ஜாமியா சிங்கப்பூர் டாருல் இஸ்லா மறுவாழ்வு இல்லத்தில் தம் சிறைத் தண்டனையின் இறுதிக் கட்டத்தை நிறைவேற்றிவரும் அறுவர், தீபாவளிக்காக வசதிகுறைந்த இந்திய குடும்பம் ஒன்றின் வீட்டைப் புதுப்பித்துள்ளனர்.
அவர்களோடு முன்னாள் ஜாமியா மறுவாழ்வு இல்லவாசி ஒருவரும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 8 வரை நடைபெற்ற இச்சேவையில் ஈடுபட்டார்.
‘புரோஜெக்ட் ஹேப்பினஸ்’ எனும் சமூகத் திட்டம்வழி 2019ஆம் ஆண்டு முதல் ஜாமியா சிங்கப்பூர் மறுவாழ்வு இல்லவாசிகள், பண்டிகைக் காலத்தின்போதும் வசதிகுறைந்தோருக்கு வீட்டைப் புதுப்பித்து உதவுகின்றனர். இத்தீபாவளிக்கு 16வது முறையாக இவ்வாறு சேவையாற்றியுள்ளனர்.
தம்மை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயத்திற்குத் தம்மால் இயன்றதைச் செய்வதாகக் கூறினர் பங்குபெற்ற இல்லவாசிகள்.
“எங்கள் வாழ்வில் நாங்கள் பெற்றுள்ள மறுமலர்ச்சியை தீபாவளி சமயத்தில் உதவி தேவைப்படுவோருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்,” என்றனர்.
“புதுப்பிப்புப் பணி முடிந்ததும் அக்குடும்பத்தினரின் முகங்களில் தென்பட்ட புன்சிரிப்பில் மனங்குளிர்ந்தேன்,” என்றார் அறுவரில் ஒருவரான ஹஷிம் (உண்மைப் பெயரல்ல).
அவர்களது நற்பணியினால் 52 வயது வசந்த மல்லிகையின் வீடு இவ்வாண்டு தீபாவளிக்குப் புத்துயிர் பெற்றுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக ஜாலான் குக்கோ வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
வசந்த மல்லிகையும் அவரின் மகளும் ஒற்றைத் தாய்மார்களாக குடும்பத்தைப் பல்லாண்டுகளாகத் தாங்கிவந்துள்ளனர். மகனும் உதவி வருகிறார்.
அண்மையில் மேலும் ஓர் அதிர்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டது. ஐந்தாண்டுகளாகவே உடற்சோர்வடைந்து தெம்பில்லாமலிருந்த திருவாட்டி வசந்த மல்லிகைக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு கோளாறுகள் இருப்பதாகத் தெரியவந்தது.
அடிக்கடி மயக்கம் வருவதால் சென்ற ஆண்டு தன் துப்புரவாளர் பணியிலிருந்தும் ஓய்வுபெற்றார் அவர்.
அவருக்குத் தக்க சமயத்தில் உதவியது ஜாமியா. ‘கிரேத்தா ஆயர் குடும்பச் சேவைகள்’ மூலம் இக்குடும்பத்தின் நிலையை அறிந்த ஜாமியா, அவர்களுக்கு உதவ முன்வந்தது.
புதுப்பிப்புப் பணிக்குச் செலவான மொத்தம் $3,000ஐ ‘டிகேபி சி-இ’, ‘ஹெச் அண்ட் எஸ்’, ‘எங் லெங்’, ‘ஒன் பெஸ்ட்’ நிறுவனங்கள் வழங்கின.
புதுப்பிப்புப் பணியோடு நின்றுவிடாமல் ‘வில்லேஜ்’ விடுதி பூகிஸ் ‘லேண்ட்மார்க்’ உணவகத்தில் சிறப்பு விருந்தையும் லிட்டில் இந்தியாவில் தீபாவளி ஒளிச் சுற்றுலாவையும் நவம்பர் 4ஆம் தேதி அக்குடும்பத்துக்கு ஏற்பாடு செய்தது ஜாமியா.
“அவர்களது கடும் உழைப்பினால்தான் இது சாத்தியமானது,” என்றபடி ஜாமியாவிற்கும் ஜாமியா இல்லவாசிகளுக்கும் மனமுருக நன்றி தெரிவித்தனர் திருவாட்டி வசந்த மல்லிகையின் குடும்பத்தினர்.

