ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தைச் சேர்ந்த 30 முதியோர் சக்கர நாற்காலிகளில் லிட்டில் இந்தியா தீபாவளிச் சுற்றுலா மேற்கொண்டனர்.
இம்மாதம் 4ஆம் தேதி சனிக்கிழமை, ரோட்டரி கிளப் சிங்கப்பூர், விழாக்கால மகிழ்ச்சியை முதியோருடன் பகிர்ந்துகொள்ள இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
‘ரோட்டரி கிளப் சிங்கப்பூர்’, ‘ரோட்டரேக்ட் கிளப்’, ‘இண்டரேக்ட் கிளப்’ தொண்டூழியர்கள் நிகழ்ச்சி சுமுகமாக நடைபெற ஆதரவு வழங்கினர்.
பயனாளிகளில் தம் எண்பதுகள், தொண்ணூறுகளிலுள்ள முதியோர் அடங்குவர்.
முதலில் முதியோரை ‘அப்போலோஸ்’ உணவுக் கிராமத்துக்குத் தொண்டூழியர்கள் அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்கள் அறுசுவை உணவுண்டு மகிழ்ந்தனர். நெகிழ்ச்சியளிக்கும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
பின்னர், அவர்கள் லிட்டில் இந்தியா தீபாவளிச் சந்தைவழிச் சென்று தீபாவளி உணர்வில் மூழ்கினர்.
சுற்றுலாவின் மிக முக்கிய நிகழ்வாக இந்திய மரபுடைமை நிலையத்தை வழிகாட்டிகளின் துணையோடு அவர்கள் சுற்றிப் பார்த்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தென்கிழக்காசியாவில் உள்ள இந்திய, தெற்காசியச் சமூகங்கள், சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் பற்றிய பல சுவையான தகவல்களை அவர்கள் அறிந்துகொண்டனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இங்கு வாழ்ந்துவருவோருக்கு, இந்திய மரபுடைமை நிலையத்தில் இருந்த வரலாற்றுச் சான்றுகளும் காணொளிகளும் பல்வேறு அரிய நினைவுகளை மலரச் செய்தன.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்குத் தாம் ஆற்றிய பங்கை நினைவுகூர்ந்து அந்த மூத்த குடிமக்கள் பெருமைப்பட்டனர். அவர்களது கதைகளைக் கேட்ட தொண்டூழியர்களுக்கும் அது சுவாரசியமான அனுபவமாக இருந்தது.
சுற்றுலாவின் நிறைவாக, அதில் பங்கேற்ற முதியோர் அனைவர்க்கும் தின்பண்டங்கள், நறுமணம் வீசும் விளக்குகள், மெழுகுவத்திகள், சுவர் அலங்காரம் ஆகியவற்றைக் கொண்ட அன்பளிப்புப் பை வழங்கப்பட்டது.
இச்சுற்றுலா மூலம் தங்களது தீபாவளி மேலும் சிறப்படைந்ததாக முதியோரும் தொண்டூழியர்களும் கூறினர்.

