தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளிக்காக தமிழ் முரசின் சிறப்பு வலையொளி

2 mins read
f95cc7f9-2bf5-4143-8077-97300de06c93
தமிழ் முரசின் சிறப்பு தீபாவளி வலையொளிப் பதிவு. - படம்: டினேஷ் குமார் 

இவ்வாண்டின் தீபாவளிக் கொண்டாட்டத்தையொட்டி தமிழ் முரசு நாளிதழ் சிறப்பு வலையொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

தீபாவளிக் கொண்டாட்டம் குறித்த இச்சுவையான கலந்துரையாடலில் மூன்று சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

தீபாவளிப் பண்டிகையின் தனிச்சிறப்பு, இவ்வாண்டின் தீபாவளிக் கொண்டாட்ட உணர்வு, காலத்திற்கு ஏற்றாற்போல் மாறிவரும் தீபாவளிக் குதூகலம் போன்றவற்றைப் பற்றி கருத்துகள் பகிரப்பட்டன. 

அக்காலத்திலிருந்த வாழ்த்து அட்டைப் பரிமாற்றம், அனைத்துப் பலகாரங்களையும் வீட்டிலேயே தயாரிக்கும் முறை, ஆண்டிற்கு ஒரு முறை தீபாவளிக்காக மட்டும் புத்தாடை வாங்குவது, அந்தக் காலத்தில் இருந்த பட்டாசு வகைகள் போன்ற பல வழக்கங்கள் தற்போது மாறிவருவது குறித்தும் உரையாடப்பட்டது. 

மேலும், இவ்வாண்டு வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ள சூழலில் பொதுமக்கள் எவ்வாறு தீபாவளியைக் கொண்டாடுகின்றனர், எந்தச் செலவைக் குறைக்கின்றனர், என்னென்ன சிக்கன வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர் ஆகியவை குறித்தும் பேசப்பட்டது.  

இதில் கலந்துகொண்ட தனியார் பள்ளி ஆசிரியை பேமலா சந்தனசாமி, 43, “குடும்பத்தார், உறவினர்களுடன் அளவளாவப் பிடிக்கும். இதுபோன்ற பண்டிகை நாள்கள் உறவாடுவதற்குச் சிறந்த வாய்ப்புகள். மேலும், நம் கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்வதற்கு இதுபோன்ற பண்டிகைகளைப் பாரம்பரிய முறைப்படி நாம் கொண்டாடுவது அவசியம்,” என்று கூறினார். 

விலையேற்றம் குறித்துப் பகிர்ந்துகொண்ட ராகவேந்திரா என்டர்பிரைஸ் காய்கறி மொத்த விநியோக நிறுவன உரிமையாளர் எஸ். மணிமாறன், 37, “விலையேற்றம் ஒருபக்கம் இருந்தாலும் அதற்குத் தக்கவாறு மக்கள் சிக்கனத்துடன் கவனமாகத் திட்டமிட்டு தீபாவளியைக் கொண்டாட முனைகின்றனர்,” என்று கூறினார். 

“ஆண்டுக்கு ஒருமுறை வரும் பண்டிகை என்பதால் சிலர் ஆண்டு தொடக்கத்திலிருந்தே இதற்காக பணத்தைச் சேமித்து தீபாவளிக்குச் செலவு செய்வதையும் காண முடிகிறது,” என்று கூறினார் ‘ஆடம்பரா’ எனும் இணையவழி ஆடைக்கடையை நடத்தும் சிவசங்கரி இளங்கோவன், 34. 

தொடர்புடைய செய்திகள்

இதுபோன்ற பல சுவாரசிய தகவல்களையும் தத்தம் வாழ்க்கை அனுபவங்களுடன் சேர்த்து சிறப்பு விருந்தினர்கள் பேசினர். உரையாடலை தமிழ் முரசின் செய்தியாளர் மோனலிசா வழிநடத்தினார். 

இந்த வலையொளிப் பதிவைக் காண https://youtu.be/5vHvuU6aanU இணையத்தள முகவரியை நாடலாம். 

குறிப்புச் சொற்கள்