‘சிலப்பதிகாரம்’ புகட்டிய வரலாற்றுப் பாடம்

2 mins read
48e8f0f2-88d0-4e92-935e-911a8f2eca98
‘மாணிக்கப் பரல்’ சிலம்பினை ஏந்தும் கண்ணகி கதாபாத்திரம். - படம்: கி.ஜனார்த்தனன்

சிலப்பதிகாரக் காவியம் குறிப்பிடும் பூம்புகார் நகருக்கு, ‘சம்பாபதி’ என்ற பழைய பெயர் இருந்தது. காவியத்தின் இணை நாயகியான மாதவி, 11 வகையான கூத்து வகைகளில் தேர்ச்சி அடைந்தவர்.

இவ்வாறு சிலப்பதிகாரத்தில் பொதிந்துள்ள அரிய தகவல்களை ‘சிலப்பதிகாரம்’ என்ற படைப்பின் மூலம் அதிபதி நாடக நிறுவனம் அரங்கேற்றியது.

அங் மோ கியோ அவென்யு 8ல் உள்ள மக்கள் கழக மன்றத்தில் அரங்கேறிய இந்நாடகம், தமிழ்மொழி மாதத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று.

காதல் உணர்வு ததும்பும் இளங்கோவடிகளின் கவிமொழிகளுடன் தமிழ் வரலாற்றுக் கட்டடங்கள் பற்றியும் வசனங்களில் இடம்பெற்றுள்ளன. பாவை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கள் மன்றம், பூதச்சதுக்கம் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் இந்த வசனங்களில் இடம்பெறுகின்றன.

பூம்புகாரில் இருந்ததாக சிலப்பதிகாரத்தில் கூறப்படும் கானக்கோழி, நீர்க்காக்கை, உள்ளான் குருவி, ஊரல் குருவி உள்ளிட்ட பறவைகளின் பெயர்களுடன் அவற்றின் படங்களும் ஆங்கிலப் பெயர்களும் திரையில் காண்பிக்கப்பட்டன.

கதைநாயகி கண்ணகி ஓலைச்சுவடிகளைப் படித்து தம் அறிவை வளர்த்துக்கொண்டதையும் சமண சமய ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாகுபாடின்றிக் கற்பித்ததையும் காண்பித்து சங்கக் காலச் சமூகத்தில் நிலவிய கல்வி நிலையை நாடகம் எடுத்துக்காட்டியது.

பொற்கொல்லனாக நடித்த தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் வசந்த் குமார் ஆறுமுகம், 33, இதுவே தாம் நடிக்கும் முதல் நாடகம் என்று குறிப்பிட்டார்.

“எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நான் நடிக்க இயக்குநர் புகழேந்தி முடிவு செய்திருந்தார். திறமையான நடிகர்களுடன் பணியாற்ற முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி,” என்று திரு வசந்த் கூறினார்.

மதுரை நகரம் தீயில் எரிவது போன்ற காட்சி.
மதுரை நகரம் தீயில் எரிவது போன்ற காட்சி. - படம்: கி.ஜனார்த்தனன்

தேவந்தி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த தேசிய தொடக்கக் கல்லூரி மாணவி சம்பத் பூஜா, 17, தாமும் சக நடிகர்களும் குழு உணர்ச்சியுடன் நடித்ததாகக் கூறினார்.

“ஜனவரி தொடங்கி இந்த நாடகத்திற்குத் தயாரானோம். வாராவாரம் வசனங்களைப் படித்த நாங்கள், ஒருவருக்கொருவர் நடித்தும் காட்டினோம்,” என்று அவர் கூறினார்.

கதாபாத்திரங்கள் நன்றாக நடித்துக் காட்டியதாகவும் ஏற்கெனவே தெரிந்த சிலப்பதிகாரக் கதையை மேலும் நன்கு புரிந்துகொள்ள முடிந்ததாகவும் ஸெங்குவா தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த சீனிவாசப் பெருமாள் நிவ்ரித்தி, 12, கூறினார்.

ஏப்ரல் 3, 4, 5, 6 தேதிகளில் இந்நாடகம் அரங்கேறுகிறது. நுழைவுச்சீட்டுகளைப் பெற விரும்புவோர் https://shorturl.at/GHLX5 தளத்தை நாடவும்.

குறிப்புச் சொற்கள்