சமூக ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் ஃபேர்பிரைஸ் குழுமம், வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளுக்காக கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது. நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இக்கொண்டாட்ட நிகழ்வுகள், அடுத்த ஆண்டு இறுதிவரை நடைபெறும்.
தீபாவளிக் கொண்டாட்ட உணர்வைத் தூண்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாம் நாள் நிகழ்வுகள் காக்கி புக்கிட் சமூக மன்றத்திலும் உட்லண்ட்ஸ் அவென்யூ 6ன் பன்னோக்கு மண்டபத்திலும் நடைபெற்றன.
பொதுமக்கள் திரண்டுவந்து கலந்துகொண்ட இந்நிகழ்வுகளில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், தின்பண்டச் சாவடிகள் எனப் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. நிகழ்வின் சிறப்பம்சமாக ‘சமூக குளிர்பதனப்பெட்டி’ பற்றிய விளக்கம் குடியிருப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டது. அனைவரும் பயனடையும் வகையில் குளிர்பதனப்பெட்டியைப் பயன்படுத்தும் வழிமுறைகளும் விளக்கப்பட்டன.
கோலம் போடும் கலைஞர் திருவாட்டி விஜயா மோகன், ரங்கோலி கோலமிடும் சாவடி ஒன்றை வழிநடத்தினார். ‘கச்சாங் பூத்தே’ தின்பண்ட சாவடி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. முறுக்கு, தானிய வகைகள் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.
அத்துடன் ‘ஃபேர்பிரைஸ் ஆன் வீல்ஸ்’ எனும் நடமாடும் பலசரக்கு வண்டியில் 200க்கும் மேற்பட்ட மளிகைப் பொருள்கள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
காக்கி புக்கிட் சமூக மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்குகொண்ட இல்லத்தரசியான துளசி துவாரகர், 35, “என் ஏழு வயது மகன் இந்நிகழ்வில் மிகவும் மகிழ்வுடன் பங்குகொண்டார். கேரம் உள்ளிட்ட விளையாட்டுகள் பிள்ளைகளுடன் விளையாடிய அனுபவம் சிறப்பாக இருந்தது,” என்று கூறினார்.
“கோலமிடுதலிலும் விளையாட்டுகளிலும் என் புளோக்கில் உள்ள நண்பர்களுடன் கலந்துகொண்டது சுவாரசியமாக இருந்தது,” என்று கூறினார் 9 வயதாகும் தொடக்கப்பள்ளி மாணவி அர்ச்சனா ராஜன்.
உட்லண்ட்சில் நடைபெற்ற நிகழ்வில் பங்குகொண்ட 75 வயது கமலா ராமலிங்கம், “சமூக குளிர்சாதனப்பெட்டி பற்றி அறிந்துகொண்டேன். மிகவும் பயனுள்ள முயற்சி. அதேப்போல் இளம் வயதில் விரும்பி உண்ட ‘கச்சாங் பூத்தே’ தின்பண்டச் சாவடி பழைய நினைவுகளை அசைபோட வைத்தது,” என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்வில் பங்குகொண்டவர்களுக்கு அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன.

