ஏர் இந்தியாவின் உலகளாவிய விமான நிலையச் செயல்பாட்டு அதிகாரியாக சிங்கப்பூரர் நியமனம்

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாகப் பல நாடுகளில் விமானத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஜெயராஜ் சண்முகம், ஏர் இந்தியா நிறுவனத்தின் உலகளாவிய விமான நிலையச் செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றியுள்ள இவர், அதன் புதிய இரண்டாம் முனையத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்ததில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

அந்தப் பொறுப்பில் சீரிய பொறுப்பாற்றியதன்மூலம் விமான நிலைய நிர்வாகத்திலும் செயல்பாட்டிலும் அவரது திறன் வெளிப்பட்டதாக ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மெக்பர்சன் வட்டாரத்தின் பாலாம் சாலையில் ஈரறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீட்டில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக, பெற்றோர் அரவணைப்பில் வளர்ந்தவர் ஜெயராஜ்.

சிங்கப்பூர் ஆயுதப் படையின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்று சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்று சீருடைப் பணியை 1988ஆம் ஆண்டு தொடங்கினார் இவர்.

பணிமாற்றம் பெறும் வேட்கை இவரை ஆறாண்டுகளுக்குப் பின் 1995ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நிர்வாகப் பயிற்சிபெறும் வேலைக்கு இட்டுச் சென்றது.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ, நியூசிலாந்தின் ஆக்லாந்து, சுவிட்சர்லாந்தின் ஸூரிக் போன்ற நகரங்களின் விமான நிலையங்களில் துணை நிலைய மேலாளர், நிலைய மேலாளர், செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் மூத்த மேலாளர், ரஷ்யாவுக்கான பொது மேலாளர் போன்ற பொறுப்புகளை ஏற்று தம் பணியில் வளர்ச்சி கண்டார்.

2007ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூலம் இந்தியாவில் இவரது பணி அனுபவம் தொடங்கியது. ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியுள்ள அவர், கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் இந்திய நிறுவனங்களில் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தோஹா ‘ஹப்’ துணைத் தலைவராகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார். விமானத் துறைத் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்றுள்ள அவர், இளம் நிபுணர்களுக்குப் பயிற்சி தரும் ஆசானாகவும் சேவையாற்றியுள்ளார்.

“வாடிக்கையாளர் அனுபவம், விமான நிலையச் செயல்பாடுகள் என விமானத் துறையின் தரைத்தள சேவைகளில் பலதரப்பட்ட அனுபவம் எனக்கு உண்டு. அதன் அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவனம் எனக்கு இந்தப் பணிக்கான அழைப்பை விடுத்தது. டாடா நிறுவனம் புதிய உத்வேகத்தில் என் தாத்தாவின் மண்ணான இந்தியாவின் பெயர்கொண்ட இந்த விமானச் சேவையை உருமாற்றும் பணியில் என்னையும் இணைத்துக்கொண்டதில் பெருமைப்படுகிறேன்,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ஜெயராஜ், 61.

இந்தியத் தனித்துவத்துடன் உலகத் தரம் வாய்ந்த விமானச் சேவையை வழங்கும் வேட்கையில் ‘விஹான்.ஏஐ’ எனும் ஐந்தாண்டு உருமாற்றப் பயணத்தை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது. விமானச் சேவையின் அடிப்படை அம்சங்களைச் சரிசெய்யும் ‘டேக்சி’ எனும் உருமாற்றப் பயணத்தின் முதல் கட்டம் முடிவடைந்துள்ளது.

உருமாற்றப் பயணத்தின் முக்கிய மைல்கற்களில் ஒன்று, ஜெயராஜ்ஜின் நியமனம். உன்னத நிலையை நோக்கிய தடத்தில் பல மைல்கற்களை அடையவும் விமான நிலையச் செயல்பாடுகளை மேல்நோக்கி உயர்த்தவும் ஜெயராஜ்ஜின் தலைமைத்துவம் அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது.

“நான் நீண்டகாலமாகவே அயல்நாடுகளில் பணியை மேற்கொண்டதால் சிங்கப்பூரை அதிகம் பிரிந்திருந்த ஏக்கத்தைக் கொண்டிருந்தேன். என் பால்ய நண்பர்களுடனும் பள்ளியில் படித்த நண்பர்களுடனும் அளவளாவி நேரம் செலவிட விரும்பி, ஆறு மாதத்திற்கு முன்னர் விருப்பப்பட்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். மனத்திற்குப் பிடித்தவாறு சிங்கப்பூரில் நேரம் செலவிட்டு அண்மையில் குடும்பத்தினருடன் தைப்பூசத்தைக் காண மலேசியாவின் ஈப்போவிற்குச் சென்றுவந்தேன்,” என்று கூறினார், ஒரு மகனுக்குத் தந்தையான ஜெயராஜ்.

“ஆனால், இப்போது இந்தப் பணிக்காக அழைக்கப்பட்டுள்ளேன். மனத்திற்குப் பிடித்த துறை என்பதால் மீண்டும் வேலைக்குச் செல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. ஓய்வுக்காலம் சிறிது காலமே நீடித்தது,” என்று சிரித்தவாறே சொன்னார் இவர்.

சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ்ந்துவரும் இவர், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையில் அதிக கவனம் செலுத்துகிறார். நெடுந்தொலைவு ஓடுவது உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் இவருக்கு நாட்டம் உண்டு.

இந்தியத் தலைநகர் புதுடெல்லி அருகே குர்கான் நகரில் திரு ஜெயராஜின் புதிய வேலை தொடங்குகிறது. சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே இனி அதிகம் பயணம் செய்வதை இவர் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!