அழகு தமிழில் விருந்தளித்த ‘இலக்கிய சங்கமம் 2024’

2 mins read
dd1d7e8f-db7f-4b7a-a946-91a4a27f6b10
வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பினரால் ஏழாம் ஆண்டாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. - படம்: லாவண்யா வீரராகவன்

சங்க இலக்கியக் கூறுகளைப் போற்றும் வகையில் அறம், வாழ்வியல் குறித்த ஆன்றோரின் உரைகளுடன் களைகட்டியது ‘இலக்கிய சங்கமம் 2024’.

தமிழ் மொழி மாதத் தொடக்க விழாவை அடுத்து, முதல் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, தேசிய நூலகத்தில் மார்ச் 31ஆம் தேதி நடைபெற்றது.

தமிழ் வாழ்த்துப் பாடல், தமிழ் மொழியைப் போற்றும் பாடல், நாட்டியப் படைப்பு எனக் கலை அம்சங்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அவர் ‘சிங்கப்பூர் போற்றும் செந்தமிழ்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். மாணவர்களுக்குச் சிறுவயது முதலே சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் கருத்துகளைச் சொல்லிக் கொடுப்பதால் அவர்களின் வாழ்க்கையைச் செம்மையாக்க முடியும் என்று அவர் சொன்னார்.

தலைமையுரையாக ‘எழுவாய் எட்டுத்திக்கும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார் ‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி.

சங்க இலக்கியம் தொட்டு, பல படைப்புகளை நல்கிய பெரியோரைப் பற்றிப் பேசுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்தப் பெரியவர்களின் படைப்புகள் கூறும் கருத்துகளை எல்லா வயதினரும் ஆழ்ந்து படிப்பதும் அதனைப் பின்பற்றுவதும் முக்கியம் என்றார் அவர்.

தமிழ் மொழியின் சிறப்பு, சங்க இலக்கிய அகம் புறம் பாடல்கள், அழகியல் தொடங்கி வாழ்வியல் வரை எனப் பலவற்றையும் ‘நோமென் நெஞ்சே! நோமென் நெஞ்சே!! எனும் தலைப்பில் பொருள்படப் பேசினார், சிறப்பு அழைப்பாளரான சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியை முனைவர் கி. துர்காதேவி.

‘நல்லறமும் ஒண்பொருளும்’ எனும் தலைப்பில் இலக்கியப் பாடல்களைச் சுட்டிக்காட்டி, எளியோர்க்கும் புரியும் வண்ணம் உரையாற்றினார், சிங்கப்பூர் தேசிய கல்விக் கழக இணைப் பேராசிரியை டாக்டர் சீதாலட்சுமி.

தொடர்ந்து, பாலர் பள்ளி மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டி, தொடக்க நிலை மாணவர்களுக்கான கொன்றை வேந்தன், நல்வழி, இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம் ஒப்புவித்தல் போட்டி, உயர்நிலை மாணவர்கள், பெரியவர்களுக்கான பேச்சுப் போட்டிகளிலும் வெற்றிபெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினரும் முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான இரா. தினகரனுடன் போட்டிகளின் நடுவர்கள்.
சிறப்பு விருந்தினரும் முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான இரா. தினகரனுடன் போட்டிகளின் நடுவர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

பாலர் பள்ளிக் குழந்தைகள் தொடங்கி, முதல் பரிசு பெற்ற அனைத்து மாணவர்களும் அவர்கள் படித்தவற்றை அழகு தமிழில் மேடையில் அரங்கேற்றியது பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது.

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில், ‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பினரால் ஏழாம் ஆண்டாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்தோர் சிறப்பிக்கப்பட்டனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சங்க இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கியுள்ளதில் மகிழ்ச்சி என்றும் அவர்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில் போட்டிகள் நடத்துவதும் பரிசளிப்பதும் பெருமை என்றும் கூறினார் மன்றத்தின் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி.

குறிப்புச் சொற்கள்