வருந்திய தாயார்; திருந்திய மகன்

இப்போது 17 வயதாகும் ரோஹனுக்கு (உண்மைப் பெயரன்று) பள்ளிப் பருவத்தில் தீய சேர்க்கை இன்பம் தந்தது. கல்வியில் நாட்டமின்மை, மது அருந்துவது, புகைப்பிடிப்பது, அடிதடி, வெட்டு, குத்து என்பவை எல்லாம் அவரது வாழ்க்கையில் வழக்கமாகின.

அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து ரோஹன் அப்போது சிந்திக்கவில்லை. ஒற்றைப் பெற்றோருடன் வளரும் ரோஹன், தாயார் தன் போக்கைக் கண்டு கண்ணீர் வடித்தபோதெல்லாம் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

இந்நிலையில், திருடியதற்காகவும் கத்தி வைத்திருந்ததற்காகவும் ரோஹன் காவல்துறையிடம் பிடிபட்டார்.

ஈராண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் ரோஹன் சிங்கப்பூர் சிறுவர் இல்லத்துக்கு அனுப்பப்பட்டார். மகனின் நிலையை ஏற்க அவருடைய தாயார் முதலில் தயங்கினார். தற்போது இல்லத்தில் 19 மாதங்கள் கழித்துள்ள ரோஹன் தற்போது திருந்திவிட்டார்.

ஆபத்தில் இருக்கும் இளையர்களை நல்வழிப்படுத்த சமூகமும் குடும்பமும் பெரும்பங்காற்றுகின்றன.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் இளையர் குடியிருப்புச் சேவைகள் பிரிவு, தங்கள் நடத்தையில் முன்னேற்றம் காட்டும் இளையர்களுக்கு விருதுகளை வழங்கி அங்கீகரிக்கிறது.

திருந்தி வாழ ஆர்வம் காட்டும் இளையர்களுக்கும் விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது விழா சென்ற மாதம் நடைபெற்றது. அதில் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

விருது பெற்றவர்களில் ஒருவரான ரோஹனுக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. அவை, குழுக்களில் சிறப்பாக ஒத்துழைத்தவருக்கான விருது, இளம் விஞ்ஞானி மற்றும் இளம் கலைஞர் விருதுகள் ஆகும்.

சிறுவர் இல்லத்தில் அறிவியல் புத்தகங்கள் படிக்கத் தொடங்கிய ரோஹனுக்கு அறிவியலில் நாட்டம் ஏற்பட்டது. அவருக்கு இல்லத்தில் பள்ளிப் பாடங்களும் கற்பிக்கப்பட்டன. தற்போது அவர் ஓர் உயர்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் பயில்கிறார்.

அடுத்தாண்டு வழக்கநிலைத் தேர்வு எழுதவிருக்கும் ரோஹன் அதற்காக கடுமையாக உழைக்கிறார். தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் அறிவியல் தொடர்புடைய பாடத்தைத் தேர்ந்தெடுக்க அவர் விரும்புகிறார்.

கோபத்தைக் கட்டுப்படுத்த சிரமப்பட்டது, உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பகிரத் தயங்கியதுடன், பள்ளிக்குச் செல்லாமல் தீய நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட்ட ரோஹன் இப்போது மாறிவிட்டார்.

சிறுவர் இல்லத்தில் பணிபுரிபவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளும் அவர், தமக்காக ஏற்பாடு செய்யப்படும் நடவடிக்கைகளில் முழு மனத்துடன் ஈடுபடுகிறார்.

“சிறுவர் இல்லத்தில் முதலிரு மாதங்கள் எனக்குக் கடினமாக இருந்தன. புது சூழலுக்கு என்னை தகவமைத்துக்கொள்ள சிரமமாக இருந்தது. ஆனால், இன்று எனக்கு சிறுவர் இல்லத்தை விட்டு வெளியே செல்ல மனமில்லை,” என்றார் ரோஹன்.

ரோஹன் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தம் தாயாரைப் பார்க்க இல்லத்திலிருந்து வெளியே வருவார். இன்று தம்முடன் நெருக்கமாகிவிட்ட ரோஹன் கட்டொழுங்குடன் நடந்துகொள்வதை எண்ணி அவருடைய தாயார் பெருமிதம் கொள்கிறார்.

ரோஹன் இன்னும் ஐந்து மாதங்கள் சிறுவர் இல்லத்தில் இருக்க வேண்டும். அதன் பிறகு வெளியுலகில் காலெடுத்து வைக்கவுள்ள அவர், முதலில் ஓட்டுநர் உரிமம் பெற முடிவெடுத்துள்ளார்.

ரோஹனின் இளையர் வழிகாட்டி அதிகாரியான சரவணன் பாலகிருஷ்ணன், 33, “ரோஹன் மாற்றம் காண்பதில் மிக உறுதியாக இருந்தார். அவருடன் நான் ஈடுபட்ட தனிப்பட்ட நேரங்களுக்கு அப்பாற்பட்டு அவருக்கு ஏற்பாடு செய்யப்படும் குழு நடவடிக்கைகளிலும் ரோஹன் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

“மனம்விட்டுப் பேசி, தன் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொண்ட ரோஹனிடம் இன்று மாற்றத்தைக் காண முடிகிறது. ரோஹனின் கதை பிற இளையர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்று சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!