தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறிவியல் சார்ந்த கூடுதல் அகழாய்வுகள் தேவை: ‘கீழடி’ அமர்நாத்

3 mins read
d1da27fe-b060-4791-9501-3206fb3a58b2
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை (வலம்) நேர்கண்டார் தமிழ் முரசின் துணைத் தலைமை உதவி ஆசிரியர் சிவகுமார். - படம்: ரவி சிங்காரம்

புகழ்பெற்ற இந்தியத் தொல்லியல் ஆய்வாளர் ‘கீழடி’ அமர்நாத் ராமகிருஷ்ணா, தமிழ் முரசுக்குச் சிறப்பு நேர்காணல் அளித்தார். தமிழ் முரசின் துணைத் தலைமை உதவி ஆசிரியர் சிவகுமார் அதை வழிநடத்தினார்.

கீழடியின் முக்கியத்துவம்

“தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வுகளில் கீழடி தனித்து நிற்பதற்குக் காரணம், கீழடி பற்றி நாங்கள் சலிக்காமல் பொதுமக்களுக்குக் கூறியதுதான்,” என்றார் திரு அமர்நாத்.

“தமிழகத் தொல்லியல் துறை ஆய்வு, 3.53 மீட்டர் ஆழத்தில் எடுக்கப்பட்ட கரிமம்வழி கீழடியின் காலம் சுமார் கி.மு. 600 எனக் கணித்தது. ஆனால், இக்காலம் இன்னமும் பின்னோக்கிச் செல்லக்கூடும் என கருதுகிறோம்,” என்று அவர் சொன்னார்.

“என் முதல் ஈராண்டு ஆய்வறிக்கையின்படி, கீழடியின் காலம் கி.மு.800 முதல் கி.பி.300 வரை இருக்கலாம் என்பதற்கான தடயங்களும் கிடைத்தன,” என அவர் குறிப்பிட்டார்.

கீழடியில் தான் மேற்கொண்ட முதல் இரு கட்ட ஆய்வுகளில் கிட்டத்தட்ட 4.50 மீட்டர் ஆழத்தில் தமிழி எழுத்துகள் கிடைத்தாலும், காலக்கணிப்பு செய்ய அங்கு கரிமம் கிடைக்கவில்லை என்று திரு அமர்நாத் சொன்னார்.
கீழடியில் தான் மேற்கொண்ட முதல் இரு கட்ட ஆய்வுகளில் கிட்டத்தட்ட 4.50 மீட்டர் ஆழத்தில் தமிழி எழுத்துகள் கிடைத்தாலும், காலக்கணிப்பு செய்ய அங்கு கரிமம் கிடைக்கவில்லை என்று திரு அமர்நாத் சொன்னார். - படம்: அமர்நாத் ராமகிருஷ்ணா

“மேலும், 3.53 மீட்டர் ஆழத்தில் கிடைத்த பானை ஓடுகளில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துகள் எளிய மக்களால் எழுதப்பட்டவை என்பதால் சுமார் கி.மு. 600 ஆண்டிலேயே தமிழர்களின் எழுத்தறிவு பரவலாக இருந்தது எனலாம்.

“மொழி தோன்றிய பிறகுதான் எழுத்து தோன்றும் என்பதால் தமிழ்மொழி இதனினும் தொன்மையானது,” என்றார் திரு அமர்நாத்.

அகழாய்வுகளில் கிடைத்த சில பொருள்கள்.
அகழாய்வுகளில் கிடைத்த சில பொருள்கள். - படம்: அமர்நாத் ராமகிருஷ்ணா
ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணனோடு அகழாய்வு கண்டுபிடிப்புகளைப் பற்றிக் கலந்துரையாடும் திரு அமர்நாத்.
ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணனோடு அகழாய்வு கண்டுபிடிப்புகளைப் பற்றிக் கலந்துரையாடும் திரு அமர்நாத். - படம்: அமர்நாத் ராமகிருஷ்ணா

கூடுதல் ஆய்வுகள் தேவை

கீழடித் தொல்லியல் மேட்டின் மொத்த பரப்பளவு 110 ஏக்கர் என்று குறிப்பிட்ட திரு அமர்நாத், இதுவரை தாம் செய்த அகழாய்வுகள் இரு விழுக்காட்டுப் பரப்பளவையே சார்ந்தவை எனத் தெரிவித்தார். மேலும், கீழடியில் செய்யப்பட்ட மற்ற கட்ட ஆய்வுகளும் 10 விழுக்காடு பரப்பளவுக்கு மேல் ஆய்வுசெய்ததற்கான வாய்ப்பில்லை என்றும் சொன்னார்.

“கீழடியில் குறைந்தபட்சம் 25 விழுக்காடு தோண்டினால்தான் இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கக்கூடும்,” என அவர் கூறினார்.

அகழாய்வு என்பதைக் குறுகியகாலத்தில் செய்யமுடியாது என்றும் வேகமாகத் தோண்டினால் முக்கியத் தரவுகள் பலவற்றையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் கடந்துபோக நேரிடும் என்றும் திரு அமர்நாத் சுட்டினார்.

“வைகை நதியோரமாக 293 இடங்களில் தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன. அவற்றில் உள்ள 100க்கும் மேற்பட்ட வாழ்விடப் பகுதிகளில் கீழடி மட்டும்தான் ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.

“மற்ற இடங்களும் நகரமயமாவதற்கு முன்பே அவற்றை விரைவாக ஆய்வுசெய்யவேண்டும்,” என்றார் திரு அமர்நாத்.

வைகை நதியோரமாக உள்ள 100க்கும் மேற்பட்ட வாழ்விடப் பகுதிகளை விரைவில் ஆய்வுசெய்யவேண்டும் எனக் கூறினார் திரு அமர்நாத்.
வைகை நதியோரமாக உள்ள 100க்கும் மேற்பட்ட வாழ்விடப் பகுதிகளை விரைவில் ஆய்வுசெய்யவேண்டும் எனக் கூறினார் திரு அமர்நாத். - படம்: கீழடி அமர்நாத்
கீழடி அகழாய்வுப் பணிகள்.
கீழடி அகழாய்வுப் பணிகள். - படம்: கீழடி அமர்நாத்

அகழாய்வுகளில் கிடைக்கும் பொருள்களைக் காட்சிப்படுத்தும் வகையில் அவை கிடைக்கப்பெறும் இடங்களிலேயே அருங்காட்சியகங்கள் அமைக்கப்படவேண்டும் என்றும் அவர் கருத்துரைத்தார்.

தென்கிழக்காசியத் தொடர்பு

ராஜேந்திர சோழன் காலத்திற்கு முன்பே தென்கிழக்காசியாவுடன் சங்ககாலத் தமிழ் மக்கள் தொடர்புகள் வைத்திருந்ததாகக் கூறிய திரு அமர்நாத், தகரம் போன்ற மூலப்பொருள்களை மலாக்கா பகுதியிலிருந்து தமிழர்கள் பெற்றதாகக் குறிப்பிட்டார்.

தமிழ்ப் பாசுரத்தோடு இடம்பெறும் தாய்லாந்து மன்னர் முடிசூட்டு விழா, ‘அங்கோர் வாட்’ கோயில், லாவோஸ் கோயில் போன்றவை தமிழர்களின் தென்கிழக்காசியத் தொடர்புகள் காலங்கடந்து தொடர்வதைக் குறிப்பதாகவும் அவர் கூறினார்.

“தெற்காசியாவில் கெடா போன்ற சில இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களில் அகழாய்வு செய்து தமிழகத் தொல்லியல் பொருள்களோடு ஒப்பிட்டால் எந்தக் காலகட்டத்தில் தமிழர்கள் தென்கிழக்காசியாவிற்கு வந்தார்கள் என முழுப் புரிதல் கிடைக்கும்,” என்று திரு அமர்நாத் சொன்னார்.

முழு நேர்காணலைத் தமிழ் முரசு செயலியிலும் ஃபேஸ்புக் தளத்திலும் (https://tinyurl.com/AmarnathInterview) காணலாம்.

குறிப்புச் சொற்கள்