கோயம்புத்தூருக்குப் பொலிவூட்டும் சிங்கப்பூரரின் சுவரோவியம்

ஆவிபறக்க நன்கு ஆற்றப்பட்ட தேநீர். மிகப் பெரிய வாழையிலையில் வடை, தோசை, இட்லிப் பண்டங்களை மெய்த்தோற்றத்தை விஞ்சிய வண்ணங்களில் வரைந்து கோயம்புத்தூர் வழிப்போக்கர்களை நாவூறச் செய்துள்ளார் சிங்கப்பூர் ஓவியர் யிப் யூ சோங், 55.

அண்மையில் கோயம்புத்தூரிலுள்ள உக்கடம் நகர்ப்புறக் கட்டடச் சுவரோவியம் ஒன்றின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாகின.

இந்தியாவும் இந்திய கலாசாரமும் திரு யிப்பிற்குப் புதிதல்ல.

“ஏன், திருமணத்திற்குப் பிறகு என் மனைவியுடன் நான் இந்தியாவுக்குத்தான் சென்றேன்,” என்றார் திரு யிப்.

“இருந்தபோதும் தமிழ்நாட்டுக்குச் செல்வது இதுதான் முதன்முறை,” என்றார் இவர்.

டெல்லியில் 2019ல் சுவரோவியம் வரைந்த திரு யிப், ஸ்டார்ட் இந்தியா அறநிறுவனத்தால் கோயம்புத்தூரில் வரைய மீண்டும் அழைக்கப்பட்டார். முதல்வேளையாக அங்குள்ள உணவுக் கடைகளை உற்றுநோக்கினார்.

“உணவு என்ற கருப்பொருளைத் தேர்ந்தெடுத்தேன். தோசை, தேநீர், ஊத்தப்பம் ஆகிய உணவுகளுடன் தேநீர் ஆற்றுபவர், குடியிருப்புப் பூனை ஆகியவற்றையும் வரைந்தேன். ஒவ்வொரு நாளும் வாழையிலையில் விருந்துண்டதால் அதனையே மிகப் பெரிதாக வரைந்தேன்,” என்று அவர் கூறினார். படத்தில் ‘வாங்க சாப்பிடலாம்’ என்ற வாசகமும் வரையப்பட்டது.

நான்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தின் சுமார் 18 மீட்டர் அகலமாக அந்தச் சுவரில் திரு யிப், ஒன்பது நாள்கள் ஓவியத்தை வரைந்தார்.

”காெண்டோலாவைச் சிலர் உதவியுடன் பயன்படுத்தினேன். வானிலை மிதமான குளிருடன் இருந்ததாலும் மகிழ்ச்சியுடன் வேலை செய்தேன்,” என்றார்.

“கோயம்புத்தூர் மக்கள் அன்புடன் நடந்துகொண்டனர். இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்களையும் கண்டேன். ஒருவரை ஒருவர் சகோதரத்துவத்துடன் நடத்துவதைக் காண முடிகிறது,” என்று இவர் கூறினார்.

ஓவியத்தைக் கண்ட ஊர்மக்கள் சூப்பர் என்று ஆங்கிலத்தில் கூறினர். நான் தமிழில் ‘நன்றி நன்றி’ என்றேன்.
சிங்கப்பூர் ஓவியர் யிப் யூ சோங், 55

“ஓவியத்தைக் கண்ட ஊர்மக்கள் சூப்பர் என்று ஆங்கிலத்தில் கூறினர். நான் தமிழில் ‘நன்றி நன்றி’ என்றேன்,” என இவர் நகைத்தபடி கூறினார்.

மாணவப் பருவத்திலிருந்தே சுவரோவியங்கள் வரைந்துவந்த திரு யிப், பினாங்கிலும் சிங்கப்பூரிலும் அத்தகைய ஓவியங்களை வரைந்துவந்த லித்துவேனியாவைச் சேர்ந்த எர்னஸ்ட் ஸச்சாரெவிக் படைப்புகளைப் பார்த்து இத்தகைய ஓவியங்களை உருவாக்க ஆசைப்பட்டதாகக் கூறினார்.

நிதித்துறையில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய திரு யிப், வார இறுதியில் சுவரோவியம் வரைந்தார்.

“இதனாலேயே எனக்கு களைப்பு மிகுந்தது. அதே நேரத்தில் என் ஓவியங்களின் புகழும் வளர்ந்து வந்தது. ஓவியத்தில் முழுநேரமாக ஈடுபடும்படி என் மனைவி ஊக்குவித்தார்,” என்றார் திரு யிப்.

2015ல் அண்டை வீட்டார் ஒருவரின் அனுமதியுடன் முதல் பொதுச் சுவரோவியத்தைத் திரு யிப் வரைந்தார். இதுவரையில் இவர் சிங்கப்பூரில் சுமார் 60 சுவரோவியங்களையும் வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 20 சுவரோவியங்களையும் வரைந்துள்ளார்.

பன்முகத்தன்மையின் வெளிப்பாடு

சைனாடவுனில் ‘மாமா’ கடை சுவரோவியம். படம்: யிப் யூ சோங்

திரு யிப், தமது படைப்புகள் ஒவ்வொன்றையும் ரசிப்பதாகக் கூறினாலும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு எதிரே உள்ள ஒரு கடைவீட்டுச் சுவரில் வரைந்துள்ள ஓவியம் தம் மனதில் தனி இடம் பிடித்திருப்பதாகக் கூறினார்.

“14 வயதுவரை நான் வாழ்ந்த முதல் வீட்டை இதில் வரைந்திருப்பேன். என் குடும்பத்தினரை வரைந்திருப்பேன்,” என்று அவர் கூறினார்.

கடைவீட்டின் இரண்டாம் மாடியில் வசித்தோம். இன்றைய அடுக்குமாடி வீடுபோல் அல்ல. மழை பெய்யும்போது கூரையிலிருந்து நீர் சொட்டும்,” என்று அவர் கூறினார். தாம் வளர்ந்துவந்த சைனாடவுன் வட்டாரத்தில் அப்துல் காதீர் என்ற ‘மாமா’ கடை (அக்காலத்தில் இந்தியர்களால் நடத்தப்படும் மளிகைக் கடைகளைப் பிற சமூகத்தினர் வைத்துள்ள பெயர்) உரிமையாளரைச் சுவரோவியத்தில் சேர்த்துக்கொண்டார்.

“காலை வணக்கம் என்று தமிழில் சொல்ல அவர்தான் எனக்குக் கற்றுக்கொண்டார்,” என்று அவர் முகமலர்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

தமிழ்ப் பண்பாட்டுச் சுவரோவியங்கள்

‘வில்லேஜ் கறி’ உணவக ஓவியங்கள். படம்: யிப் யூ சோங்

கெர்பாவ் ரோட்டிலுள்ள வில்லேஜ் கறி உணவகத்திற்காக 2016ல் திரு யிப் முதன்முதலாகச் சுவரோவியம் வரைந்தார்.

“மீனாட்சியம்மன் ஆலய கோபுரங்கள், தாஜ் மகால், வயல்வெளி, வாழையிலை உணவு ஆகிய அம்சங்களை என் ஓவியத்தில் சேர்த்தேன்,” என்றார் திரு யிப்.

இந்திய வெளிநாட்டு ஊழியர்கள் அடிக்கடி வந்து சாப்பிடும் இந்த உணகத்தில் சுவரோவியத்தை இன்றும் பலர் ரசிப்பதாக உணவக உரிமையாளர் பாலசுப்ரமணியம் பிரபா, 55, கூறினார். “தமிழர்களின் வாழ்வியல் சார்ந்தவற்றை ஒரு சீனரால் வரைய முடியும் என்பதைக் காணும்போது வியப்பாக உள்ளது. கோயம்புத்தூரில் சிங்கப்பூரராக அங்கு சென்று பாராட்டப்படுவதை எண்ணி பெருமைப்படுகிறேன்,” என்றார்.

அதன் பின்னர் திரு யிப், பல்வேறு படைப்புகளை உருவாக்கினார். சாங்கி விமான நிலையத்திலும் சாங்கி வில்லேஜிலும் இந்திய பூக்கடையைத் திரு யிப் வரைந்தார். அத்துடன், பூமலையிலுள்ள ஒரு கல்லில் இந்தியத் திருமணத்தைக் வரைந்திருக்கிறார். கடந்த ஆண்டு ஆரிய சமாஜ கட்டடத்திற்குப் பின்புறத்தில் திரு யிப் வரைந்த பெரிய சுவரோவியம் பெரும் பாராட்டுதலைப் பெற்றிருந்தது.

சிங்கப்பூரராக இருப்பதால் பல்வேறு காலாசாரங்களின் அறிமுகம் தமக்குக் கிட்டியுள்ளதையும் இந்நாட்டுக் கலாசாரத்தின் பன்முகத்தன்மையைப் பிறருக்கு எடுத்துச் செல்ல இயன்றதையும் நினைத்துப் பெருமைப்படுவதாகத் திரு யிப் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!