தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய தினம் லிட்டில் இந்தியாவில் பலகாரம், ஆடை, ஆபரணம், அலங்காரப் பொருள்கள், பட்டாசு உள்ளிட்ட பல்வேறு வகை கடைகளிலும் வியாபாரம் அமோகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வர்த்தகர்கள் உள்ளனர்.
“இவ்வாண்டின் விற்பனை எதிர்பார்த்ததைவிட நல்ல முறையில் செல்கிறது. குறிப்பாக வளையல், பொட்டு வகைகளை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். வாரயிறுதியில் இன்னும் அதிகளவு விற்பனை இருக்கும்” என்று உற்சாகத்துடன் கூறினார் டுடேஸ் வேர்ல்டு கவரிங் நகைக்கடையின் உரிமையாளர் திருவாட்டி ஜெசிமா முகமது இக்பால், 60.
“தீபாவளி வியாபாரம் சூடுபிடித்திருந்தாலும் இப்போதுள்ள சூழலில் போட்டி அதிகம் உள்ளது. வீட்டிலிருந்தே இணையம் வழி ஆடைகளை வாங்க மக்கள் விரும்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நடைபெற்றுவரும் எக்ஸ்போ சந்தைகள் பெரும்பாலான மக்களை கவர்கிறது. அதனாலும் வியாபாரம் பாதிப்படைகிறது” என்று கூறினார் ஜோதி ஃபேஷன் கடையின் உரிமையாளர் திருவாட்டி தி. பிரேமாவதி, 40.
இருப்பினும் வாடிக்கையாக வருபவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தீபாவளிக்கு முந்தைய நாள் இன்னும் நல்ல வியாபாரத்தை எதிர்பார்க்கிறோம் என்றும் இவர் கூறினார்.
“பொதுவாகவே தீமிதிக்கு பிறகு தான் பட்டாசுகள் நன்கு வியாபாரமாகும். அதிலும் கடைசி இரண்டு தினங்களில் தான் பெரும்பாலான மக்கள் பிள்ளைகளுடன் வந்து வாங்கிச்செல்வர்” என்று சத்தீஷ் டிரேடிங் பட்டாசுக் கடையின் ஊழியர் திரு ஆறுமுகம் அன்பழகன், 43, தெரிவித்தார்.
கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அதிகளவு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் இவர் தெரிவித்தார்.
“தீபாவளி வியாபாரம் போலவே இல்லை. சாதாரண நாட்களின் வியாபாரம் போலவே இருப்பது வருத்தமளிக்கிறது. பெரும்பாலான மக்கள் மலேசியா சென்று பொருட்களை வாங்குகின்றனர். உள்ளூர் கடைகளில் வாங்கினால் நன்றாக இருக்கும்” என்று வருந்தினார் அப்போலோ செல்லப்பாஸ் கடையின் ஊழியர் திரு சாரங்கபாணி ராஜசந்திரன், 39.
“இவ்வாண்டு எக்ஸ்போ-வில் குடும்பத்திற்குத் தேவையான ஆடைகளை எடுத்தோம். இருப்பினும் வழக்கமாக வாங்கும் கடைகளிலேயே பட்டாசுகளும் பலகாரங்களும் வாங்கினோம்” என்று கூறினார் வாடிக்கையாளரான திரு கார்த்திக் ராஜன், 37.
தொடர்புடைய செய்திகள்
“தீபாவளி என்றால் லிட்டில் இந்தியாவில் வாங்காமல் இருப்பதா? கண்டிப்பாக சனிக்கிழமை லிட்டில் இந்தியாவிலேயே காலை முதல் மாலை வரை பொருட்கள் வாங்கப்போகிறோம்,” என்று கூறினார் இல்லத்தரசி பாக்கியலட்சுமி, 56.
தேக்கா சந்தை, லிட்டில் இந்தியா கடைவீடுகளில் இயங்கும் நிரந்தர வர்த்தகர்களும் கேம்பல் லேன், பெர்ச் சாலையில் சந்தைகளில் கடை அமைத்துள்ளவர்களும் சனிக்கிழமை அமோக வியாபாரம் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.