தீபாவளி உணர்வைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், இம்மாதம் 4ஆம் தேதி சனிக்கிழமையன்று தொண்டூழியர்கள் சிங்கப்பூரின் பல பகுதிகளிலும் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் பணியிடங்களுக்குச் சென்று சமோசாவையும் பீட்சாவையும் வழங்கினர்.
‘ஐஆர்ஆர்’ எனும் ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ அமைப்பு ஏற்பாடு செய்த தீபாவளி உணவு நன்கொடையில் 92 தொண்டூழியர்கள், ஏறக்குறைய 3,820 வெளிநாட்டு ஊழியர்களுக்கு அந்த உணவுவகைகளை விநியோகித்தனர்.
2015 முதல் தீபாவளியை ஒட்டி இடம்பெற்றுவரும் இம்முயற்சியில் முதன்முறையாக மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களும் பங்குபெற்றனர்.
‘பீட்சா ஹட்’ சிங்கப்பூர், ‘ஆல்ட்பீட்சா’ உணவகங்கள் பீட்சாக்களையும் ‘குவர்மெட் ரெடி’ உணவகம் சமோசாக்களையும் மலிவு விலையிலும் சிலவற்றை இலவசமாகவும் வழங்கின.
இவை அனைத்துக்கும் ‘ஐஆர்ஆர்’, இணையம்வழி நிதி திரட்டியது. ‘எல்ஜிடி’ வங்கியும் ஆதரித்தது.
‘ஐஆர்ஆர்’ நிகழ்ச்சியில் முதன்முறையாக நேரடியாகத் தொண்டாற்றிய நிகிலா ஸ்ரீஹரி, “எனக்கு இந்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது. தன்னலமற்ற ஏற்பாட்டாளர்களைப் பார்த்ததும் எனக்கும் தொடர்ந்து தொண்டாற்ற உத்வேகம் ஏற்பட்டது,” என்றார்.
இதற்கு முன்பு இருமுறை அவர் வீட்டிலிருந்தே ‘ஐஆர்ஆர்’வழித் தொண்டூழியம் புரிந்துள்ளார். அப்போது, அறுசுவை உணவு சமைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுப்பிவைத்தார்.
அவரை இந்நிகழ்ச்சிக்கு அறிமுகப்படுத்திய தோழி ஸ்ரீவானி, “பண்டிகைக் காலங்களில் நம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
தீபாவளி உணவு விநியோகத்தில் கணவருடன் 2020 முதல் பங்குபெற்றுவரும் தொண்டூழியர் மெலிசா, வெளிநாட்டு ஊழியர்களின் பணியைப் பாராட்டினார்.
“அவர்களுடன் பழகப் பழக, தம் குடும்பங்களுக்கு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்காக அவர்கள் செய்யும் தியாகங்களை நம்மால் உணர முடிகிறது. அவர்கள்மேல் உயர்ந்த மதிப்பு ஏற்படுகிறது,” என்றார் மெலிசா.
அண்மையில், அவர் தம் கணவருடனும் வெளிநாட்டு ஊழியர்களுடனும் சாங்கி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் இராட்டினம் வரைக்கும் மிதிவண்டி ஓட்டினார். இராட்டினத்திற்கு ஊழியர்களை அழைத்தும் சென்றனர்.
தொடரும் முயற்சி
இந்த உணவு விநியோகம் இதோடு நிறைவடைந்துவிடவில்லை. நவம்பர் 24 வரை இம்முயற்சிக்குத் தொடர்ந்து நன்கொடையளிக்கலாம்.
திரட்டப்பட்ட நிதிக்கேற்ப டிசம்பர் தொடக்கம்வரை தொடர்ந்து பீட்சாக்கள், சமோசாக்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விநியோகிக்கப்படும்.
குறைந்தது 2,000க்கும் மேற்பட்ட சமோசாக்களும் 1,000க்கும் மேற்பட்ட பீட்சாக்களும் கூடுதலாக வழங்கப்படும் என்கிறது ‘ஐஆர்ஆர்’. மேல்விவரங்களுக்கு: https://sites.google.com/itsrainingraincoats.com/deepavali2023
நவம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் திருநாளுக்கான நிதி திரட்டையும் தொடங்கவுள்ளது ‘ஐஆர்ஆர்’. பந்தயப் பிடிப்புக் கழகமும் வெள்ளிக்கு வெள்ளி நிதி வழங்கும்.
கிறிஸ்துமஸ் பரிசுகளைத் தயாரிக்கவும், ‘சான்டா’வாக வெளிநாட்டு ஊழியர்களின் குடியிருப்புகள், பணியிடங்களுக்குச் சென்று பரிசு வழங்கவும் http://itsrainingraincoats.com/xmas2023 தளத்தில் பதிவுசெய்யலாம்.
குடைகள், சமையல் பொருள்கள், மின்விசிறிகள், தோள்பைகள், ஆடைகள் போன்றவற்றையும் நன்கொடையாக வழங்கலாம்.
மக்களை, தீபாவளிப் பலகாரங்கள் வாங்கி, சொந்தமாகவும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்க ஊக்குவிக்கிறது ‘ஐஆர்ஆர்’.

