தேடலைத் தூண்டிய சிலம்பப் பயிலரங்கு

தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த வீரத்தின் ஓர் அடையாளமான ‘சிலம்பம்’ தற்காப்புக் கலைப் பயிலரங்கு கடந்த மார்ச் 31ஆம் நாள், சிராங்கூனில் உள்ள களரி அகாடமி பயிற்சிக்கூடத்தில் நடைபெற்றது.

தமிழ்மொழி விழா 2024இன் ஒரு பகுதியாக நடைபெற்ற இப்பயிலரங்கில், சிலம்பக் கலையின் அடிப்படை அசைவுகளான, ‘வெட்டு’, ‘வாரல்’ ஆகியவையும், அவற்றைக் கொண்டு கட்டமைக்கப்படும் நான்கு வகை முக்கியத் தொடர்வரிசைகளும் (Sequences) கற்றுக் கொடுக்கப்பட்டன.

சிலம்பக் கலை வரலாறு, போர்ச் சிலம்பம், அலங்காரச் சிலம்பம் ஆகிய வகைகள், அவற்றின் வேறுபாடுகள் எனப் பல தகவல்கள் பகிரப்பட்டன. தவிர, நான்கு திசைகளிலும் செய்யப்படும் ‘வெறுங்கை தற்காப்பு’ எனும் அடிப்படைத் தற்காப்பு வரிசைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

‘களரி அகாடமி’ குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிலரங்கை, தமிழாசிரியரும், சிலம்ப ஆசானுமான திருவாட்டி பொன்மொழி வழிநடத்தினார். கற்றவற்றைப் பயிற்சி செய்ய பிற பயிற்றுவிப்பாளர்கள் உதவினர்.

பயிலரங்கில் பங்கேற்ற சிலருடன் பயிற்றுவிப்பாளர்கள். படம்: லாவண்யா வீரராகவன்

இப்பயிலரங்கில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மரபுக் கலைகளின் மீது கொண்ட பேரார்வத்தால் இந்த பயிலரங்கிற்கு வந்ததாகச் சொன்னார் எண்ணெய், எரிவாயுத் துறையில் பணியாற்றும் பொறியாளர் திருவாட்டி சுதான்யா, 38.

தன் நான்கு வயது மகனுக்காக வகுப்பு குறித்த தேடலில் இறங்கியவர், ஒரு அடிப்படைப் புரிதலுக்காக பயிலரங்கில் சேர்ந்ததாகவும் அது மிகவும் சுவாரசியமாக அமைந்ததால் தாமே கற்க விழைவதாகவும் சொன்னார்.

புத்தகங்கள், காணொளிகள் மூலம் மட்டுமே அறிமுகமான சிலம்பம், உண்மையில் எப்படி இருக்கும் என அறிய தன் இரு குழந்தைகளுடன் வந்திருந்தார் செங்காங் பகுதியைச் சேர்ந்த திருவாட்டி கீதா.

தானும், முறையே ஆறு, பதினொரு வயதான தன் பிள்ளைகள் தனன்யா, ஹரிஷ் என மூவரும் இணைந்து சிலம்பக் கலையைக் கற்க வேண்டும் என விரும்புகிறார் திருவாட்டி கீதா. இது, தன் குழந்தைகளிடம் தமிழ்மரபு குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதோடு, தங்களுக்கிடையிலான உறவையும் மேம்படுத்தும் என அவர் நம்புகிறார் .

அவர் எதிர்பார்த்தபடி, இதனைக் கற்பது மகிழ்வாகவும் புதுமையாகவும் இருப்பதாக தனன்யா, ஹரிஷ் இருவரும் கூறினர்.

இதேபோல மற்றொரு தாய்-மகன்-மகள் மூவரும் இப்பயிலரங்கிற்கு வந்திருந்தனர்.

தன் பிள்ளைகளுக்குச் சிலம்பம், தற்காப்பு போன்ற சொற்களே இப்போதுதான் அறிமுகமாகின்றன என்றார் திருவாட்டி சிந்துஜா குமரன். இங்கு பேசப்பட்டவையும், கற்றுக் கொடுக்கப்பட்டவையும் தன் பிள்ளைகளிடம் ஒரு தேடலை உருவாக்கும் என அவர் கருதுகிறார்.

தனது எட்டு வயது மகன் ரிபவ் கபிலன், பதின்மூன்று வயது மகள் தி‌‌‌ஷா கபிலன் ஆகியோரை மின்னிலக்கக் கருவிகளிடமிருந்து திசைதிருப்பி, உடற்பயிற்சி மேற்கொள்ளச் செய்ய இது நல்வாய்ப்பு எனவும், இவ்வாறு சேர்ந்து பயில்வது, மூவருக்கிடையில் ஒரு நெருக்கத்தை உருவாக்கும் எனவும் சொல்கிறார் திருவாட்டி சிந்துஜா.

பெண்கள் திரளாக வந்து கலந்துகொண்டது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய ஆசான் பொன்மொழி, இப்பயிலரங்கு அவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

மொழியில் புலமை பெற முதற்படியாக, எழுத்துகளைக் கற்பதுபோல, சிலம்பத்தில் தேர்ச்சி பெறத் தேவையான அடிப்படை அசைவுகள் இப்பயிலரங்கில் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன எனச் சொல்கிறார் ‘களரி அகாடமியின்’ தோற்றுநர் ஆசான் வேதகிரி கோவிந்தசாமி, 44.

இதனை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பல வரிசைகளைத் தொடர்ந்து பயிற்சி செய்தால், சிலம்பக் கலை வல்லுநராகலாம் என்கிறார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!