மறக்கப்பட்ட காராங் குனிகள்

சிங்கப்பூரின் வரலாற்றை நினைவுகூரும்போது ‘காராங் குனி’ என்று கூவிக்கொண்டு நம் குடியிருப்புப் பேட்டைகளை வலம் வந்த சீன ஆடவர்களை மறக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் அவர்களைக் காண்பது மிக அரிதாகிவிட்டது. கடுமையான உழைப்பு, ஆனால் குறைவான சம்பளம் ஈட்டுவதால் ஆண்கள் பலர் இத்தொழிலை கைவிடுகின்றனர்.

ஒரு சிலர் வேறு பணியைத் தேடுவதற்குப் பதிலாக இதிலேயே வசதியாக இருந்துகொள்ளலாம் என்கின்றனர். சிங்கப்பூரர்களும் அதிகம் இப்பொழுது பயன்படுத்தப்பட்ட பொருள்களை காரங் குனிகளிடமிருந்து வாங்குவதுமில்லை. அருகிவரும் இத்தொழிலை இன்னும் செய்துவரும் முதியவர்கள் இருவர், அத்தொழில் அளிக்கும் மனநிறைவைப் பகிர்ந்துகொண்டனர். அவர்களின் அனுபவங்களைக் கேட்டு வந்தது தமிழ்முரசு.

மூதாட்டிக்கு மனநிம்மதி தரும் வேலை

‘காராங் குனி’ தொழிலில் ஈடுபடுவது அதிகம் ஆண்களாக இருந்தாலும், மூதாட்டி நாகம்மாள் (உண்மைப் பெயரல்ல) அதற்கு விதிவிலக்கு. குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் இப்படி ஒரு வாழக்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமென்று நம்மில் பலர் திட்டவட்டமாக யோசிப்போம். ஆனால், 91 வயதாகும் நாகம்மாளுக்கு காராங் குனி வேலையில் ஈடுபடுவது மனநிம்மதி அளிக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளாக காராங் குனியாக இருக்கும் நாகம்மாள், அதற்குமுன் துப்பரவாளராகப் பணிபுரிந்தவர். நாளுக்கு நாள் கணிசமாகக் குன்றிவரும் உடல்நிலையுடன் காணப்படும் நாகம்மாள் வாரத்திற்கு இரண்டு, மூன்று நாள்கள் தோ பாயோவிலிருந்து பொத்தோங் பாசிர்வரை தள்ளுவண்டியில் பொருள்களைச் சேகரித்து வருகிறார்.

வெயில், மழை என்று எதையும் பாராமல், தெருக்களில் காணப்படும் அட்டைப்பலகைகள், தேவையற்ற பொருள்கள் ஆகியனவற்றைச் சேகரித்து, அதன்மூலம் கிடைக்கும் பத்து வெள்ளிக்காகக் கடுமையாக உழைக்கிறார் இவர்.

குடும்பச் சூழல் காரணமாக எட்டுப் பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்துக் கரைசேர்க்க இயலாதுபோன நிலையில், தற்போது தோ பாயோவில் ஈரறை வாடகை வீட்டில் தனியாக தங்கி வருகிறார் நாகம்மாள்.

கழிப்பறைத் துப்புரவாளராகவும், தொழிற்சாலை ஊழியராகவும் பணிபுரியும் அவரின் பிள்ளைகள் சிலரால் நாகம்மாளை நன்கு கவனித்துக்கொள்ள முடியவில்லை.

ஒரு நாளைக்கு சமைத்த உணவை மூன்று நாள்களுக்கு வைத்துச் சாப்பிடும் நாகம்மாள் தன்னால் முடிந்தவரை செலவைக் குறைத்துக்கொள்ளப் பார்க்கிறார்.

பல ஆண்டுகள் இந்த வேலையில் இருந்தபிறகு வீட்டில் இளைப்பாற எண்ணினாலும், மனநிறைவு அளிக்கும் இந்த வேலையை விட்டுவிட அவருக்கு மனம் ஒப்பவில்லை என்பதால் பொருள்களை வீட்டில் பதுக்கி வைப்பதில் இன்பம் காண்கிறார்.

வயதானாலும் பரவாயில்லை

தள்ளாடும் 71 வயதிலும், அட்டைப்பலகைகள் நிறைந்த மிதிவண்டியை சளைக்காமல் தள்ளிக்கொண்டு செல்கிறார் கோபால் பிள்ளை. தோ பாயோவில் வசித்து வரும் இவரின் ஒரு நாள் சம்பளம் கிட்டத்தட்ட $10 மட்டுமே.

தோ பாயோவின் அனைத்து மூலை மூடுக்குகளுக்கும் சென்று சேகரித்த பொருள்கள் ஒன்றின்மேல் ஒன்றாக இவரது வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளாக விருப்பத்தினால் மட்டுமே இத்தொழிலைச் செய்து வருவதாக கோபால் சொன்னார்.

சேகரிக்கும் ஒரு கிலோ பொருள்களுக்கு பத்துக் காசு வாங்கும் இவர், காலையில் பத்து மணிக்கு தனது அன்றாட வாழ்க்கையை தொடங்கி, சில நேரங்களில் நள்ளிரவு மூன்று மணிவரை கண்விழித்து வேலை பார்க்கிறார்.

கனத்த மழையையும் பொருட்படுத்தாமல், சேகரித்த அட்டைப்பலகைகளை நெகிழிப் பைகளால் மூடிக்கொண்டு வெகுதொலைவு நடந்து, தெருத்தெருவாக அலைந்து பொருள்களை தேடி உழன்று போகிறார்.

இவரது வீட்டின் மூலை முடுக்குகளெல்லாம் பொருள்கள் குவிந்துள்ளன. மேலும் அதிகமான பொருள்களை வைப்பதற்கு இடம் இல்லாததால் கோபால், மீதமுள்ள பொருள்களை வீட்டின் வெளிப்புறத்திலும் மின்தூக்கியின் அருகிலும் வைத்துள்ளார்.

குடும்ப உறுப்பினர்களை இழந்த தனக்கு இத்தொழில்தான் எல்லாம் எனக் கூறும் கோபால், கல்வியறிவு இல்லாததால் தன்னால் மற்ற வேலைகளுக்குச் செல்ல முடியாது என்று மனம் வருந்தினார்.

சமூக சேவை நிறுவனங்கள் சில இவருக்குக் கைகொடுத்து வந்தாலும் கடைசிவரை தான் உழைத்தாக வேண்டுமென்ற கட்டாயத்தில் இருப்பதால் இந்தப் பணி தனக்கு ஏதுவாக உள்ளதாக புன்னகைத்தபடி கூறினார் கோபால்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!