தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருக்குறள் சாதனை

2 mins read
e4d3f545-86f9-4562-bc2a-1d5ed681d7c2
தயாரிக்‌கப்பட்ட பேச்சுப் போட்டியின் வெற்றியாளர்கள். - படம்: தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம்
multi-img1 of 3

திருக்குறளின் 133 அதிகாரங்களையும் கதை, கவிதை, பாடல் அல்லது ஆடலாக 133 படைப்பாளர்கள் மொத்தம் 133 நிமிடங்களுக்குள் காணொளியாகப் படைத்த சாதனை நிகழ்வு ஏப்ரல் 28, ஞாயிற்றுக்‌கிழமை, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.

தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பிள்ளைகள், பெற்றோர்கள், இளையர்கள், முதியோர் என வெவ்வேறு வயதுப் பிரிவுகளில் படைப்பாளர்கள் கலந்துகொண்டார்கள். மேலும், இந்த நிகழ்வு சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

தமிழ்மொழியைச் சரளமாகப் பேசுவதற்கு ஊக்குவிக்கவும் தன்னம்பிக்கையை வளர்க்கவும் தொடங்கப்பட்ட தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் பேச்சாளர் மன்றம், இவ்வாண்டு தமிழ்மொழி விழாவையொட்டி அனைத்துலகத் தமிழ் பேச்சுப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.

அன்றைய நிகழ்ச்சியில் உரையாற்றவிருந்த போட்டியாளர்கள், மூன்று நிலைகளைத் தாண்டி அந்த இறுதி மேடையை அடைந்தவர்கள் என்பதால் அனைவரும் வெற்றியாளர்கள்தான் என்று கூறினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் ஜோதி மாணிக்கவாசகம் கலந்துகொண்டார். தமிழ்மொழி மற்ற மொழிகளின் ஆணிவேர் என்று அவர் தம் சிறப்புரையில் கூறினார்.

மேலும், “தமிழ்மொழிக்குச் சொந்தக்காரர்களான நாம் கொடுத்து வைத்தவர்கள். நாம் அதைத் தொடர்ந்து படிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

‘தயாரிக்‌கப்பட்ட பேச்சுப் போட்டி’ அங்கத்தில் ஏழு உரைகளும் ‘அரங்கப் பேச்சுப் போட்டி’யில் எட்டு உரைகளும் ஆற்றப்பட்டன.

அரங்கப் பேச்சுப் போட்டியில் பேச்சாளர்கள் ‘தர்மம் தலைகாக்குமா?’ என்ற தலைப்பையொட்டி உரையாற்றினார்கள். இந்த அங்கத்தில் பேச்சாளர் கார்த்திக் சிதம்பரம் முதல் இடத்தை வென்றார்.

தயாரிக்‌கப்பட்ட பேச்சுப் போட்டியில் பேச்சாளர் வானதி பிரகாஷ் முதல் இடத்தைப் பிடித்தார். இவர் ‘இதெல்லாம் எங்க உருப்பட போகுது’ என்ற தலைப்பில் பேசினார்.

திருக்குறள் சாதனை அங்கத்தில் பங்கேற்ற சிலர், தங்களுடைய திருக்குறள் படைப்புகளைப் பார்வையாளர்களுக்காக நேரடியாகப் படைத்தனர்.

குறிப்புச் சொற்கள்