பார்வையிழந்தும் உள்ளத்தில் ஒளிவெள்ளம்

2 mins read
14f68a64-8df3-4df5-b5e4-cf0789954779
கடந்த 10 ஆண்டுகளாக ஒருவகை கண் நோயினால் படிப்படியாகத் தம் பார்வையை இழந்துவரும் திரு மோகன் நாராயணசாமி, 72. - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 2

தீபத்தின் ஒளியைக் கண்ணாரப் பார்க்க முடியாவிட்டாலும் அதை உள்ளுணர்ந்தவராக வாழ்ந்து வருகிறார் 72 வயது திரு மோகன் நாராயணசாமி.

கடந்த 10 ஆண்டுகளாக ‘ரெட்டினைடிஸ் பிக்மண்டோசா’ (Retinitis Pigmentosa) எனும் கண் நோயினால் படிப்படியாகப் தம் பார்வையை இழந்துவந்துள்ள இவருக்கு, இப்போது உலகம் வெறும் நிழல்கள்தான். முகங்கள் தெரிவதில்லை.

எனினும், தீபாவளிக்காக தம் நண்பர்கள், அண்டைவீட்டார், சிங்கப்பூர் கண் குறைபாடுள்ளோர் சங்கத்தினர் (எஸ்ஏவிஹெச்) ஆகியோரை மகிழ்விக்கப் பலகாரங்கள் வாங்கித் தந்துள்ளார்.

தம்மோடு திங்கட்கிழமைகளில் ‘எஸ்ஏவிஹெச்’ பகல்நேரப் பராமரிப்பு வசதிக்கு வரும் சக கண் குறைபாடுள்ளோர், ‘எஸ்ஏவிஹெச்’வழி சிங்கப்பூரின் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று உடற்பிடிப்புச் சேவையை வழங்கும் தமது சக உடற்பிடிப்பாளர்கள், அண்டைவீட்டார், முகச்சவரம் செய்பவர் ஆகியோருக்கு முறுக்கு வழங்கினார்.

முறுக்கு உண்பதில் அடங்கியுள்ள சிறு மகிழ்ச்சியைக்கூட தாமும் பெற்று பிறரும் பெறவேண்டும் என்று விழைகிறார் இவர்.

பலரும் தீபாவளிக்காக பலமுறை தேக்காவிற்குச் சென்றுவரும் வேளையில் இவர் கடந்த பத்து ஆண்டுகளில் என்றாவது ஒரு நாள்தான் தேக்காவிற்குச் சென்றுள்ளார்.

பரபரப்பான தேக்கா தெருக்களில் தனியாகச் செல்லமுடியாத நிலையில், தம்மை அங்கு அழைத்துச் செல்லப் பிறரிடம் கேட்கவும் திரு மோகன் தயங்குகிறார்.

அதோடு, பல நாள்கள் தாம் வழங்கும் உடற்பிடிப்புச் சேவை வெவ்வேறு நேரங்களில் இருப்பதால் ஒருவருடன் தேக்கா செல்லத் திட்டமிடுவது கடினம் என்றார்.

திரு மோகனின் மனைவி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தாயாரும் ஈராண்டுகளுக்கு முன்பு தவறிவிட்டார்.

“அக்காலத்தில் மற்ற குடும்பங்களைப்போல் தீபாவளியை ஆரவாரத்தோடு கொண்டாடி வந்தோம். பார்வை குறையக் குறைய, நான் தீபாவளி கொண்டாடும் முறையும் மாறிப்போனது,” என ஏக்கத்துடன் கூறுகிறார், மோகன்.

தீபாவளிக்காக ‘8 பாயிண்ட் எண்டர்டெய்ன்மண்ட்’ வழங்கிய டாக்டர் வைக்கம் விஜயலட்சுமி கச்சேரிக்குச் சிறப்பு நுழைவுச்சீட்டுகள் பெற்ற பயனாளிகளில் இவரும் ஒருவர்.

“இதற்கு முன்பு கச்சேரிகளுக்குச் செல்ல ஆசைப்பட்டதுண்டு. ஆனால், தனியாகச் செல்வது சிரமம். இந்த இசைவிருந்தைப் பெரிதும் ரசித்தேன்,” என்றார்.

தீபாவளிக்காக இஸ்தானாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய திரு மோகன், நண்பரின் நேரத்தைப் பொறுத்து அந்த ஆசை நிறைவேறும் என்றார்.

ஒளிமயமான தீபாவளி வாழ்த்துகள் எனக் கூறியபடி புன்னகைத்தார் திரு மோகன்.

குறிப்புச் சொற்கள்