப்பாவை கெளவரப்படுத்தியமைக்கு மிகுந்த நன்றி,” என்று கூறினார். தந்தையின் வழியில் ஐவரும் தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் திரு நாச்சியப்பனின் துணைவியார் திருவாட்டி வனஜா நாராயணசாமி, 64, கூறுகையில், “சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்ட ஒரு சிறந்த குடிமகனாகவே தன் இறுதிமூச்சு வரை என் கணவர் வாழ்ந்து காட்டினார். ஊழியர்களுக்கு தொண்டாற்றுவதையே வாழ்நாள் பணியெனக் கொண்ட அவரின் செயல்களை பாராட்டி வழங்கப்பட்டிருக்கும் இந்த உபகாரச் சம்பளம் இளம் தலைமுறையினரிடமும் அவரைக் கொண்டுசெல்லும்,“ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
திரு முத்துகுமாரசாமி 2019ஆம் ஆண்டில் தமது 68 வயதில் காலமானார். நாட்சம்பள ஊழியர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக அவர் பதவி வகித்தார். அந்தத் தொழிற்சங்கம் 2021ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு பொது ஊழியர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்டது.
திரு நித்தியானந்தனும் திரு நாச்சியப்பனும் மின்சார, எரிவாயுத் துறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தில் இருந்தவர்கள். திரு நித்தியானந்தன் அதன் நிர்வாகச் செயலாளராகவும் திரு நாச்சியப்பன் அதன் முன்னோடி உறுப்பினராகவும் இருந்தனர். திரு நித்தியானந்தன் 2007ஆம் ஆண்டில் 57 வயதில் காலமானார். திரு நாச்சியப்பன் 2021ஆம் ஆண்டில் தம் 67வது வயதில் காலமானார்.
ஆர்.கே.எஸ். நாச்சியப்பன் உபகாரச் சம்பளத்தைப் பெற்ற நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் சத்தீஸ்வரன் செல்வராஜு, 28, “வசதி குறைந்த குடும்பத்திலிருந்து வந்த எனக்கு இந்த உபகாரச் சம்பளம் மிகுந்த பயன்தரும். படித்து முடித்து திரைத்துறையில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நான் சமூகத்திற்கு என்னால் முடிந்தவற்றை உறுதியாகச் செய்வேன்,” என்று கூறினார்.