தாய்மொழிவழி கல்வி கற்றல் பலமே: இந்திய விண்வெளி அறிவியல் வல்லுநர் மயில்சாமி அண்ணாதுரை

தாய்மொழி வழி கல்வி கற்பதும் தாய்மொழியில் சிந்திப்பதும் ஒரு மிகப் பெரிய பலம் என்றும் தன் துறை சார்ந்த பணிக்கு இந்த பின்புலம் சிறப்பானதாக அமைந்தது என்றும் கூறினார் புகழ்பெற்ற இந்திய விண்வெளி அறிவியல் வல்லுநர் மயில்சாமி அண்ணாதுரை.

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் முன்னாள் இயக்குநரும் மூத்த அறிவியலாளருமான இவர், சந்திராயன்-1, 2, மங்கள்யான் ஆகிய விண்கலன்களைப் விண்ணில் ஏவிய பெருமையுடையவர். 

சிங்கப்பூரின் ‘இக்வடோரியல் ஸ்பேஸ்’ நிறுவனம், தமிழ்நாட்டு நிறுவனமான ‘ஸ்பேஸ் சோன் இந்தியா’ இரண்டும் இணைந்து ‘மிஷன் ரூமி’ எனும் உந்துகணை ஏவும் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் செய்துகொண்டன. 

இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் திரு மயில்சாமி அண்ணாதுரை முன்னிலையில் இம்மாதம் 6ஆம் தேதி சிங்கப்பூரில் கையெழுத்தானது. இத்திட்டத்தின் மூலம் உலகிலேயே முதன்முறையாக எந்த இடத்திலிருந்தும் ஏவக்கூடிய தளத்திலிருந்து கலவை உந்துகணை விண்ணில் செலுத்தப்படவுள்ளது.  

அப்போது தமிழ் முரசு நாளிதழுக்காக பிரத்யேக பேட்டியளித்த இவர், ஒரு மூத்த அறிவியலாளராக தமது 36 ஆண்டுகால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 

இளம்வயதிலிருந்தே தாய்மொழிவழி கல்வி கற்ற இவர், தமிழுக்கும் தனக்குமான உறவு ஒரு தாய்க்கும் தனையனுக்குமான உறவைப் போன்றது என்று நெகிழ்வுடன் கூறினார். 

“தமிழ்மொழி போல ஒரு தாய்மொழி கிடைத்தது தமிழர்களுக்கான வரம். தாய்க்கு அடுத்த இடம் தாய்மொழிக்கானது. குறிப்பாக இளையர்கள் தாய்மொழியிலேயே சிந்திக்க வேண்டும். தமிழ்மொழி என்றுமே தானும் உயர்ந்து நம்மையும் உயர்த்தும்,” என்றும் உணர்ச்சிபொங்க கூறினார் இவர். 

மேலும், இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி பகிர்ந்துகொண்ட இவர், ஆரம்பகாலத்தில் இஸ்ரோவில் சிறிய அளவிலான உந்துகணைகளையும் செயற்கைக்கோள்களையுமே உருவாக்க முடிந்தது. அவற்றை ரஷ்யா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் உதவியுடனேயே விண்ணில் செலுத்தும் நிலை இருந்தது என்றும் சொன்னார். 

“பின்னர் 40 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள்களை உருவாக்கினோம். தொடர் முயற்சிகளினால் பின்னாளில் விண்கலன்களின் எடையும் ஏறியது, அவை செல்லும் தூரமும் கூடியது. அதனைத் தொடர்ந்தே நாம் வெற்றிகரமாக நிலவிற்கும் செவ்வாய்க் கிரகத்திற்கும் சென்றோம்,” என்றார் அவர்.  

அதிலும் சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி நாம் பெருமைப்படவேண்டிய ஒன்று என்றும் அத்திட்டத்தில் தான் நேரடியாகப் பணிபுரியாவிட்டாலும் அத்தினத்தின் ஒவ்வொரு நொடியும் மறக்கமுடியாதது என்றும் இவர் கூறினார். 

சந்திரயான் 1ன் வெற்றியிலிருந்தும், சந்திரயான் 2லிருந்து பெற்ற பாடங்களிலிருந்தும் கற்று சிறப்பான முறையில் சந்திரயான் 3-ஐ வெற்றியடையச் செய்தனர் அறிவியலாளர்கள் என்றார் இவர். 

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் வெற்றிப் பயணத்தில் தன்னுடைய பங்களிப்பும் இருக்கிறது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாக இவர் தெரிவித்தார். 

இளம்வயதில் தன்னுடைய தந்தையும் பின்னாளில் தான் ஆசானாகக் கருதிய மறைந்த அறிவியல் வல்லுநர் திரு ஏபிஜே அப்துல் கலாமுமே தம் வாழ்வின் வழிகாட்டிகள் என்றார்.  

திரு கலாம் கற்பித்த பல வாழ்க்கைப் பாடங்கள் தம்மை ஒரு தனிமனிதனாகவும் அறிவியலாளராகவும் மேம்படுத்தியதாகக் கூறிய இவர், ‘எந்த ஒரு வெற்றியும் அடுத்த வெற்றிக்கான அடித்தளம். வெற்றிக் கொண்டாட்டத்தைத் தாண்டி அதனை நிலைநிறுத்தவும் அடுத்த நிலையை அடைவதற்கும் முனைய வேண்டும்’ என்று திரு கலாம் அறிவுறுத்தியதை இன்றளவும் பின்பற்றுவதாகவும் இவர் சொன்னார். 

இக்கால இளையர்கள் விண்வெளித் துறைக்கு அதிகளவில் வர வேண்டும் என்று கூறிய இவர், “எந்த ஒரு துறையும் வருங்காலத்தில் செழித்தோங்க அத்துறை சார்ந்த ஆராய்ச்சி மனப்பான்மையும் ஆழ்ந்த கல்வியும் அவசியம் தேவை. அவ்வகையில், விண்வெளித் துறையில் இளையர்கள் சாதிக்க பள்ளி, கல்லூரி காலங்களிலிருந்தே இத்துறையில் கூடுதல் கவனம் செலுத்திப் பயிற்சி எடுத்துக்கொள்ளுதல் அவசியம்,” என்றும் தெரிவித்தார். 

அரசாங்கத்தைத் தாண்டி தனியார் நிறுவனங்களும் விண்வெளித் துறையில் முன்னேறிவரும் சூழலில் விண்வெளித்துறையில் இளையர்கள் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அவ்வகையில் சிங்கப்பூருக்கு இந்தியாவுக்குமான இந்த ஒப்பந்தம் ஒரு சிறந்த முன்னெடுப்பு என்றும் இவர் குறிப்பிட்டார். 

“பொதுவாகக் கலவை ரகத்தில், செயற்கைக்கோள்கள்தான் அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத் திட்டம் மூலம் உருவாக்கப்படும் கலவை உந்துகலன், வெகு சில நாடுகளாலே உருவாக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் இதனை முன்னெடுத்துத் தயாரிப்பது வரவேற்கத்தக்க ஒன்று,” என்றும் இவர் தெரிவித்தார். 

மேலும், சிங்கப்பூர் இளையர்கள் இந்திய இளையர்களுடன் இணைந்து பல்வேறு புதிய திட்டங்களில் பங்காற்ற வேண்டும் என்றும் அனைத்துலக அளவில் வளர்ச்சி காண வேண்டும் என்றும் இவர் கேட்டுக்கொண்டார். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!