முதியோர் இல்லத்துக்குள் சேவையாற்றுவதற்காக முதன்முதலில் காலடி வைத்தபோது, எப்படி அந்த முதியவர்களை அணுகுவது என்று தயங்கி நின்றவர் திருவாட்டி விஜயா பொன்னுசாமி, 69.
ஆனால், இன்று இல்லவாசிகளுக்கு ஆதரவாக, ஆறுதலாக, ஒரு தாயாக அவர்களை அரவணைத்து அன்பு காட்டுகிறார் இவர்.
திருவாட்டி விஜயா 1985ஆம் ஆண்டு ‘ஏவா’ அமைப்பின் மூத்தோருக்கான சமூக இல்லத்தில் மேற்பார்வையாளர் பணியில் இணைந்து, தற்போது முதியோர் விவகாரங்களைக் கையாளும் மூத்த அதிகாரியாக உள்ளார்.
“மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றிய பிறகு முதியோர் இல்லத்தில் பணியாற்றுவது ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தது,” என்றார்.
பராமரிப்புச் சேவைகள் சார்ந்த நிபுணத்துவப் பயிற்சி இல்லாத நிலையிலும், மூத்தோரைப் பராமரிப்பதற்கான கடப்பாட்டைக் கொண்ட விஜயா, 1998ல் ‘ஏவா’ அமைப்பின் ஆதரவுடன் முதுமையியல் பிரிவில் பட்டயப் படிப்பு பயின்றார்.
“ஏன் இங்கு வந்தீர்கள், உங்களைப் பராமரிப்பதற்கு யாரும் இல்லையா? போன்ற கேள்விகளைத் தவிர்க்க வேண்டும் என ‘ஏவா’ நிர்வாகத்தினர் எனக்குக் கற்றுக் கொடுத்தனர்,” என்று விவரித்தார் விஜயா.
“இங்கு மற்ற முதியவர்களும் இருக்கிறார்கள்; மற்றவர்களைச் சாராமல் வாழ்வதற்கான சூழல் இங்கு உண்டு என்றெல்லாம் கிடைக்கும் நன்மைகள் பற்றிச் சொல்லியபடியே நான் இல்லவாசிகளுடன் பழக ஆரம்பித்தேன். இந்த இல்லம் தங்களுக்குச் சொர்க்கம் போன்றது என்று சொல்லும் மனநிலையை அவர்கள் பெறுவதற்கு நான் என்னால் முடிந்த அளவு பங்காற்றி வருகிறேன்,” என்று பகிர்ந்துகொண்டார் விஜயா.
எந்தப் பணியிலும் சவால்கள் இருக்கவே செய்யும். அவ்வகையில் இல்லவாசிகள் இறக்கும்போது அல்லது நோய் காரணமாக இல்லத்தை விட்டுப் போகும்போது அந்தத் தருணங்கள் தம்மைக் கண்ணீர் சிந்த வைக்கும் என்றார் திருவாட்டி விஜயா.
“உறவுகளின்றி இறக்கும் முதியவர்களுக்காக இறப்புச் சான்றிதழ் பெறுவது தொடங்கி அவர்கள் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இறுதிச் சடங்கை நிறைவேற்றுவது வரை நான் செய்வேன்,” என்றார் அவர்.
நீண்ட நேரத் தியானம், தன் மகளுடன் நேரம் செலவழித்தல், அயல்நாட்டில் வசிக்கும் சகோதர சகோதரிகளைச் சந்திக்கச் செல்லுதல் எனத் தம்மை இதுபோன்ற சோகமான காலகட்டங்களில் தாம் தேற்றிக்கொள்வது வழக்கம் என்று சொன்னார் விஜயா.
இவரின் மகள் எட்டு வயதிலிருந்தே மூத்தோர் இல்லவாசிகளுடன் தன் விடுமுறையை உற்சாகமாக உரையாடியும், விளையாடியும் கழித்து மகிழ்வார். தற்போது 48 வயதாகும் தன் மகளை இங்குள்ள முதியோர் இன்னும் சிறுபிள்ளையாகவே பாவித்து அன்புகாட்டுவர் என்றும் கூறினார்.
“ஒருசிலர் நேசமிகுதியால் என் பெயருக்குத் தங்களின் உயிலை எழுதி வைப்பதும் உண்டு. அதை நான் நிர்வாகத்திடம் கொடுத்துவிடுவேன். அந்த முதியவர்களின் அன்பைப் பெறுவதற்கு நான் பெரும்பேறு பெற்றிருக்கிறேன். அதுவே எனக்குப் போதும்”, என்று நெகிழ்ந்தவாறு கூறினார் விஜயா.
“அன்னைக்கு அனுதினமும் அன்பை வழங்க வேண்டும்; தந்தையிடம் நலம் விசாரிக்க வேண்டும்,” என்று விருப்பம் தெரிவித்த விஜயா, இந்தப் பராமரிப்பு பணியிலிருந்து ஓய்வுபெறுவதை நினைத்துப் பார்க்கத் தம்மால் முடியவில்லை என்றார்.


