சிங்கப்பூரில் உள்ள தொழில் பேட்டை ஒன்றில் ‘ஸ்ட்ரே அஃபேர்ஸ்’ எனும் அமைப்பைச் சேர்ந்த தொண்டூழியர்கள் சிலர் குழுக்களாக, தொழிற்சாலைகளில் முடங்கியிருக்கும் தெரு விலங்குகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் தவறாமல் உணவு வழங்கி வருகிறார்கள்.
பிரதீப் குமார் - சாந்தி தம்பதியரும் அந்தத் தொண்டூழியர்களில் அடங்குவர். ஒவ்வொரு முறையும் விலங்குகளுக்கு உணவளிக்க நெருங்கும்போது, நாய்களும் பூனைகளும் அத்தம்பதியை அடையாளம் கண்டு, அவர்கள் கொண்டு வந்திருக்கும் உணவைச் சுவைக்க, அவர்களை நோக்கி விரைகின்றன.
வாரத்தில் மற்ற ஆறு நாள்கள் அந்த விலங்குகளைப் பார்த்துகொள்வது, தொழிற்பேட்டையில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
கடந்த ஐந்தாண்டுகளாக இத்தொண்டில் ஈடுபட்டு வரும் 44 வயது பிரதீப் குமாரும், அவரது 54 வயது மனைவி சாந்தியும், “அந்த விலங்குகளைக் காண நாங்கள் சனிக்கிழமையை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். விலங்குகள் பாதுகாக்கப்பட்ட இல்லத்தில் வசிப்பதில்லை. விலங்குகளும் உயிர்கள்தான். தொழில் பேட்டைகள் பாதுகாப்பான இடமல்ல. கனரக வாகனங்களின் போக்குவரத்து இங்கு அதிகம். விலங்குகளை வேறு யார் பார்த்துக் கொள்வது?” என்று கேள்வி எழுப்பினர்.
கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் வீட்டில் இருந்த பிரதீப் குமாரும் அவருடைய மனைவியும், தொண்டூழியத்தை நாடினார்கள். தங்கள் மகனின் பரிந்துரையில் இந்த அமைப்பில் சேர்ந்த அவர்கள் இன்றுவரை முழு மனத்தோடு இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொழிற்பேட்டையில் கிட்டத்தட்ட 200க்கு மேற்பட்ட தெருப் பூனைகளும் நாய்களும் உள்ளன. அவற்றுக்கென முறையான இருப்பிடமில்லை. தொழிற்சாலை வளாகத்தில் சுற்றித் திரியும் அந்த விலங்குகள் அங்குள்ள கனரக இயந்திரங்களுக்கு அருகில் இருக்கும் இடங்களைத் தங்கள் இருப்பிடமாகக் கொண்டுள்ளன.
வெளிநாட்டு ஊழியர்கள் தங்களால் இயன்றவரை விலங்குகளுக்கு உணவு வழங்குவதோடு நிறுத்திவிடாமல் அவற்றுக்கு அடிபட்டால் கவனித்துக்கொள்வது, விலங்குகள் திடீரென மறைந்துவிட்டால் அதுகுறித்துத் தொண்டூழியர்களிடம் சொல்வது ஆகிய நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
அவர்களில் ஒருவரான ராஜமாணிக்கம் ரமேஷ், 53, பத்தாண்டுகளுக்கு மேலாக நான்கு தெருப் பூனைகளைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கிறார். “இந்தப் பூனைகள்தான் எனக்கு எல்லாம். என் முதலாளி எங்களுக்குப் பூனைகளை வாங்கித் தந்தார். வேலை முடிந்து எனது தங்குவிடுதிக்கு திரும்பியதும் நான் அவற்றை அன்புடன் பார்த்துக்கொள்வேன்,” என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சனிக்கிழமை இரவுகளில் தொழிற்சாலைகள் மூடிய பிறகு தொண்டூழியர்கள் விலங்குகளுக்கு உணவளிக்க கிட்டத்தட்ட 80 கிலோகிராம் எடைகொண்ட உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டுவருகின்றனர். “சில தொண்டூழியர்கள் உணவளிக்க வராமல் இருந்தாலும், அவர்கள் வீட்டில் உணவுகளைத் தயாரித்து எங்களுக்கு அனுப்பி விடுவார்கள்,” என்றார் திருமதி சாந்தி.
வேகவைத்த இறைச்சி, முட்டை ஆகியவற்றுடன் சோற்றைக் கலந்து, பெரிய அட்டைப் பெட்டிக்குள் அதைக் கொட்டி, தொண்டூழியர்கள் தங்கள் கைகளால் உணவை சிறிய துண்டுகளாக்கிக் கலக்கின்றனர். பின் அந்த உணவு ஐந்து சிறிய அட்டைப் பெட்டிகளில் நிரப்பப்படுகின்றது.
ஒவ்வொரு குழுவும் விலங்குகளின் உணவு நிரம்பிய அட்டைப் பெட்டியை எடுத்துகொண்டு, தனி வாகனத்தில் விலங்குகள் காணப்படும் குறிப்பட்ட 10 இடங்களுக்குச் செல்லும்.
ஒவ்வோர் இடத்தை அடைந்ததும் சிறிய நெகிழிக் கிண்ணத்தில் தாராளமான அளவில் உணவை வைத்தபின், தெரு விலங்குகளை அன்போடு அழைத்து உணவளிக்கின்றனர்.
“ஜேக்கி! ஜேக்கி!” என்று தங்களுக்கு மிக நெருக்கமான தெருநாயை பிரதீப் குமாரும் சாந்தியும் அழைக்க, ஜேக்கி அவர்களை உற்சாகத்துடன் கண்டு ஓடி வரும். அப்போது கிண்ணத்தில் இருக்கும் உணவை அவர்கள் அதற்கு அளிக்கிறார்கள்.
தெருவிலங்குகளுக்கு உணவளிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இத்தம்பதி, சனிக்கிழமைகளில் மட்டுமன்றி மற்ற நாள்களிலும்கூட நேரம் கிடைக்கும்போது வீட்டில் உணவைத் தயாரித்து தொழிற்பேட்டைக்குச் சென்று தெருவிலங்குகளுக்கு அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
விலங்குகள் நோய்வாய்ப்படும்போது, தொண்டூழியர்கள் வெளிநாட்டு ஊழியர்களுடன் கைகோத்து தக்க முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
“தொண்டில் இறங்கிய பிறகு எங்களுக்கு விலங்குகள்மேல் அதிக பாசம் ஏற்பட்டுள்ளது. வீட்டிலும் ரூபி எனும் மூன்று வயது நாய்க்குட்டியை வளர்க்கிறோம்.
“வெளிநாட்டு ஊழியர்களிடம்தான் தொண்டூழியர்கள் தெருவிலங்குகளின் நலனைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் இல்லாவிட்டால் விலங்குகளின் நிலைமை கேள்விக்குறிதான்!” என்றார் பிரதீப் குமார்.
தொழிற்பேட்டையில் இருக்கும் அலுவலகக் கட்டடங்கள் சில இடமாற்றம் காணும்போது, அங்கு பணிபுரிபவர்கள் சிலர் விலங்குகளைக் கூடவே அழைத்துச் செல்கிறார்கள். ஆனால், கைவிடப்படும் தெருவிலங்குகள் இறுதியில் மாண்டுபோகின்றன.

