தமிழ் மாணவர்களுக்கு உதவும் மின் அகராதிச் செயலி

மாணவர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட தொழில்நுட்பக் கருவிகளில் தமிழைப் புகுத்துவது, அவர்களிடம் தமிழைக் கொண்டுசேர்க்கும் மிகச் சிறந்த வழி எனும் நம்பிக்கையில் உருவாகி, தமிழ் மொழி விழாவையொட்டி வெளியீடு கண்டுள்ளது ‘அகரம்’ என்ற மின் அகராதிச் செயலி.

சீன, மலாய் மொழிகளில் மாணவர்கள் தேர்வுகளுக்குப் பயன்படுத்த கையடக்க அகராதி கருவி இருப்பதுபோல தமிழுக்கென்று ஒன்று இருந்தால் மாணவர்களுக்குப் பெரிதும் துணைபுரியும் எனும் நோக்கில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் இதனைக் கருத்துருவாக்கம் செய்து, வடிவமைத்த ‘காஸ்மிக் கன்சல்டன்சி’யைச் சேர்ந்த திரு சாகுல் ஹமீது.

குறிப்பாக, சிங்கப்பூர் சூழலில் பயன்படுத்தப்படும் 50,000 சொற்களைத் தேர்ந்தெடுத்து, அதற்கான இணை ஆங்கிலச் சொல், சரியான உச்சரிப்பு, அதன் இலக்கண குறிப்பு ஆகியவையும் இச்செயலியில் இடம்பெற்றுள்ளது இதன் தனித்துவம். புரிதலை எளிதாக்க சில சொற்களுக்குரிய படங்களும் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

தேடப்படும் சொல், ஒரு சொற்றொடரில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கு எடுத்துக்காட்டையும் இச்செயலி வழங்குகிறது.

‘அகரம்’ செயலிக்கான திட்ட மேலாளர் திரு சாகுல் ஹமீது வெளியீட்டு விழாவில் நன்றியுரை ஆற்றினார். படம்: டாக்கிங் பிக்சர்ஸ்

இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூவின் நிதி ஆதரவுடன் செயல்படும் இத்திட்டத்துக்கு, சிங்கப்பூரின் மூத்த தமிழறிஞர் பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன் மதியுரைஞராகச் செயல்பட்டார். அவரே இந்த மின் அகராதிச் செயலியை வெளியிட்டார்.

இதனைப் படைக்க சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில, மொழியியல் இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன், திரு எம். கார்மேகம், காலஞ்சென்ற திரு ஆ. பழனியப்பன், முனைவர் எஸ்.பி. ஜெயராஜதாஸ் பாண்டியன், முனைவர் தமிழரசி, தேசிய நூலக வாரி­ய தமிழ் மொழிச் சேவை­கள் பிரி­வுத் தலை­வர் து.அழ­கிய பாண்­டி­யன் எனப் பலரும் பங்காற்றியுள்ளனர்.

செயலியின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“மாணவர்கள் சொற்களை அதிகம் தெரிந்துகொண்டால் தைரியமாகப் பேசவும், தமிழ்ப் படைப்புகளைப் படைக்கவும் ஆர்வம் காட்டுவார்கள்.

“மேலும், பெரிய அகராதியை சுமந்துகொண்டு செல்லவும் அதில் சொற்களை சட்டென்று தேடிக் கண்டுபிடிக்க சில மாணவர்கள் சிரமப்படுவார்கள். இச்செயலி அச்சிரமத்தைக் குறைத்து, அதிகமான புதிய சொற்களைத் தெரிந்துகொள்ள உதவும்,” என்றார் தமிழாசிரியர் கல்யாணி.

“கட்டுரை எழுதும்போது பல சொற்களை ஆங்கிலத்திலேயே சிந்திப்போம். 247 எழுத்துகள் கொண்ட விரிவான மொழியில், இணைச் சொல்லை அகராதியில் கண்டுபிடிப்பது சிரமம். இச்செயலியில் ஆங்கில சொல்லை தட்டச்சு செய்தாலே இணைச் சொல் கிடைக்கிறது.

“அதன் உச்சரிப்பையும் அறிந்துகொள்ள முடிகிறது. இதனால், சொற்கள் குறித்த கவலையை விடுத்து, படைப்பாற்றலையும் கற்பனைத் திறனையும் வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்த முடியும்,” என்றார் கிரசெண்ட் பெண்கள் பள்ளி மாணவி ஐஸ்வர்யா.

தற்போது அகராதியாக உள்ள செயலியில், அடுத்தடுத்த கட்டங்களாக ‘தெசாரஸ்’ என்னும் சொற்களஞ்சியமும், ‘லெக்ஸின்’ எனும் நிகண்டையும் உள்ளடக்கி, ஒன்றிணைந்த செயலியாக மேம்படுத்த திட்டமுள்ளதாக திரு சாகுல் ஹமீது தெரிவித்தார்.

மேலும், தற்போது இலவச செயலியாக அறிமுகம் கண்டுள்ள இதனை ஒன்றிணைந்த கையடக்கக் கருவியாக வடிவமைத்து மாணவர்களிடம் கொண்டுசேர்ப்பதே எதிர்காலத் திட்டம் என்றார் அவர்.

தற்போது ஆப்பிள் சாதனங்களில் வெளியாகியுள்ள இச்செயலி, இன்னும் ஒரு வாரத்தில் ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் வெளியிடப்படும். இந்த அகராதியை www.minagaram.com எனும் இணையத்தளம் மூலமாகவும் பயன்படுத்தலாம்.

தற்போது எல்லாத் தரப்பினருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி, எதிர்காலத்தில் தனித்துவமான கருவியாக, மாணவர்கள் தேர்வுக்குப் பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகத்துடன் ஆலோசனை நடந்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!