தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இறைப்பணியில் இன்புறும் இளம் இமாம்கள்

4 mins read
1e620ea8-5777-4e47-b95d-5fb1f5f4b0f2
அப்துல் கஃபூர் பள்ளிவாசலைச் சேர்ந்த சமயப் போதகர்கள் ஃபஹீம் அஹம்மது சையது முஹம்மது (இடம்), முஹம்மது சூஃபி அப்துல் சலீம். - படம்: பே.கார்த்திகேயன்

தொழுகையை வழிநடத்தி, ஐயங்களைக் களைந்து ஆலோசனை வழங்குகின்றனர் அப்துல் கஃபூர் பள்ளிவாசலைச் சேர்ந்த இந்த இளம் சமயப் போதகர்கள். இவர்கள் தங்களது சேவையைப் பற்றியும் ரமலான் குறித்த தங்களின் உணர்வுகளையும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர். 

விரும்பிய பணி

குடிமைத் தற்காப்புத் துறைமீது ஒரு காலத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் முஹம்மது சூஃபி அப்துல் சலீம், 26.

ஆனால் இவரது பார்வை, ஆன்மிகப் பாதையில் திரும்பியது. சமயப் போதகராகத் தகுதிபெற்ற இவர், தற்போது அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் கல்விப்பிரிவுத் தலைவராக இருக்கிறார்.

வார இறுதி சமயப் பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டத்தை இவர் வகுத்து வருகிறார்.

தொடக்கத்தில் விரும்பிய துறை வேறு, முடிவில் இறைவன் தமக்குத் தேர்ந்தெடுத்த துறை வேறு என்றாலும் அதுவே பொருத்தமாக உள்ளது என திரு சூஃபி கூறினார்.

“இறைவன் ஒரு வேலையை நமக்குத் தரும்போது அதைப் பொறுப்புடன் ஆற்றவேண்டும். அதனை என்னால் இயன்றவரை சிறப்பாகச் செய்து பிறரையும் இஸ்லாத்துடன் இணைக்க விரும்புகிறேன்,” என்றார் திரு சுஃபி.

முஹம்மது சூஃபி அப்துல் சலீம், 26.
முஹம்மது சூஃபி அப்துல் சலீம், 26. - படம்: பே.கார்த்திகேயன்

‘மதராசா அல்ஜுனிட்’டில் 12 ஆண்டுகள் பயின்ற பின்னர் ஏமனிலுள்ள ஹதரமவுத் நகரில் மூவாண்டுப் பட்டக்கல்வி பயின்றார். அதன் பின்னர் தேசிய சேவைப் பிரிவில் படைப்பிரிவுத் தலைவராக இருந்தார்.

பள்ளித்தேர்வுகளால் ஏற்படும் அழுத்தத்தைச் சமாளிக்க வேண்டிய மாணவர்களுக்கு மேலும் அழுத்தம் கொடுப்பதைத் தவிர்த்து மிக இலகுவான முறையில் பாடங்கள் அமைக்கப்பதில் கவனம் செலுத்தினார்.

தரீம் எனும் சிற்றூரில் பாரம்பரிய முறையில் சமயப் பாடங்களைக் கற்றது, இதுவரை தமக்குக் கிடைத்திராத மாறுபட்ட அனுபவம் என்ற இவர், கல்வி முறையின் கடுமையையும் விவரித்தார்.

“போதகர் ஒருவரைச் சுற்றி மாணவர்கள் நாங்கள் அனைவரும் அமர்ந்து கேட்போம். பாடநூல்களின் ஒவ்வொரு பக்கத்தையும் படித்து நன்கு கரைத்துக் குடிக்கவேண்டும்,” என்று இவர் கூறினார்.

சமயப் போதகர்கள் பிறருக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டும் என வழிபாட்டுச் சமூகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்ப்பதாக திரு சூஃபி கூறினார்.

“நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பிறர் கவனிக்கிறார்கள். எனவே பிறர் விரும்பும், மதிக்கும் வகையில் இமாம்கள் நடந்துகொள்ளவேண்டும்,” என்று அவர் கூறினார்.

“அதே நேரத்தில், பிறரை எடை போடாமல் போதகர்கள் புரிந்துணர்வு காட்டவேண்டும். அணுகுவதற்கு எளியவராகவும் பழகுவதற்கு இனிமையானவராகவும் இருக்கவேண்டும்,” என்று திரு சூஃபி கூறினார்.

மதினா பல்கலைக்கழகத்தில் திரு சூஃபி தற்போது இஸ்லாமியச் சட்டத்தை இணையம்வழி பயில்கிறார்.

முடிந்த அளவுக்குப் பயின்று, அதன்மூலம் சமுதாயத்திற்கு நன்மை செய்யவேண்டும் என்ற தம் உறுதியை இவர் வெளிப்படுத்தினார். இறைவனுடன் நெருக்கம் பாராட்டும் ரமலான் மாதத்தில் நற்செயல்களை மேலும் எளிதாகச் செய்ய முடியும் என்றும் இவர் கூறினார்.

ரமலானின் சிறப்பு

சுவையான உணவைப் பகல்வேளையின்போது துறந்தாலும் அந்தக் கடமை ஒரு சுமையன்று, சுகமே என்கிறார் இளம் சமயப் போதகர் ஃபஹீம் அஹம்மது சையது முஹம்மது, 25.

ரமலான் முடிவதற்குச் சில நாள்களே எஞ்சியுள்ள நிலையில் முஸ்லிம்களின் சகோதரத்துவத்தை வெளிக்கொணரும் இந்த மாதம், கண் இமைக்கும் நேரத்தில் முடிவதுபோல தோன்றுவதாக இவர் உணர்கிறார்.

ஃபஹீம் அஹம்மது சையது முஹம்மது, 25. 
ஃபஹீம் அஹம்மது சையது முஹம்மது, 25.  - படம்: பே.கார்த்திகேயன்

“ரமலானின் அழகை வார்த்தைகளால் விவரிக்க இயலாது,” என்று ஃபஹீம் அஹம்மது நெகிழ்கிறார். ரமலானின் ஓர் இரவில் தொழப்படும் ரக்காத்துகள் குறைந்தது 83 ஆண்டுகள் தொழுகையின் பலனை அளிப்பதாகவும் இவர் கூறினார்.

அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் சமூகத் தொடர்பு மற்றும் இளையர் பிரிவுக்கான மூத்த நிர்வாகியாக இவர் செயலாற்றுகிறார். சமயம் சார்ந்த ஐயங்களைத் தீர்த்துவைத்தல், முறையான விளக்கங்களை அளித்தல், தொழுகைகளையும் வகுப்புகளையும் நடத்துதல், தனிப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்குவோருக்கு வழிகாட்டுதலை அளித்தல் போன்ற கடமைகள் சமயப் போதகருக்கு இருப்பதாகக் கூறினார்.

‘மதராசா அல்ஜுனிட் அல் இஸ்லாமியா’ என்ற சமயப் பள்ளியில் 12 ஆண்டுகள் திரு ஃபஹீம் பயின்றார். ஆங்கிலம், அரபு, மலாய் ஆகிய மொழிகளைப் பயின்ற இவர், வீட்டில் தமிழில் பேசப் பழகினார். ‘ஓ’ நிலைத் தேர்வு முடித்துவிட்டு ஈராண்டுகளுக்கு நீடிக்கும் சமயக் கல்வியைப் பயின்றார்.

பல்கலைக்கழகத்திற்கு முந்திய அந்தப் படிப்பை நிறைவுசெய்து, ஜோர்தான் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியப் பட்டக்கல்வியை மேற்கொண்டார். நான்கு ஆண்டுகளாக இவர் இஸ்லாமியச் சட்டத்தை முக்கியப் பாடமாகப் பயின்றார்.

ஆங்கிலம், மலாய் மொழிகளின் துணையின்றி அரபு மொழியையே சார்ந்து பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டி இருந்தது.

“திருக்குர்ஆன், சுன்னா ஆகிய புனித நூல்கள் இஸ்லாமிய விதிமுறைகளுக்கு மூலமாக உள்ளன. இருந்தபோதும் தற்கால விவகாரங்கள் அனைத்திற்குமே நேரடி விடைகள் இல்லாததால் புனித நூல்களை முறைப்படி பகுத்து ஆராயக்கூடிய பயிற்சியை இந்தக் கல்வி வழங்குகிறது,” என்று திரு ஃபஹீம் கூறினார்.

இஸ்லாத்தின் அழகையும் இன்பத்தையும் இளையர்களுக்கு வெளிப்படுத்த விரும்புவதாக மலர்ந்த முகத்துடன் கூறினார் திரு ஃபஹீம். செழுமையான மரபுள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் இளையர்கள் தொடர்ந்து நிரம்ப வேண்டும் என்பது இவரது விருப்பம்.

வருங்காலத்தில் இஸ்லாமியத் துறையில் முதுகலையும் முனைவர் படிப்பும் மேற்கொள்ள விரும்பும் திரு ஃபஹீம், இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு மேலும் குரல்கொடுக்க விரும்புகிறார்.

குறிப்புச் சொற்கள்