இளையர்கள்: இலக்கியத்தில் லயிப்போம், மார்கழிக்கு விடைகொடுப்போம்

2 mins read
a2e52d9e-c784-47d0-a51f-af0d80edd435
சிங்கப்பூர் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் அருள்மிகு புனிதமர பாலசுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற பாவை விழா. - படம்: ஏற்பாட்டுக் குழு

காலங்காலமாக வழிபாட்டுக்குரிய மாதமாகப் போற்றப்படும் மார்கழி மாதம் நிறைவடையும் தருவாயில் மனநிறைவு அடைகின்றனர் அம்மாதம் ஒட்டிய இலக்கியங்களை ஆய்ந்து படைத்திருந்த இளையர்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு தொடங்கிய நிலையில் மார்கழி மாதம் அளித்திருந்த இதத்திற்கு விடைகொடுத்து தை மாதத்தின் உற்சாகத்தை அரவணைக்க அவர்கள் காத்திருக்கின்றனர்.

சிங்கப்பூர் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் அருள்மிகு புனிதமர பாலசுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற பாவை விழாவில், இளையர்கள் திருவெம்பாவையை ஒட்டி உரையாற்றினர். அவர்களில் ஒருவரான ரவீந்திரன் மதிமயூரன், 23, திருவெம்பாவையை இயன்றளவு மனப்பாடம் செய்திருந்தபோதும் பொருளை உணர்ந்து முழுமையாகப் படிக்க ஆசைப்படுவதாகக் கூறினார்.

ரவீந்திரன் மதிமயூரன், 23.
ரவீந்திரன் மதிமயூரன், 23. - படம்: ரவீந்திரன் மதிமயூரன் 

சைவ சமயத்தைப் பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையைப் பயிலக் கடமைப்பட்டிருந்தாலும் சான்றோர்களின் மொழியிலுள்ள அழகினையும் ஆழ்ந்த உட்பொருளையும் ரசிப்பதாகச் சொன்னார் அவர்.

 மகாலட்சுமி தினகரன், 19.
 மகாலட்சுமி தினகரன், 19. - படம்: மகாலட்சுமி தினகரன்

கடந்தாண்டு டிசம்பர் 24ஆம் தேதியன்று நடைபெற்ற பாவை வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்றோரில் ஒருவரான மகாலட்சுமி தினகரன், 19, மணிவாசகர் தன்னைப் பெண்ணாக நினைத்து அன்பை விரிவுபடுத்தியதை திருவெம்பாவை படித்ததன்மூலம் அறிந்து நெகிழ்வதாகக் கூறினார்.

சமாக்யா நெடுமறம், 17.
சமாக்யா நெடுமறம், 17. - படம்: நாமா ராக்கர்ஸ்
அர்ஜிதா பாலாஜி, 17.
அர்ஜிதா பாலாஜி, 17. - படம்: நாமா ராக்கர்ஸ்

இந்த மாணவர்கள் போலவே வேறு சில இளையர்கள் ‘நாமா ராக்கர்ஸ்’ என்ற திட்டத்தில் மார்கழி மாதத்தின்போது ஒன்றுகூடி திருப்பாவை பற்றிய கலந்துரையாடல்களை நடத்தியதுடன் விளக்கக் காணொளிகளையும் தயாரித்தனர்.

வைணவ சமயத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையிலிருந்து பண்புகளைக் கற்றுக்கொண்டு இளையர்கள் வருங்காலத்தில் சமுதாயத்தை நல்ல முறையில் வழிநடத்துபவர்களாகவும் ஆதரிப்பவர்களாகவும் திகழ வேண்டும் என்பது ஏற்பாட்டாளர்களின் நோக்கம்.

‘செய்யாதனச் செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்’ உள்ளிட்ட வரிகளிலிருந்து நற்பண்புகளைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார் ஹுவா சோங் கல்வி நிலையத்தைச் சேர்ந்த அர்ஜிதா பாலாஜி, 17.

“இது என் மொழி வளத்தைப் பெருக்கியதுடன் ஆராயும் தன்மையை மெருகுபடுத்தியுள்ளது,” எனக் கூறினார்.

பாசுரங்களின் பொருளை ஓவியங்களாகச் சித்திரிக்கும் நடவடிக்கைகளும் இம்முயற்சியில் இடம்பெற்றதாகக் கூறினார் ஆங்கிலோ-சீன தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி சமாக்யா நெடுமறம், 17.

விடுமுறைக்காலத்தை இவ்வாறு கழித்த இந்த இளையர்கள், தைப்பொங்கல் பிறப்பதற்கும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்