தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேக்காவில் கூட்டுப் பொங்கல் விழா

3 mins read
1c7d60b8-3566-430e-b06e-9488a59feb08
போட்டியாளர்கள் அனைவரும் வேட்டி, சேலை, தாவணி என பாரம்பரிய உடைகளில் அழகுறக் காட்‌சியளித்தனர். - படம்: லாவண்யா வீரராகவன்

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கமும் (லிஷா) சிங்கப்பூர் இந்தியர் சங்கமும் இணைந்து சனிக்கிழமையன்று (ஜனவரி 20) தேக்கா பகுதியில் கோலாகலமாகக் கூட்டுப் பொங்கல் விழாவை நடத்தின.

பொதுமக்களுக்கான பொங்கல், ரங்கோலி, அலங்காரம், கலை நிகழ்வுகள் உள்ளிட்ட போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சிங்கப்பூரின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏறத்தாழ 35 குழுக்கள் போட்டிகளில் பங்குபெற்றன. குடும்பத்தினர் நண்பர்களுடன் இணைந்து ஐந்து முதல் ஒன்பது பேர் கொண்ட குழுக்களாக அவர்கள் வந்திருந்தனர்.

மழை, ஈரமான சூழல், புகை என எதையும் பொருட்படுத்தாமல் பலரும் உற்‌‌‌சாகமாகப் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
மழை, ஈரமான சூழல், புகை என எதையும் பொருட்படுத்தாமல் பலரும் உற்‌‌‌சாகமாகப் போட்டிகளில் கலந்துகொண்டனர். - படம்: லாவண்யா வீரராகவன்

ஒவ்வொரு குழுவினரும் தங்கள் மேடைமேல் ரங்கோலிக் கோலமிட்டு, பொங்கல் பானைகளுக்கு வண்ணம் தீட்டி, மாவிலைத் தோரணம், மஞ்சள் கொத்து, பூக்கள், விளக்குகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு அலங்கரித்தனர்.

சில குழுவினர் தங்களது படைப்பாற்றலைக் காட்டும் விதமாக, மாடுகள், கிராமத்து வீடு, புல்வெளி, மாட்டு வண்டி, கரும்பு உள்ளிட்டவற்றை ‘மினியேச்சர்’ எனும் சிறுசிறு பொம்மைகளாகச் செய்து தங்கள் மேடையை அலங்கரித்தனர்.

கிராமத்து வீடு அமைப்பை கண்முன் நிறுத்திய ‘ஆர்கானிக் மினியேச்சர்’ அலங்காரம்.
கிராமத்து வீடு அமைப்பை கண்முன் நிறுத்திய ‘ஆர்கானிக் மினியேச்சர்’ அலங்காரம். - படம்: லாவண்யா வீரராகவன்

பின்னர் கொடுக்கப்பட்ட கரி அடுப்பில் அலங்கரிக்கப்பட்ட பானையை ஏற்றி, பொங்கலிட்டுக் காட்சிப்படுத்தினர்.

மோல்மென் கேர்ன்ஹில் நல்லிணக்க வட்டத்தின் தலைவர் டேவிட் காய் ஜின்ஹாங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்நிகழ்வில், தமிழர் மட்டுமின்றி பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

போட்டியில் ஆர்வமாக பங்கேற்ற இத்தாலி நாட்டு சுற்றுப்பயணி.
போட்டியில் ஆர்வமாக பங்கேற்ற இத்தாலி நாட்டு சுற்றுப்பயணி. - படம்: லாவண்யா வீரராகவன்

குடும்பத்தினர், குழந்தைகள் என அனைவரும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டது போட்டியை விறுவிறுப்பாகியது. ரங்கோலிக் கலைஞர் சுதா ரவி நீதிபதியாகச் செயல்பட்டு சிறந்த கோலம், அலங்காரங்களைத் தேர்ந்தெடுத்தார்.

அவர், கோலத்தின் அழகு, நேர்த்தி, பயன்படுத்திய வண்ணங்களின் சேர்க்கை, அலங்காரங்களுக்காக எடுத்துக்கொண்ட முனைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறந்த அலங்காரம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொன்னார்.

வண்ண அரிசி, பூக்கள், கரும்பு கொண்டு அலங்காரம் செய்த குழுவினர்.
வண்ண அரிசி, பூக்கள், கரும்பு கொண்டு அலங்காரம் செய்த குழுவினர். - படம்: லாவண்யா வீரராகவன்

பாரம்பரிய உடையணிந்து வந்த இளையர்களில் சிலர் முதன்முறையாகப் பொங்கலிட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

கோவன் பகுதியிலிருந்து வந்திருந்த சுப்புராமன் அக்ஷயா, 14, கூறுகையில், “எங்கள் அம்மம்மா (பாட்டி) நன்றாக பொங்கலிடுவார். நான், அம்மா, அத்தை இணைந்து அலங்காரம் செய்தோம். இது போன்ற போட்டிகளைச் சிறுவயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். ஆயினும், இந்நிகழ்வில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

முனைப்புடன் பொங்கலிடும் போட்டியாளார்கள்.
முனைப்புடன் பொங்கலிடும் போட்டியாளார்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

போட்டியில் ஆர்வத்துடனும், துடிப்புடனும் பங்கேற்ற பொத்தோங் பாசிர் பகுதியைச் சேர்ந்த தோழிகள் சுதா, மல்லிகா, புஷ்பா, விஜயா, மேரி, தாட்சாயினி ஆகியோர் குலவையிட்டு, ‘பொங்கலோ பொங்கல்’ என ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அரிசிக் கோலமிட்டு, இன்ன பிற அலங்காரங்கள் செய்து இதில் பங்கேற்றது உற்சாகமாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

நண்பர்கள், குடும்பத்தினருடன் பொங்கல் செய்த குழு.
நண்பர்கள், குடும்பத்தினருடன் பொங்கல் செய்த குழு. - படம்: லாவண்யா வீரராகவன்

கோலம், அலங்காரப் போட்டிகள் தவிர மக்கள் கையில் கரும்பைப் பிடித்தபடி வட்டமாகச் சுற்றி நின்றுகொண்டு, ஒருவர் விட, அதனை அடுத்து நிற்பவர் பிடிக்கும் வண்ணம் ‘இசை நாற்காலி’ பாணியில் அமைந்த விளையாட்டும் இடம்பெற்றது.

சிறந்த பானை, மேடை அலங்காரங்கள், முதலில் பொங்கிய பானைகள், கரும்பு விளையாட்டில் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் எனப் பல பிரிவுகளில் வெற்றியாளர்களுக்கு 1,000 வெள்ளிக்கான பற்றுசீட்டுகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

மேலும், முஸ்லிம் குடும்பத்தினர், இத்தாலியில் இருந்து சுற்றுலா வந்திருந்த இணையர், தேக்கா பகுதியில் பணியாற்றும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பல்லின மக்கள் இணைந்து, தமிழர் திருநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்ததில் மகிழ்வும் பெருமையும் கொள்வதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்