மனைவியின் பராமரிப்பில் நிற்கும் பன்னீர்செல்வம்

பக்கவாதம் திடீரென ஏற்பட்டதால் திரு பன்னீர்செல்வத்திற்கு உடலின் இடது பக்கம் முழுமையாகச் செயலிழந்து போனது. 15 ஆண்டுகளாகப் பாதுகாப்புத் துறையில் மேலாளர் பணியில் இருந்த அவர் அதைத் தொடரமுடியாமல் போனது. 56 வயது திரு பன்னீர்செல்வம் ராஜமாணிக்கத்தின் வாழ்வில் எதிர்பாராத இடியாக அது அமைந்தது.

2020ல் தம் பணியிடத்தில் இருந்தபோது திடீரென்று தாங்க முடியாத இடது கை வலி. கால்களில் ஒழுங்காக நிற்க முடியாமல் தடுமாறி மயங்கி விழுந்த திரு பன்னீர்செல்வம், கண் விழித்தபோது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.

ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிப்படைந்திருந்த பன்னீர்செல்வம், மாத்திரைகளைச் சரியாக உட்கொள்ளாமல் இருந்ததால் பக்கவாதம் ஏற்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு அவரால் முன்புபோல நடக்க முடியாமல் போய்விட்டதால் பன்னீர்செல்வம் ஊன்றுகோலைப் பயன்படுத்தி நடக்க வேண்டியிருந்தது. தோட்டக்கலை, வீட்டைச் சுத்தம் செய்வது, குடும்பத்தினருடன் பொழுதைக் கழிப்பது போன்ற நடவடிக்கைகளில் முன்பு இன்பமாக நேரத்தைக் கழித்த அவர், இப்போது நான்கு அடி எடுத்து வைக்கக் கூட சிரமப்படுகிறார்.

மனைவியும் மகனும் பொழியும் அன்பும் ஆதரவும் அவரை இவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்க உதவியுள்ளன. பன்னீர்செல்வத்தின் மனைவியான மீனா நல்லதம்பி, 55, ஐந்தாண்டுகளுக்கும் மேலாகப் பாலர் பள்ளி ஒன்றில் சமையல்காரராகப் பணிபுரிந்து வந்தார்.

காலையில் ஏழு மணிக்குத் தொடங்கும் அவரது வேலை பிற்பகல் நான்கு மணிக்கு முடியும். நடு இரவில் பன்னீர்செல்வம் கழிவறைக்குச் செல்ல வேண்டுமென்றால் அவருடன் கூடவே இருப்பது மீனாதான். பிறகு, மீனா அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து வேலைக்குச் செல்லத் தயாராக வேண்டும்.

அந்தப் பரபரப்புக்கு நெடுகிலும் அவர் கணவருக்குத் தேவைப்படும் காலை உணவையும் மாத்திரைகளையும் எடுத்து வைத்து வேலைக்குச் சென்றதும் ஓட்டமும் நடையுமாக மீண்டும் காலை 7.30 மணி போல வீட்டிற்குத் திரும்ப வேண்டும். அப்பொழுதுதான் பன்னீர்செல்வம் மனைவியின் உதவியோடு மூத்தோருக்கான என்டியுசி ஹெல்த் பராமரிப்பு நிலையத்துக்குச் செல்ல இயலும். வேலையிடம் பக்கத்தில் இருப்பது மீனாவுக்கு வசதியாக இருந்தது.

இல்லப் பணிப்பெண் சேவை பெற முடியாத நிதி நெருக்கடியினால் பன்னீர்செல்வத்துக்கு அவர் செல்லும் பராமரிப்பு நிலையம் கைகொடுத்து வருகிறது. இதனால் மீனாவுக்கும் ஓய்வு கிடைக்கிறது. தொடக்கத்தில் பராமரிப்பு நிலையத்தில் மூத்தோர் அதிகம் இருப்பார்கள் என்று நினைத்து அங்கு செல்ல தயங்கிய பன்னீர்செல்வம், இப்போது அங்குச் செல்லாத நாளே இல்லை. வீட்டில் தனிமையில் வாடுவதற்குப் பதிலாக பராமரிப்பு நிலையம் அவருக்கு மாறுபட்ட சூழ்நிலையை ஏற்படுத்தித் தருகிறது.

அங்குச் சென்றாலே பன்னீர்செல்வத்துக்கு உற்சாகம் பொங்குகிறது. கடுமை அல்லாத உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, பூப்பந்தாட்டம், தரைப்பந்தாட்டம் முதலிய நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வாறு ஈராண்டுகள் ஓடவே, தற்போது சுகாதார இன்னல்கள் மீனாவைப் புரட்டி போடத் தொடங்கிவிட்டன. கணவரைப் பார்த்துக்கொண்டதில் தனது உடல்நலத்தைப் பேணத் தவறிவிட்டார் மீனா. முதுமை மூட்டு அழற்சியாலும் முதுகெலும்பு உபாதையாலும் பாதிப்படைந்துள்ள மீனா, நீண்ட நேரம் நிற்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.

சிகிச்சை பெறுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கும் அவர், கடந்த இரு மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் மகனின் உதவியோடு பன்னீர்செல்வத்தைப் பராமரிப்பதில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார். அறுவை சிகிச்சைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் பன்னீர்செல்வம் தற்காலிகமாகத் தாதிமை இல்லத்தில் இருக்க வேண்டுமென்ற அச்சம் ஒரு புறம் மீனாவுக்கு உண்டு.

கணவருக்கு ஒற்றைப் பராமரிப்பாளராக இருக்கும் மீனாவுக்குப் பக்கபலமாக இருப்பது அந்த தம்பதியினரின் ஒரே மகனான 23 வயது ஜனேஷ். தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டபோது ஜனேஷ் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார்.

தந்தையின் நிலையை அறிந்து மருத்துவமனைக்கு விரைந்ததை நினைவுகூர்ந்த ஜனேஷ் “நான் எக்காலத்திலும் நிதானமாகப் பதற்றம் இல்லாமல் சூழ்நிலைகளைக் கையாளக் கற்றுக்கொண்டேன். நான் மன வலிமையோடு இருந்தால்தான் என் அம்மாவையும் பார்த்துக்கொள்ள முடியும்,” என்றார்.

தந்தையைப் பார்த்துக்கொள்ளும் அதே நேரம் கல்வி ஒருபக்கம் அவரின் நேரத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. இருப்பினும், ஜனேஷ் அதைச் சமாளித்து இப்பொழுது நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவராக இருக்கிறார். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லாத சிரமத்தில், ஜனேஷ் பகுதிநேரமாக பறவைகள் மகிழ்வனத்தில் பணிபுரிகிறார்.

மீனா போன்ற பராமரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் என்டியுசி ஹெல்த் பல திட்டங்களை வகுத்துள்ளது. நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு அவற்றில் ஒன்று. உடல்நலம் தேறி மீனா மறுபடியும் வேலைக்குத் திரும்பும்போது இத்திட்டம் அவருக்கு உதவும்.

வருங்காலத்தில் உடல்நலத்தில் முன்னேற்றம் கண்டு இன்னும் சிறப்பாக நடக்க வேண்டுமென்று விரும்பும் பன்னீர்செல்வம், “ஒருவர் எப்போதும் தனது உடல்நலத்தில் கவனம் செலுத்தவேண்டும். மருந்து மாத்திரைகள் உட்கொள்வதை அலட்சியப்படுத்தக்கூடாது,” என்று கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!