தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்பினால் ஒளிபெற்ற ‘சன்லவ்’

2 mins read
6eb92202-db52-404d-b736-2ed0e1cdafea
பரதநாட்டியம், இசையுடன் நடைபெற்ற கலைநிகழ்ச்சியை ‘சன்லவ்’ இல்லவாசிகள் கண்டுகளித்தனர். - படம்: இந்து அறக்கட்டளை வாரியம்
multi-img1 of 3

இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவைப் பிரிவு, புவாங்கோக் கிரீனில் உள்ள ‘சன்லவ்’ இல்லவாசிகள் கிட்டத்தட்ட 300 பேருக்கான தீபாவளிக் கொண்டாட்டத்தை நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

சென்ற ஆண்டு நடைபெறவிருந்த இந்நிகழ்ச்சி, தாதிமை இல்லத்தில் ஏற்பட்ட கொவிட்-19 தொற்றுக் காரணமாக கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டது. ஆயினும், இவ்வாண்டு அந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இம்முறை, தொண்டூழியர்களின் ஏற்பாட்டில் ‘சன்லவ்’ இல்லவாசிகள் 20 பேர் காலையில் சிவன் கோவிலில் இறைவழிபாடு செய்தனர்.

மீண்டும் ‘சன்லவ்’ இல்லத்திற்கு அவர்கள் திரும்பியதும், ஆடல் பாடல்களுடன் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இசை, நடனத்துடன் ‘சன்லவ்’ இல்லவாசிகளை உற்சாகப்படுத்தினர் தொண்டூழியர்கள்.
இசை, நடனத்துடன் ‘சன்லவ்’ இல்லவாசிகளை உற்சாகப்படுத்தினர் தொண்டூழியர்கள். - படம்: இந்து அறக்கட்டளை வாரியம்

இல்லவாசிகளில் 40 முதல் 70 வயது வரையுள்ளோர் அடங்குவர். சிலர் நடக்கச் சிரமப்பட்டாலும், சிலர் சக்கர நாற்காலியுடன் நடமாடினாலும் தங்களால் இயன்ற வகையில் நிகழ்ச்சியில் அவர்கள் பங்குகொண்டனர்.

அவர்கள் கூடவே ஆடினர், பாடினர், தாளத்திற்கு ஏற்ப கைதட்டி மகிழ்ந்தனர். அனைவரும் தீபாவளி உணர்வில் மிதந்து நிகழ்ச்சியை ரசித்தனர்.

தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்த தொண்டூழியர்களைப் பெரிதும் பாராட்டியது ‘சன்லவ்’ இல்லம்.
தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்த தொண்டூழியர்களைப் பெரிதும் பாராட்டியது ‘சன்லவ்’ இல்லம். - படம்: இந்து அறக்கட்டளை வாரியம்

நண்பகலில் அவர்களுக்கு அறுசுவை உணவுடன் விருந்தளிக்கப்பட்டது.

“தொண்டூழியர்கள் எங்கள் இல்லவாசிகளின் நாளை இவ்வாறு இனிதாக்கியதற்கு மிகுந்த நன்றி தெரிவிக்கிறோம்,” என்று ‘சன்லவ்’ இல்ல நிர்வாகம் தெரிவித்தது.

“தீபாவளியை நாம் நம் குடும்பத்தினரோடு மட்டும் கொண்டாடாமல், பிறரையும் மகிழ்ச்சிப்படுத்த முனையவேண்டும். அன்பைப் பகிரவேண்டும். அவ்வகையில், எங்கள் தொண்டூழியர்களை மிகவும் பாராட்டுகிறேன்,” என்றார் இந்து அறக்கட்டளை வாரிய சமூக சேவைப் பிரிவின் தலைவி சுசீலா கணேசன்.

அன்றைய நாள் தொண்டாற்றியவர்களில் பள்ளி மாணவர்கள் முதல் வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டிற்கும் இதுபோன்று மேலும் பல சமூக சேவைகளுக்கு இந்து அறக்கட்டளை வாரியம் திட்டமிட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்