ஒரே தொழிற்கல்லூரியில் பயிலும் தாயும் மகனும்

தினமும் காலையில் கல்லூரியில் பயிலும் மகனை வழியனுப்புவதோடு நில்லாமல் அவருடனேயே கல்லூரிக்குச் சென்று படிக்கிறார் விசாலாட்சி சுப்பையா. 47 வயதாகும் இவர் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதிமைத் துறையில் இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்பைப் படித்து வருகிறார்.

இதே கல்லூரியில் பொதுப் பொறியியல் துறை பட்டயப்படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் இவரின் மூத்த மகன் ஞானசெல்வன் பிரகாஷ், 18. 

“அம்மாவுடன் ஒரே கல்லூரியில் படிப்பது ஒரு புதுவித மகிழ்ச்சியான அனுபவம். அம்மா என்று கூறுவதை விட இப்போது அவர் என்னுடைய நெருக்கமான நண்பராகிவிட்டார். என் நண்பர்களுக்கும் என் அம்மாவை மிகவும் பிடிக்கும்,” என்று கூறினார் ஞானசெல்வன். 

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாகக் கல்லாரியில் சேர்ந்த இவர்கள் பெரும்பாலான நாள்கள் ஒன்றாகவே கல்லூரிக்குச் செல்கின்றனர். பேசிக்கொண்டே செல்லும் அந்த நேரத்தை ஒரு தாய்க்கும் மகனுக்குமான தனிப்பட்ட நேரமாகத் தாங்கள் கருதுவதாகவும் இவர் கூறினார்.  

“கல்லூரியில் சேர்ந்த சில வாரங்களிலேயே என் அம்மா அவருடைய வகுப்புத் தோழர்களுடனும் என் நண்பர்களுடனும் நல்ல நட்புறவை வளர்த்துக்கொண்டார். அது மட்டுமல்லாமல் இக்கால இளையர்கள் பேசும் வழக்குமொழி வார்த்தைகளையும் கற்றுக்கொண்டார். இப்போதெல்லாம் அவருடன் பேசுவது என் நண்பருடன் பேசுவது போலவே இருக்கிறது,” என்று சிரித்துக்கொண்டே கூறினார்  ஞானசெல்வன். 

“ஆரம்பத்தில் மகனுடன் ஒரே கல்லூரியில் படிக்க மிகவும் தயங்கினேன். அவரின் சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் என் மகன் இந்த முடிவு எடுக்கும்போது மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்,” என்று கூறினார் விசாலாட்சி. 

நீங்கள் மிகவும் இளமையாக உணரப் போகிறீர்கள் என்றும் இனிமேல் நாம் நண்பர்கள் என்றும் நாம் அதிக நேரத்தை ஒன்றாகச் செலவழிக்கலாம் என்றும் ஒவ்வொரு நாளும் தன் மகன் சொல்லிக்கொண்டே இருந்ததைப் புன்னகையுடன் பகிர்ந்துகொண்டார் விசாலாட்சி. 

“எனக்கிருந்த தயக்கத்தையும் மிரட்சியையும் மகன், குடும்பத்தினர், மகனின் நண்பர்கள், என் வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள் என அனைவருமே புரிந்துகொண்டனர். நான் தனித்து இருப்பதாக உணர்ந்துவிடக் கூடாது என்பதிலும் என் கற்றல் அனுபவம் நன்றாக இருக்கவும் இவர்கள் கூடுதல் அக்கறை செலுத்துகின்றனர். இவர்களின் அன்பும் ஊக்கமுமே என்னை வழிநடத்திச் செல்கிறது,” என்றும் கூறினார் விசாலாட்சி. 

இக்காலத் தொழில்நுட்ப உத்திகளையும் மகனிடம் கற்றுக்கொள்கிறார் விசாலாட்சி. அதேபோல் மகனுடனும் அவர் நண்பர்களுடனும் அவ்வப்போது தேவையான அறிவுரைகளையும் நேரத்தைத் திட்டமிடல் குறித்த தன் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார் இவர்.  

இளம் வயதில் விற்பனைத் துறையில் பட்டயப்படிப்பை முடித்த விசாலாட்சி அத்துறையிலேயே சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 2001ஆம் ஆண்டு தன்னுடைய 26வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்த இவர், முதல் குழந்தைக்குப்பின் தன் பணியை விட்டுவிட்டார். அதன்பின் இவருடைய வாழ்க்கை கணவர், இரு மகன்கள், ஒரு மகள் என குடும்பத்தைச் சுற்றியே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. 

“பொதுவாகவே பெண்களின் உலகம் பிள்ளைகளுக்குப்பின் சுருங்கி விடுகிறது. நானும் அப்படித்தான் இருந்தேன். பிள்ளைகள் ஓரளவு வளர்ந்த பின்னரே எனக்கான அடையாளத்தை இழந்ததாக உணர்ந்தேன்,” என்று கூறினார் திருவாட்டி விசாலாட்சி. 

மூன்று பிள்ளைகளுமே பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த சூழலிலே தனக்கென நேரம் கிடைத்ததாக உணர்ந்த விசாலாட்சி பள்ளி உணவகம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். 

“பிள்ளைகளின் விடுமுறை நாள்களில் அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதே மனதில் இருந்தது. பள்ளி விடுமுறை நாள்களில் எனக்கும் விடுமுறை கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே பள்ளி உணவகம் ஒன்றில் பணிக்குச் சென்றேன்,” என்றார் இவர். 

ஒரு நாள் உணவகத்தில், “உங்களைப் பார்த்தால் படித்த பெண் போல் உள்ளதே,” என்று மூத்தவர் ஒருவர் வினவியதாகவும் அவரே தன் அடையாளத்தை கண்டுகொள்ளும் திருப்புமுனையாக அமைந்ததாகவும் கூறினார் விசாலாட்சி.  

“அவர் முதியோர் இல்லப் பணி ஒன்றைப் பரிந்துரைத்தார். பள்ளிக் காலத்திலிருந்தே சுகாதாரத் துறையில் எனக்கிருந்த ஆர்வத்திற்கு அது தூண்டுகோலாக இருந்தது,” என்றும் கூறினார் இவர். 

அதன்பின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறை அடிப்படைகளைக் கற்றுத் தேர்ந்த இவர் 2020ஆம் ஆண்டு முதல் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஈராண்டு அடிப்படைப் பராமரிப்புத் துணைத் தாதியாகப் பணியாற்றினார்.

“ஒவ்வொரு நாளும் நோயாளிகளைப் பராமரித்தது மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. பொதுவாக, மனிதர்கள் வருமானத்திற்காகவே பணிக்குச் செல்கின்றனர் என்ற என் எண்ணம் முற்றிலும் மாறியது. பணி அளிக்கும் மனநிறைவும் உற்சாகமும் என்னை நானே நேசிக்க வழிவகை செய்தன,” என்றும் உணர்வுபூர்வமாகக் கூறினார் விசாலாட்சி. 

தொடர்ந்து தன்னை இத்துறையில் மேம்படுத்திக்கொள்ள முனைந்த இவர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தாதிமைத் துறையில் படிப்பை மேற்கொண்டார். “படிப்பு வாசமே மறந்திருந்த சூழலில் என் மகன் வயதுப் பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து படிப்பது ஆரம்பத்தில் மிகுந்த கூச்சத்தைத் தந்தது ,” என்றும் குறிப்பிட்டார் விசாலாட்சி. 

குடும்பத்தினரின் ஊக்கத்தினாலும் தாதிமைத் தொழில் மீது இருந்த நாட்டத்தினாலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ந்த இவர் தொடர்ந்து தொழிற்கல்லூரியில் கல்வியைத் தொடர முனைந்தார். அப்போதுதான் இவருடைய மூத்த மகனும் ஜிசிஇ சாதாரண நிலைக் கல்வியை முடித்திருந்தார். அச்சூழலில் இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கத் திட்டமிட்டனர். 

“வாழ்வில் நமக்கான அடையாளத்தை நிலைநாட்டுவது மிகவும் அவசியமான ஒன்று. பல வேளைகளில், பெண்கள் குடும்பத்தை முன்னிறுத்தித் தங்களுக்கான அடையாளத்தை இழந்துவிடுகின்றனர். நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வது ஒரு மனிதராக நம்முடைய பொறுப்பு என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும்,” என்றும் கூறினார் விசாலாட்சி. 

“சில குடும்பங்களில் அதற்கான ஒத்துழைப்பு கிடைக்காத நிலை இருந்தாலும் தொடர்ந்து பெண்கள் குறிக்கோளிலிருந்து விலகாமல் செயல்பட வேண்டும். நம்முடைய ஆர்வத்தையும் உழைப்பையும் கண்டாலே குடும்பத்தினர் சிறிது காலத்தில் நம்மைப் புரிந்துகொள்வார்கள்,” என்றும் இவர் கூறினார். 

உத்வேகம் குறையாத இந்தத் தாயும் ஊக்கம் அளிக்கும் மகனும் அண்மையில் சிவ­தாஸ்-இந்து அறக்­கட்­டளை வாரி­யக் கல்­வி­நிதித் திட்­டத்தின் கீழ் உதவித்தொகையைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!